‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

hqdefault sivaசில பாடல்கள் மட்டுமே காட்சிகளாக பார்க்க இன்னும் கூடுதல் அழகு பெறும். கே.வி. மகாதேவன் என்ற மேதை இதையமைத்த இந்தப் பாடல், காட்சியாக்கப்பட்ட விதம், அத்தகையதே.

தமிழின் மிகச் சிறந்த பொழுது போக்கு படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம் பெற்ற பாடல் இது. அநேகமாக இந்தப் பாடலில், இந்தப் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் நாகேஷை தவிர எல்லோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பாடல்கள் மட்டுமல்ல, சிறந்த திரைக்கதை. மிகச் சிறந்த நடிப்பு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியம். படத்தின் கலர் இன்னொரு கூடுதல் அழகு.

நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், நடிக்க கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இந்தப் படத்தை பலமுறை பார்த்தாலே போதும். முக பாவனைகள், வசன உச்சரிப்பு, வசனமில்லாத போது ரீ ஆக்ஷைன் இப்படி பல பரிமாணங்களில் மிரட்டி இருப்பார்கள்.

பாலையா, சிவாஜி, மனோரமா, நாகேஷ், பத்மினி, தங்கவேலு, டி.ஆர். ராமச்சந்திரன் என்று ஒவ்வொருவரும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள் என்பது சாதரண வாக்கியம்.

தன் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, திரைக்கதையை புரிந்து கொண்டு நடிப்பதுதான் சிறந்தது; என்பதையும் இந்தப் படத்தில் நடித்த கலைஞர்கள் நிரூபித்திருப்பார்கள். இந்தப் பாடல் காட்சியே அதற்கு சாட்சி.

மோகனாம்பாளின் நாட்டியத்தை பார்ப்பதற்கு சிக்கல் சண்முகசுந்தரம் குழுவைச் சேர்ந்தவர்கள், ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று எல்லோரும் ஆஜராகி இருப்பார்கள்.
தன் காதலன் சண்முகசுந்தரம் மறைந்திருந்து பார்க்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட மோகனாம்பாள் மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த உணர்வுகளோடு தன் பாடலுடன் கூடிய ஆடலை நிகழ்த்துவாள்.

மோகனாம்பாளின் ஒவ்வொரு அசைவிலும் அவள் உடல் மொழியிலும் தன் காதலன் தனக்காகவே வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட பூரிப்பும் கர்வமும் கலந்து இருக்கும். அந்த பாவங்களில் அழகும் நளினமும் கர்வமுடன் கூடிய காதலும் ஆஹா..

ஜனரஞ்சகமான ஆனால் கிளாசிக்கல் அசைவுகள், அட்டகாசமான ஸ்டைல்.
பத்மினி நாட்டியத்தின் நுட்பங்களை நன்கு தெரிந்தவர். ஆனாலும் அதை எளிமையாக்கி நாட்டிய நுணுக்கங்கள் தெரியாத எளிய ரசிகர்களையும் ரசிக்க வைத்தவர். இந்தப் பாடலில் அதை மிகச் சிறப்பாக செய்திருப்பார்.

“எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” என்று துவங்குதவற்கு முன்பு, முடியும் ‘ஜதி’ யின் போதே, இயக்குநர் ஏ.பி. நாகராஜன், சண்முகசுந்தரத்தை தனியாக தூணூக்குப் பின் நகர்த்தி ‘க்ளோசப்’பிற்கு தயார் செய்துவிடுவார். மீண்டும் “எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..” இப்போது சண்முகசுந்தரத்திற்கு க்ளோசப்.

‘இந்தப் பெண் என்னை நினைத்துத் தான் பாடுகிறாள். எனக்காகத் தான் ஆடுகிறாள். இந்தப் பேரழகியால் நான் காதலிக்கப் படுகிறேன்’ என்கிற பெருமிதம் பூரித்து வழிய.. சிவாஜி கணேசன் ஒரு உலக நடிகன் என்பதை நிரூபித்திருப்பார். ‘சண்முகா..’ என்று ஜாடையாக தன் பெயர் சொல்லும்போதும்.

ஒரு பெரிய சபையில் எல்லோருக்காகவும் நிகழ்த்தப்படுகிற தன் கலையை, யாருக்கும் தெரியாமல் அப்படியே தன் காதலனுக்கு சமர்ப்பணமாக்குகிற நுட்பம். அதுதான் இந்தப் பாடலின்அழகு.

மானாட.. மலராட.. மதியாட.. நதியாட.. என்ற வரியின் தொடர்ச்சியாக “எனை நாடி இதுவேளை துணையாக ஓடி வருவாய்..” என்ற வரியின்போது தன்னை மறந்து சிவாஜி, தன் முன் அமர்ந்திருக்கும் பாலையா தோள் மீது கை வைப்பார்.
பாலையா அந்த விரல்களை பார்த்தவுடனேயே சிவாஜி கணேசனின் முகத்தை பார்த்தது போன்ற அதிர்ச்சியை வெளிபடுத்துவார்.

தவில் வாசிப்பவருக்கு நாதஸ்வரம் வாசிப்பவரின் விரல்கள், அவரின் முகத்தை விட அதிக பரிச்சியம் அல்லவா? தவில் வாசிப்பவராக வரும் பாலையா, அதனால்தான் நாதஸ்வரம் வாசிப்பவராக வரும் சிவாஜி யின் விரல்களை பார்த்தவுடன் அப்படி திடுக்கிடுவார்.

பாலையா வை அறிமுகப் படுத்திய இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன், ‘ஹாலிவுட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்று பாலையா வை அழைந்தார் என்றால் சும்மாவா?

..இந்தப் பின்னணியோடு நீங்களும் பார்த்து மகிழ:

*

April 29 facebook ல் எழுதியது.

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு

அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது!

பக்தி படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

8 thoughts on “‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

  1. உண்மையிலேயே அதில் நடித்த அனைவருக்கும் “தில்லானா மோகனாம்பாள்” ஒரு மைல் கல்தான்.

  2. இத்தனை நடிகர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் பல இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள்.
    ஆனால் இதில் ஏபிஎன் போல் எவரும் இதுவரை இவர்களை இயக்கவில்லை. அந்த வகையில் ஏபிஎன் உச்சம்.
    இப்பாடல் காட்சி பிரமாதம்.

  3. இந்தப் பாடல்(படம்) பார்க்கும்போது ஏற்படுகிற பரவசத்தை அப்படியே எழுதியிருக்கீங்க.

  4. இந்த பாடலின் அழகை போலவே உங்கள் விளக்கமும் மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்!….சிவாஜியை சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ ஒரு நறுமண தோட்டத்தில் உலாவின அனுபவத்தை கொடுக்கும்.நடிப்பில் தான் சிவாஜிக்கு எத்துனை போட்டி! நகைச்சுவையில் நாகேஷுக்கு எத்துனை போட்டி! அருமையான படம்…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading