பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்

திராவிட இயக்கங்கள்தான் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்கிறார்களே?

சு. தமிழ்மணி, விழுப்புரம்.

திரவிட இயக்கங்கள் என்ற சொல்லாடலே பெரியார் மீது சேறு அடிக்க வேண்டும் என்ற பிரியத்தில் சுற்றி வளைத்து மூக்கை தொடுகிற முயற்சி.

உண்மையில் அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், பெரியாரை குறிப்பிட்டு விமர்சிக்கலாம். இல்லை நாங்கள் பெரியாரை சொல்லவில்லை என்றால், திமுக, அதிமுக என்று அந்த தேர்தல் கட்சிகளின் பெயர்களை சொல்லி விமர்சிக்கலாம். ஆனால், அவர்களுக்கோ பார்ப்பன ஆதரவுக்காக பெரியார் எதிர்ப்புதான் முக்கியம்.

அதனால்தான், இந்த திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் ஜெயலலிதாவையும் ஆதரிக்கிறார்கள்; ஜெயேந்திரனை கொலைவழக்கில் இருந்து தப்ப வைக்கும் திமுக அரசின் பார்ப்பன ஆதரவை கண்டிக்க மறுக்கிறார்கள்.

சரி, அவர்கள் திமுக, அதிமுகவேயே விமர்சிப்பதாகவே வைத்துக்கொள்வோம். அவர்களை விமர்சிப்பதற்குகூட இவர்களுக்கு யோக்கியதை இல்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு பின்பு துவங்கப்பட்ட கட்சிகளின துவக்கமே ஜாதிதான். அதை மறைப்பதற்குத்தான் போலியான தமிழ் உணர்வு.

தன் ஜாதிக்காரனிடம் ஜாதி உணர்வையும் அடுத்த ஜாதிக்காரனிடம் தமிழ் உணர்வையும் ஊட்டுவதுதான், இந்த திராவிட இயக்க எதிர்ப்பாளர்களின் அரசியல்.

திராவிட இயக்க எதிர்ப்பு என்ற பெயரில் இப்படி நேரடியான ஜாதி அரசியலை துவக்கி வைத்த பெருமை பா.ம.கவையே சேரும். ஒருவன் ஜாதி உணர்வோடே தமிழ் உணர்வாளனாக இருக்கலாம் என்கிற மோசமான அரசியல்தான் திராவிட இயக்க எதிர்ப்பு அல்லது திராவிட இயக்க மாற்று அரசியலாக இருக்கிறது.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஜாதி அரசியலை வளர்த்தெடுத்தாலும், தொண்டர்கள் கட்சியின் தலைமையை ஜாதி, மத உணர்வற்ற நிலையிலிருந்தே… தேர்ந்தெடுத்தார்கள், விரும்பினார்கள்.

தமிழ்நாட்டிலேயே  மிக சிறுபான்மையான மிக குறைந்த எண்ணிக்கை கொண்ட இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான்  லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் தொடர்ந்து தன் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., என்ன ஜாதி என்று அந்தக் கட்சிக்காரர்களுக்குத் தெரியாது.

ஆனால், இவர்களுக்கு பிறகு, ஆரம்பிக்கப்படட அனைத்துவிதமான அரசியல் கட்சிகள், திராவிட இயக்க எதிர்ப்பு தமிழ்த் தேசியவாதிகளின் துவக்கமே, ஜாதிதான்.

பெரியாரை, திராவிட இயக்கங்களை விமர்சிக்கிற இவர்கள்; இதுவரை, முற்போக்கான ஒரே ஒரு விசயத்தைக்கூட செய்ததில்லை.

மாறாக, தங்கள் சந்தர்ப்பவாதத்தை விமர்சிக்கிற முற்போக்காளர்களிடம் ரவுடித் தனத்தையும்,  ஆளும் வர்க்கம் மற்றும் தலித் விரோத ஆதிக்க ஜாதி தலைவர்களிடம் இணக்கமுமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் பெரிய வேடிக்கை, இவர்கள் பெரியாரை, திராவிட இயக்கத்தை விமர்சித்துவிட்டு, கடைசியல் விஜயகாந்திடம் பின்தங்கிவிட்டார்கள்

ஒரு படத்தின் பின்னணி இசை எந்த அளவிற்கு படத்திற்கு முக்கியத்துவம் தரும்?

அப்துல் ஜமால், கோவை.

படத்திற்கான பின்னணி இசை, படம் எடுத்து முடித்தவுடன் சேர்ப்பது மட்டுமல்ல; படம் எடுப்பதற்கு முன்பே பின்னணி இசையை முடிவு செய்யவேண்டும்.

இந்கக் காட்சிக்கு இந்த வசனம் முக்கியம்; இந்தக் காட்சிக்கு வசனத்தை விட இசைதான் முக்கியம்; என்று திரைக்கதையிலேயே எழுதியிருக்கவேண்டும். இசையமைப்பாளரை மனதில் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதைதான் மிக நேர்த்தியான திரைக்கதை.

சில உணர்வுகளை வார்த்தைகளைவிட இசை நுட்பமாக சொல்லும் என்கிற புரிதல் இயக்குநருக்கு இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் பின்னணி இசை சிறப்பாக அமையும்.

பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்; பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’.

பின்னணி இசையின் மூலமாக பல நுட்பமான தனிமனித உணர்வுகளை மட்டுமல்ல, அரசியல் ரீதியான செய்திகளையும் சொலல முடியும்; என்று உணர்த்தியப் படம் கமல்ஹாசனின் ‘ஹேராம்’. இந்த இரண்டு படத்திற்கும் இசை, இசைஞானி இளையராஜா.

சிறந்த படங்களை எடுத்த இயக்குநர் மகேந்திரனை குறித்தோ அவர் படங்களை குறித்தோ இதுவரை ஒரு இடத்தில் கூட நீங்கள் குறிப்பிடவில்லையே ஏன்?

பிரேமா, சென்னை.

திட்டமிட்ட காரணங்கள் ஒன்றுமில்லை.

ஒப்பீட்டளவில் இயக்குநர் மகேந்திரனின் படங்கள் பாலச்சந்தர், மணிரத்தினம் இவர்களின் படங்களை விட சிறந்த படங்கள்தான்.  உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, வடிவத்திலும்கூட. விடலைத்தனமான சேஷ்டைகள் செய்து கொண்டு இருந்த ரஜினிகாந்தை, சிறந்த நடிகராக காட்டியதும் இவர்தான்.

இவரின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தைதான் மணிரத்தினம் மவுனராகமாக மாற்றி எடுத்தார். அதேபோல், இவரின் உதிரிப்பூக்களில் வந்த, அதே நோய்வாய்ப்பட்ட மனைவி, பரிதாபத்திற்குரிய மாமனார், துள்ளும் இளமையுடன் கூடிய மச்சினச்சி அவளை இரண்டாம் தாரமாக்க துடிக்கும் அக்காள் கணவன் என்று வசந்தின் ‘ஆசை’ City based உதிரிப்பூக்களாக வந்தது.

முற்போக்காக எதையும் இயக்குநர் மகேந்திரன் சொல்லவில்லை என்பதைவிட, அவர் ஆபத்தான எதையும் சொல்லவில்லை என்பதே மரியாதைக்குரியதுதான்.

ஆனாலும், அவர் படங்களில் இழுத்துப் போர்த்தி, அதிர்ந்து ஆண்களோடு நேருக்கு நேர் பேசாத,எதையும் அமைதியாக பொறுத்துக் கொள்கிற ‘குடும்ப பாங்கான’ பெண்கள்தான் முன்மாதிரியான பெண்கள் என்ற கருத்தை அநேகமாக தனது எல்லா படங்களிலும் பதிவு செய்திருக்கிறார்.

அவரின் முதல் படமான முள்ளும் மலரும் ஷோபா, உதிரிப்பூக்கள் அஸ்வினி, ஜானி ஸ்ரீதேவி, நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி, அதேப் படத்தில் திருமணத்திற்கு பிறகு சுகாசினியின் மாற்றம், கண்ணுக்கு மை எழுது சுஜாதா, மெட்டி விஜயகுமாரி, நண்டு பட நாயகி இப்படி…

இவைகளுக்கு துணையாக விட்டோத்தியாக மற்றும் வெளிப்படையாக பேசுகிற பெண்களை துணைநாயகிகளகாத்தான் காட்டியிருக்கிறார்;  முள்ளும் மலரில் படாபட் ஜெயலட்சுமி, உதிரிப்பூக்களில் அஸ்வினியின் தக்கச்சி, கை கொடுக்கும் கையில் ராஜலட்சுமி.

இந்தக் கதாபாத்திரங்களை, திரைக்கதையில் கொஞ்சம் வேகம் கூட்டுவதற்கும், கலகலப்புக்காகவும் செய்திருக்கலாம்; அல்லது அமைதியான கதாநாயகிகள் மூலம் சொல்ல முடியாத செய்தியை, அவர் சார்பில் இந்த கதாபாத்திரங்கள் வழியாக சொல்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கலாம். மற்றபடி அவர் முன்னிலைப் படுத்தியது, அடக்க ஒடுக்கமான அதிர்ந்து பேசாத பெண்களைத்தான்.

இன்றைய இளம் இயக்குநர்கள் ‘தரமான’ படம் எடுப்பது குறித்து அதிகம் பேசுகிறார்கள். அதிகம் பேசாமல், உதிரி்ப்பூக்கள் போன்ற குறிப்பிடத்தக்க படங்களை எடுத்தவர் இயக்குநர் மகேந்திரன்.

பெண்களுக்கு திருமண உதவி திட்டம், தாலி, மிக்சி, கிரைண்டர் என்று தேர்தல் வாக்குறுதிகளாக திமுக, அதிமுக இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்திருக்கிறார்களே?

என்.டி. சாமுவேல், திருநெல்வேலி.

ஆண்டுக் கொண்டு இருக்கிறவர்கள், ஆள விரும்புகிறவர்கள் இப்படி பெண்களுக்கு எதிரான வரதட்சிணையை ஊக்குவிப்பது போல், வாக்குறுதிகளை தருவது ‘பெண்ணடிமைத்தனத்தை பேணிக் காப்போம்’ என்ற உறுதியை தருவதாகத்தான் இருக்கிறது.

உண்மையில் கிராமப்புற, எளிய பெண்களுக்கு; அவர்களை அதிக சிரமப்படுத்துகிற, பலவீனமாக்குகிற மாதவிலக்கு நாட்களில் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுவது சானிடரி நாப்கினும், சத்துணவும்தான்.

பெண்களுக்கு ஏற்படுகிற இயற்கையான மாத சுழற்சியின் போது சானிடரி நாப்கின் பயன்படுத்துகிற படித்த, வசதியான, சுகாதாரமான சுழலில், அலுவலக வேலையில் இருக்கிற பெண்களே அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

ஆனால், கிராமப்புற மற்றும் நகர் புறத்தில் கூலி வேலை செய்கிற பெண்கள், மாதவிடாயின் போது சுகாதாரமான பராமரிப்பும், சத்துணவும், குறைந்த அளவில்கூட ஓய்வும் இல்லாமல், வெயிலும், மழையிலும் விவசாய வேலைகளிலும், சாலை பணிகளிலும் அவர்கள் படுகிற துயரம், நினைத்தாலே கண்ணீர் வர வைத்துவிடும்.

இது ஒரு அந்தரங்க பிரச்சினை என்பதால் வெட்ட வெளியில்  வேலை செய்கிற இடத்தில் கழிவரை வசதியோ, மறைவிடமோ இல்லததால், அதை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல், அவர்கள் படுகிற அவஸ்தை சொல்லி மாளாது.

சமீபத்திய ஒரு ஆய்வு, ‘இந்தியாவில் 12 சதவிதப் பெண்கள் தான் மாதவிடாயின் போது நாப்கின் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 88 சதவிகிதம் பெண்கள் துணி, சாம்பல், தவுடு, உமி போன்றவற்றைப் பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இனப்பெருக்க பாதையில் நோய் தொற்றும் அபாயம் மிக அதிக அளவில் உள்ளது.

சாம்பல், தவுடு, உமி போன்ற சுகாதாரமற்ற முறைகளை பயன்படுத்துவதால், 12 முதல் 18 வயதுள்ள சிறுமிகள் ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஒரு வருடத்தில் 50 நாட்கள் பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் சுகாதரமற்ற சூழ்நிலைகளின் காரணமாக 23 சதவிகித பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.’என்று கண் கலங்க வைக்கிறது அந்த ஆய்வு.

“மாதவிடாய் நேரத்தில் பெண்கள் மிகவும் Hygienic ஆக இருக்க வேண்டும். 2 தடவைக்கு மேல் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை நாப்கின் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறுநீர் பாதைக்குள் பாக்டீரியா நுழைவதும், கருப்பை பாதிப்பும் ஏற்படக்கூடும்“ என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால், நாம் நாட்டின் 88 சதவீத பெண்களுக்கு நாப்கின் வாங்குவதற்குகூட பணம் இல்லை. பணம் இருந்தும் வசதியான சில கிராமப்புற் பெண்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.

உண்மையில் பெண்களின் நலனில், சமூக நலனில் அக்கறை உள்ள அரசு; பெண்களின் அடிமையின் அடையாளமான தாலியை வழங்காது. ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் வகையில் ‘சானிடரி நாப்கின்’ தான் வழங்கும்.

இன்று புதிய இளம் இயக்குநர்கள் சினிமாவில் தரமான படங்களை தந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் ரஜினி, விஜய் போன்றவர்களின் படங்கள் அவைகளை காலி செய்துவிடுகிறதே?

-ssk, சென்னை-10

ரஜினி, விஜய் இவர்களைவிட இந்த சினிமாவை திருத்த வந்திருக்கிற இந்த சீர்திருத்த இளம் இயக்குநர்களை நினைச்சாதான் நமக்கு அடிவயித்த கலக்குது.

இவுங்க சினிமா மொழியை பத்தி சிலாகிச்சி பேசுறாங்க… அதெல்லாம் நல்லதான் இருக்கு. ஆனால், அவுங்களோட சொந்தக் கருத்து இருக்கு பாருங்க…  பார்ப்பனிய இந்துக் கண்ணோட்டமும் அனைத்து விதமான ஆதிக்கத்தையும் ஆதரிக்கிற பிற்போக்கு நிறைந்த பயங்கரவாதமா இருக்கு.

இவர்களுக்கும், ‘நவீன பாணி சினிமா’ என்ற பெயரில் இஸ்லாமியர் எதிர்ப்பு படங்களை எடுத்த மணிரத்தினத்திற்கும்; ஒரு சின்ன வித்தியாசம்தான்;

ஒரு படத்தில் வடிவேலுவைப் பாத்து மனோபாலா சொல்லுவாரே:  ‘அவன் பயங்கர கருப்பா இருப்பான். நீ கருப்பா பயங்கரமா இருக்கே’ என்று, அது போன்ற வித்தியாசம்தான்.

ஆள் கடத்தல், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிற போலிஸ்காரர்கள் செய்கிற கொலைகளை நியாயப்படுத்தி, அவர்களை தியாகிகளை போல் காட்டுகிற கவுதம் மேனன், மிஷ்கின் – இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுகிற ராதாமோகன், இவர்களின் படங்களைவிட ரஜினி படமும், விஜய் படமும் எவ்வளவோ பரவாயில்லை.

விட்டா, இந்த சீ்ர்திருத்த செம்மல்கள், இலங்கை ராணுவத்தின் கொலைவெறியைக்கூட நியாப்படுத்தி படம் எடுத்தாலும் எடுப்பார்கள்.

ஆமாம், ரீட்டமேரியையும், வீரப்பனுககு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், மலைவாழ் பெண்களையும் இன்னும் தாழ்த்தப்பட்ட மிக எளிய பெண்களையும் வன்புணர்ச்சி செய்து கொலையும் ஆள் கடத்தலும் செய்த போலிஸ்காரர்களை, தியாகிகளாக காட்டுகிற இவர்கள், ராஜபக்சே ராணுவத்தின் கொலைவெறியை நியாயப்படு்த்தி படம் எடுப்பதற்கு எல்லாத் தகுதிகளும் நிறைந்தவர்கள்.

இவர்கள் படங்களோடு ஒப்பிடும்போது, ‘சரோஜா“ படத்தை ‘புரட்சிகர’ படம் என்றே சொல்லலாம்; அந்தப் படம், பொண்ண கடத்துனது பூரா போலிஸ் கும்பல்தான் என்று காட்டியது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஏப்ரல் மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

http://ebook.thangamonline.com/apr2011/

9 thoughts on “பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்

  1. திரைப்படத்துறையில் வெகு மக்களாகிய உழக்கும் மக்களின் நிலையிலிருந்து சிந்திக்கும், பகுத்தறிவோடு எதையும் அணுகும் இயக்குனர்கள் மிகவும் அரிதாகி விட்டார்கள் என்று எண்ணுகிறேன். இல்லேண்ணா இந்த பாலச்சந்தன், மணிரெத்னம் போன்ற ஜென்மங்களை ஒரு உயர்ந்த நிலையிலேயே தூக்கி வைத்துப் போற்றுவார்களா இந்தத் திரைத் துறையினர்? ஏன் இப்படி சரியான விடயத்திலிருந்து விலகியே இருக்கிறார்கள்? நம் மக்கள் சீரழிந்ததற்கு முதல் காரணமான இந்த கேடுகெட்ட அசிங்கமான பொறுக்கிக் கடவுள்களை கண்மூடித்தனமாக நம்பும் கடவுள் நம்பிக்கை தானா இவர்களையும் இப்படிக் கெடுத்தது?
    இருபெரும் அரசியல் இயக்கங்களும் தன் முற்போக்கான கொள்கைகளை ஆழக்குழி வெட்டிப் புதைத்து ஆண்டுகள் பலவாகிறது. அந்த இயக்கத்தின் தலைவர்களுக்கே அதன் கொள்கைகள் தெரியாது இப்போதெல்லாம்! பிழைப்புக்கும், திருடுவதற்கு மட்டுமே இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
    மக்களை நல்வழிப் படுத்தணும்னு எந்தத் தலைமை எண்ணுகிறது? அப்படி, மக்களை சரியான பாதையில் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினால் முதலில் இந்த அரசு செய்ய வேண்டியது தமிழ் நாட்டில் உள்ள கோயில்களையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, அதன் சொத்துக்களை அரசுடைமையாக்கி விட்டு, அனைத்துக் கடவுள் வழிபாட்டுக்கும் நூறு விழுக்காடு தடை விதிக்க வேண்டும். பகுத்தறிவு பரப்புரையை தீவிரமாகச் செய்துவிட்டு, கடவுள் என்ற மூடத்தனத்திலிருந்து இந்த மக்களை முதலில் வெளியே கொண்டு வரவேண்டும். இதை நம் மக்களுக்குச் செய்தாலே பெரும்பகுதியானவர்கள் மனிதத் தன்மையுடன் கூடிய மக்களாகி விடுவர், மனிதத் தன்மையுடன் சிந்தித்தாலே பெருமளவு குற்றங்களிலிருந்து மக்கள் விடுபட்டு விடுவர். தன்மானம் பெறுவர், நேர்மையுடன் சிந்திப்பர், ஆம்.. கடவுள் நம்பிக்கை இந்த மக்களை விட்டுப் போகும் போது மட்டும்தான் இந்த மக்கள் சரியான வாழ்க்கையை வாழத் துவங்குவர், பின்பு தானாகவே பொதுவுடமைச் சமூகம் உருவாகி விடும். இந்தக் கடவுள் நம்பிக்கையை இப்படியே தொடர விட்டுவிட்டு நம் மக்களைத் திருத்தச் செய்யும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீருக்கு ஒப்பானதே! இலவசங்களும் தானாகவே துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடிடும். இதெல்லாம் நடக்குற காரியமாப்பா.. தண்ணியக் கடஞ்சு வெண்ண எடுக்க முடியுமாப்பா.. ன்னு முனகுவது கேட்கிறது..ம்ம்ம்…!
    காசிமேடு மன்னாரு.

  2. இந்த சீ்ர்திருத்த செம்மல்கள், இலங்கை ராணுவத்தின் கொலைவெறியைக்கூட நியாப்படுத்தி படம் எடுத்தாலும் எடுப்பார்கள்.-,இந்நேரம் எடுக்காமல் இருப்பார்களா? எடுத்து இருப்பார்கள். சின்மா பார்க்காததால் எனக்கு தெரியவில்லை நீங்கள் பார்த்து சொல்லுங்கள்

  3. பாலச்சந்தன் போன்ற ஜென்மங்களை .////

    மரியாதை தெரியாதவரெல்லாம் அடுத்தவர குற்றம் சொல்ல கிளம்பிட்டாராக்கும்.

  4. Dear KASIMEDU MANNARU!! . i am Atchutharaj, put up in chennai VANAGARAM. my mobile no is 9840702785. may i know your original name and contact number. Because your thoughts are most wanted. i wish to talk with you personaly.

    SORRY FOR MY ENGLISH REPLY. BECAUSE I DON’T KNOW HOW TO REPLY IN TAMIL.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading