‘கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free

medical
‘மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு பிறகு மக்களுக்கு சேவை செய்வது’ இதுவே மருத்துவத்தின் அடிப்படை.

ஒருவர், மருத்துப் படிப்பை படிப்பதற்கு அவருக்கு மனித உடல் தேவை. அந்த உடலை டாடா, பிர்லா, அம்பானி பரம்பரையோ அல்லது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களோ அவ்வளவு ஏன் தனியார் மருத்துக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த மருத்துவக் கல்லூரியின் முதலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தங்கள் உடலை பரிசோதனைக்கு தருவதில்லை. செத்தப் பிறகும் கூட கிடைக்காது.

மருத்துவர்களே கூட அதற்குத் தயார் இல்லை.

குறிப்பாக நோயாளிகளையும் நோய்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தான் அதை கற்றுக் கொள்ள முடியும்..

வசதியானவர்கள் இதுபோன்ற கத்துக்குட்டி மருத்துவர்களிடம் ஒருபோதும் வரமாட்டார்கள். எழை, எளிய மக்களே மருத்துவர்களின் பரிசோதனைக் களம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் OP யிலும், உள் சிகிச்சைகளிலும் எளிய மக்களே பரிசோதனை எலிகள்.

இப்படியாக எளிய மக்களின் உடல்களின் மீது மருத்துவம் படித்துவிட்டு வருகிற மருத்துவர்கள். பிறகு தங்களின் ‘சேவை’களை யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே தான் செய்கிறார்கள். மருத்துவத்தின் ‘தரம்’ மனிதர்களின் பொருளாதார ‘தரத்தை’ வைத்துதான் முடிவாகிறது.

அரசு மருத்துவமனையில்  பணி புரிகிற  மூத்த மருத்துவர், நோயாளிகளை நிமிர்ந்து கூட பார்க்காமல் மருந்து எழுதி கொடுத்து அனுப்பி விடுவார். நோயாளிகளின் சந்தேகங்ளுக்குக் கூட பதில் வராது. stethoscope அது தீண்டப்படாமல் டேபிளில் அநாதையாக கிடக்கும்.

அவரே மாலை நேரத்தில்,  பிரபல தனியார் மருத்துவமனையிலோ அல்லது தனது கிளினிக்கிலோ, நோயாளிகளிடம் கருணையும் அன்பும் வழிய வழிய பேசுவார்.  குடும்ப உறுப்பினர்களைக் குறித்து நலம் விசாரிப்பார். stethoscope வைத்து சோதிப்பது மட்டுமல்ல, BP பரிசோதனையும் நடக்கும்.

இன்றைய நிலையில் சாதாரண காய்ச்சல், இருமல் என்றாலே மிக சாதாரணமாக 300 ரூபாயை தாண்டி விடுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கும் காய்ச்சலும் இருமலும் தொற்றிக் கொள்ளும். எதிர்பாராத இந்த செலவை ஈடுகட்ட முடியாமல் திணறுகிறார்கள் குறைந்த வருமானம் உள்ள நடுத்ததர தொழிலாளர்கள் குடும்பமும்  கூலி வேலை செய்பவர்களும்.

இதற்கே இப்படி என்றால்..? பிரச்சினைகள் பெரியதானால் அவர்களின் கதி அதோ கதி தான்.

இது போன்ற எளியவர்களிடமே பல மருத்துவர்கள் சந்தையில் மாடு வாங்குபவர்களைபோல் கையில் துண்டுப் போட்டு ரகசியமாக கூட வியாபாரம் பேசுவதில்லை; பகிரங்கமாக பேசுகிறார்கள். மாட்டு வியாபாரிகளுக்கு இருக்கிற கூச்சம் கூட மருத்துவர்களிடம் இல்லை.

‘இவ்வளவு தான்.. இஷ்டமிருந்தா பாருங்க இல்ல கவர்மெண்ட ஆஸ்பிட்டலுக்கு போங்க..’ என்று அதிகாரத்தோடு விரட்டுகிறார்கள்.

தன்னை அதிக விலையுள்ளவர்களாக காட்டிக் கொள்வதற்கு அவர்கள் செய்கிற விளம்பர யுக்தி, மகா மட்டரகமானது. பத்திரிகைகளில் தங்களைப் பற்றி செய்திகள் வரவைப்பதற்காக நடிகர், நடிகைகளைப்போல் PRO வைத்து செயல்படுகிற டாக்டர்களே அதிகம் இருக்கிறார்கள்.

ஊடகக்காரர்களோடு அவர்கள் பழகுகிற விதமே பத்திரிகைகாரர்களுடன் நடிகர் நடிகைகள் பழகுவதைப்போல் தான் இருக்கும்.

‘மருத்துவம் ஒரு சேவை’ என்று அழகாக வசனம் பேசுவார்கள். ஆனால், அவர்கள் அதை ஒரு தொழிலாகக் கூட செய்வதில்லை. வியாபாரமாக தான் செய்கிறார்கள்.

ஆமாம். நிறைய முதலீடு செய்து மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு அதற்கு கூட்டம் சேர்ப்பதற்கு அவர்கள் படுகிறபாடு, சினிமா தியேட்டர் அதிபர்கள் தோற்றுப் போனார்கள்.

குழந்தையின்மை அதாவது ‘மலடு’ நீக்கும் மருத்துவர்கள் கூட கவர்ச்சியாக ‘செக்ஸ்’ மருத்துவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு ஊடகங்களின் துணையோடு சில்லரை சேர்க்கிறார்கள்.

சேலம் சிவராஜ் என்ன செய்கிறாரோ அதையே தான் ஆங்கில மருத்தவம் படித்த பல டாக்டர்களும் ‘அழகாக’ செய்கிறார்கள். இவர்கள் சேலம் சிவராஜின் ஹைடெக் வடிவம். அதனால் தான் ஷேர் மார்க்கெட் கட்டிடம் போல் பிரம்மாண்ட மருத்துவனை கட்ட முடிகிறது.

குழந்தையின்மை ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல இன்னும் சரியாக சொன்னால் அது பிரச்சினையே அல்ல; அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பது பெண்களுக்கு எதிரான சமூக அமைப்பே.

சமூகத்தின் இந்த சாபக்கேடை தனக்கான வர்த்தகமாக மாற்றிக் கொண்டார்கள் மருத்துவர்கள். குழந்தையின்மை என்பதை பெரிய அவமானகரமானப் பிரச்சினையாக இன்னும் பெரிதுப் படுத்தியதில் மலட்டுத்தன்மையைப் போக்கும் மகப்பேறு மருத்துவத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.

மிக வறுமையான குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தையில்லை என்றால் அதற்கு தீர்வு காண்பதற்கு வாய்ப்பே இல்லை, இந்த மருத்துவத்தில்.
பிரச்சினை மருத்துவமல்ல, அந்த மருத்துவம் எட்டாக்கனியானதற்குக் காரணம் பணம் தான். அந்தப் பெண்ணுக்குத் தீர்வு தற்கொலை தான்.

ஆம், இந்த நவீன மருத்துவத்தில் குழந்தையின்மைக்கு தீர்வு கண்ட பெண்களின் எண்ணிக்கையை விட தற்கொலை மற்றும் கணவன் வீட்டால் விரட்டப்பட்ட பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.
இதன் இன்னொரு மிக மோசமான வடிவம் தான் எளிய பெண்களுக்கு எதிரான வாடகைத் தாய் முறை. இது முழுக்க முழுக்க பணம் பண்ணுவதற்கான ஒரே திட்டம் தான்.

இதுபோலவே தான் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை. இந்த முறையும் வறுமையில் இருப்பவர்களின் உறுப்புகளைக் கழட்டி வசதியானவர்களுக்குப் பொருத்துவது. பல விவசாயிகளின் நெசவாளர்களின் கிட்னி இப்படி தான் காணாமல் போனது.

இந்தியாவின் தலைநகரம் டெல்லி. வர்த்தகத்திற்கான தலைநகரம் மும்பை. மருத்துவத்திற்கான தலைநகரம் சென்னை.
இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தான்.

‘உறுப்பு வாங்கலியோ உறுப்பு.. கிட்னி, லிவர், இதயம் வேணுமா.. அணுகவும் சென்னையை..’
இதுவும் அதுவே தான். அதாங்க வசதியானவர்களுகளிடம் பணம் வாங்கிக் கொண்டு…

அதற்கு சாட்சி,
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான உறுப்புகள், அரசு மருத்துவமனையிலிருந்து மிகப் பெரிய தனியார் மருத்துவ மனைகளுக்குத் தான் போகிறதோ ஒழிய ஒரு போதும் தனியார் மருத்துவ மனைகளிலிருந்து அரசு மருத்துவ மனைகளுக்கு வருவதே இல்லை என்பதே.

மருத்துவம் இப்படி மிகப் பெரிய வர்த்தகமாக மாறியதற்கு அடையாளம், நட்சத்திர ஓட்டல்களுக்கு சவால் விடும் மருத்துவ மனைகளே. இன்று நட்சத்திர ஓட்டல் நட்சத்திர மருத்துவமனை இரண்டும் தான் மிக நவீனமான பந்தாவான வர்த்தகம்.

மருத்துவம் வியாபாரமாக ஏன் மாறியது?
மருத்துவக் கல்வியே வியாபாரமாக இருக்கிறது.
கல்வி ஏன் வியாபாரமானது?
அது தனியார் துறைக்கு தாரை வார்க்கப்பட்டது.

ஒரு மருத்துவர் முதலீடு செய்து மருத்துவமனையை கட்டுவதற்கு முன் தன் பெரிய முதலீட்டை தனது முதலாமாண்டு மருத்துவக் கல்வியின் போதே தொடங்கி விடுகிறார். ஆம், பல லட்சங்களைத் தாண்டி கோடிகளில் வந்து நிற்கிறது மருத்துவக் கல்வி.
எம்.டி படிப்பெல்லாம் பல கோடிகளுக்குப் போவதாக செய்தி.

‘அந்தக் காலத்தில டாக்டர்கள் சேவை மனப்பான்மையோடு இருந்தார்கள். நோயாளிகளை கருணையோடு அணுகினார்கள். பல மருத்துவர்கள் பணம் இல்லாதவர்களுக்கு இலவசம் வைத்தியம் பார்த்தார்கள். ஆனால் இப்போது அப்படி பார்ப்பது அரிதாக இருக்கிறது’ என்கிற பழம்பெருமைகளை நாம் சகஜமாக கேட்க முடிகிறது அல்லவா?

அந்தக் காலம் என்பது ஏதோ மந்திரங்கள் நிகழந்த காலமல்ல, அப்போது மருத்துவக் கல்லூரிகளை அரசு மட்டுமே நடத்தியக் காலம்.
அதனால் அந்தக் காலத்து மருத்துவர்கள் மிகப் பெரும்பாலும் வர்த்தகத்தைத் தாண்டியவர்களாக இருந்தார்கள்.

இந்தக் காலம் கார் கம்பெனி நடத்துபவர்கள், சாராயக் கடை நடத்தியவர்கள், வட்டிக் கடை நடத்துபவர்கள் மருத்துவக் கல்லூரிகள் நடத்துகிற காலம்.
சாராயக் கடைகளையும் வட்டிக் கடைகளையும் எதற்காக நடத்தினார்களோ அதற்காகவே தான் அவர்கள் மருத்துவக் கல்வியையும் நடத்துகிறார்கள்.
அவற்றை விட கல்லூரிகள் நடத்துவது அதிகம் லாபம் தருவது மட்டமல்ல, சமூகத்தில் மரியாதையும் கிடைக்கிறது.
ஆக.
‘குழந்தை வேணுமா.. குழந்தை. ஒரே பிரசவத்துல நாலு குழந்தை போதுமா? இன்னும் ரெண்டு வேணுமா?.’

‘உறுப்பு வேணுமா? உறுப்பு..  கண்.. கிட்னி.. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free’
‘வாங்க … ஓடி வாங்க .. போனா கெடைக்காது..’

போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை

சென்னையில் ஒரு நாள்

இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்

கையில் கத்தியுடன் வருவது வழிப்பறிக்காறர்கள் மட்டுமல்ல; டாக்டர்களும்கூடத்தான்

..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to ‘கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free

 1. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  பலரின் மனக் குமறல்களை வார்த்தைகளில் வார்த்தெடுத்துவிட்டீர்கள் திரு.மதிமாறன்.
  நன்றி.

  இந்நிலையில் ஒரு விசயத்தை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
  ‘அந்தக் காலத்தில டாக்டர்கள் சேவை மனப்பான்மையோடு இருந்தார்கள். நோயாளிகளை கருணையோடு அணுகினார்கள். பல மருத்துவர்கள் பணம் இல்லாதவர்களுக்கு இலவசம் வைத்தியம் பார்த்தார்கள். ஆனால் இப்போது அப்படி பார்ப்பது அரிதாக இருக்கிறது’ என்கிற பழம்பெருமைகளை நாம் சகஜமாக கேட்க முடிகிறது அல்லவா?,,,என்று ஆதங்கப்பட்டிருக்கிறீர்கள்.

  உண்மைதான்.

  ஆனால் அப்போதைய அந்த மனிதாபிமானம் நிறைந்த எளிய மருத்துவர்களை நீங்கள் பாராட்டி இருக்கிறீர்களா திரு.மதிமாறன்?

  அப்பொழுதும் சாதியை அடையாளப்படுத்தி அவர்களிடம் இருந்த ஏதேனும் ஒரு குறையை பெரிதுபடுத்தி விமர்சிதிருப்பீர்கள்.

  அதாலால் இன்று நீங்களே பாராட்டவேண்டும் என நினைத்தாலும் அப்படி ஒரு மருத்துவரை காண முடியாத நிலை உருவாகிஉள்ளது.

  சம்பந்தப்பட்டவர்கள் நமது பாராட்டை எதிர்பார்த்து சேவை செய்யவில்லை என்றாலும் அவர்களை பாராட்டி இருந்தால் சிலருக்கேனும் ஒரு முன் மாதிரியாக அறியப்பட்டிருபார்கள் அல்லவா?

  அதனால் தான் சொல்கிறேன் தாங்கள் எதிர்க்கும் சாதியில் இருக்கும் சிலரின் பல செயல்களை சாடுவதுடன் சில நல்ல குணங்களையோ செயல்களையோ பாராட்டுங்கள் திரு.மதிமாறன்.

  அது பலரையும் மாற்றும் வல்லமை கொண்டது.

  எனது பால்ய வயதிலிருந்து அறிமுகமான மருத்துவ தம்பதியினர் சொந்தமாக மருத்துவமனை வைத்திருந்தும் இன்றிருக்கும் வணிக நிலைக்குள் தமது மகனை விட விருப்பமில்லாமல் அவரை கணினி துறைக்கு அனுப்பிவிட்டார்கள்.அவருடன் நான் பலவாறு விவாதித்தாலும் நடந்துகொண்டிருக்கும் ஒரு தவறை தடுக்க இயலாத பொழுதும் அதை தொடரும் ஒரு வாய்பாக தானோ தனது மகனோ இருக்கவேண்டாமென்ற அவரது வாதத்தை ஏற்றுகொண்டேன்.

  நல்லதொரு இடுகைக்கு நன்றி திரு.மதிமாறன்.

 2. வே.மதிமாறன் சொல்கிறார்:

  அரசு மருத்துவமனையில் பணி புரிகிற மூத்த மருத்துவர், நோயாளிகளை நிமிர்ந்து கூட பார்க்காமல் மருந்து எழுதி கொடுத்து அனுப்பி விடுவார். நோயாளிகளின் சந்தேகங்ளுக்குக் கூட பதில் வராது. stethoscope அது தீண்டப்படாமல் டேபிளில் அநாதையாக கிடக்கும்.

  அவரே மாலை நேரத்தில், பிரபல தனியார் மருத்துவமனையிலோ அல்லது தனது கிளினிக்கிலோ, நோயாளிகளிடம் கருணையும் அன்பும் வழிய வழிய பேசுவார். குடும்ப உறுப்பினர்களைக் குறித்து நலம் விசாரிப்பார். stethoscope வைத்து சோதிப்பது மட்டுமல்ல, BP பரிசோதனையும் நடக்கும்.

 3. வே.மதிமாறன் சொல்கிறார்:

  இன்றைய நிலையில் சாதாரண காய்ச்சல், இருமல் என்றாலே மிக சாதாரணமாக 300 ரூபாயை தாண்டி விடுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கும் காய்ச்சலும் இருமலும் தொற்றிக் கொள்ளும். எதிர்பாராத இந்த செலவை ஈடுகட்ட முடியாமல் திணறுகிறார்கள் குறைந்த வருமானம் உள்ள நடுத்ததர தொழிலாளர்கள் குடும்பமும் கூலி வேலை செய்பவர்களும்.

  இதற்கே இப்படி என்றால்..? பிரச்சினைகள் பெரியதானால் அவர்களின் கதி அதோ கதி தான்.

 4. ஆ.தி.கண்ணப்பன் சொல்கிறார்:

  இயற்கை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லை

 5. Pingback: ஒண்ணுமே புரியலைங்க டாக்டர்.. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s