மணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad! – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்ப்பும்

Nagaraja Cholan MA MLA

மிழ் இன உணர்வாளர் நடிகர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளியாகிறது. அதையாவது நீங்கள் ஆதரிப்பீர்களா? என்று சலிப்போடு சிலத் தோழர்கள் கேட்கிறார்கள்.

இரண்டாம் பாகம் தமிழ் உணர்வு படமா என்பதை பார்ப்பதற்கு முன், அவருடைய முதல் பாகமும் முந்தைய படங்களும் என்ன உணர்வில் இருக்கிறது என்று பார்க்க வேண்டியது கட்டாயமல்லவா?

இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘இந்தப் படம் ஓடினால்தான் தனக்கு வாழ்க்கை’ என்ற நிலையிலிருந்து தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத வடிவத்தில், தன் வாழ்க்கையை பணயம் வைத்து எளிய மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையை,  தியாக உள்ளத்தை, போர்குணத்தை உயிர்ப்போடு தனது ‘வழக்கு எண் 18/9’ படத்தில் காட்டியிருந்தார்.

சங்ககிரி ராஜ்குமார், தனது முதல் படத்திலேயே பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக தன் வீட்டை விற்று ‘வெங்காயம்’ என்று படம் எடுத்தார்.

இயக்குநர் மணிவண்ணன் 49 படங்களை இயக்கியிருக்கிறார். இந்த 49 படங்களும் மணிவண்ணன் அடிக்கடி மேடையில் உச்சரிக்கிற மார்க்சிய அரசியல், மாவோ கண்ணோட்டம், பிரபாகரனின் போர் தந்திரம், தமிழர் அரசியல், தமிழர் துயரம், தமிழின் சிறப்பு, ஈழத் தமிழர் துயரம் என்ற உள்ளடக்த்தோடு எடுக்கவில்லை என்பதுகூட பிரச்சினையில்லை;

மாறாக பெண்களுக்கு எதிராக, எளிய மக்களுக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழுக்கு எதிராக, பொறுக்கித் தனமான வசனங்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தும் அந்த வசனங்களை ரசிக ஆண்கள் பெண்களைப் பற்றி பேசிக் கொள்வதற்குமான ஒரு வழக்கத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்திய ஒரே இயக்குநர் ‘மவோ’ மணிவண்ணன் மட்டுமே.

தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே கொன்ற ஜெயபிரகாஷ் என்பவர் ‘நான் அந்தக் கொலைகளை செய்வதற்கு மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படம்தான் காரணம்’ என்று சொன்னதை இந்தப் பட்டியலில் நான் சேர்க்கவில்லை.

தன்னுடைய வசதியான வாழ்விற்காக தமிழ் மக்களை தன் திரைப்படங்களால் சூறையாடியவர்தான் இப்போது தமிழனின் வீழ்ச்சிக் குறித்து சூளுரைக்கிறார்.

சரி, அது படத்திற்குள் அவர் பேசியது. வெளியே,

‘தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். தமிழ் நாட்டில் தமிழனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ என்று அவர் அதிகம் பேசுகிறார்.

ஆனால், நடிகர் மோகனை தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அவர் ஒரு கன்னடர். தனது மகளின் திருமணத்தில் பல பச்சைத் தமிழர்கள் இருந்தபோதும் கன்னடரான ரஜினிகாந்தை ‘தாலி’ எடுத்து கொடுக்க வைத்துதான் திருமணத்தை நடத்தினார்.

அடுத்த ஜாதிக்காரனிடம் தமிழ் உணர்வு பேசிவிட்டு, தன் ஜாதிக்காரனிடம் ஜாதி உணர்வோடு பழகுகிற ஒரு ஜாதிய தமிழ்த் தேசியவாதியைப்போல்,

எந்த இனத்தாரோடும் சேர்ந்து பிழைப்புவாதத்திற்கு எது பொருத்தமோ அதை தன் சொந்த வாழ்க்கையில் செய்வதும், தமிழன் உணர்வை கடைபிடிக்கச் சொல்லி அடுத்தவர்களுக்கு போதிப்பதும்தான் திரைக்கதை யுக்தி.

வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்களில் கண்ணியமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வந்த சத்யராஜை; பெண்களை பாலியல் ரீதியான கண்ணோட்டத்தில் மிக மோசமாக, ஊதாரித்தனமாக வசனங்கள் பேச வைத்து அவரை ‘பெண் பித்தன்’ வடிவத்திற்கு மாற்றிய புகழும் ‘மார்க்சின் மாணவன்’ மணிவண்ணனையே சேரும்.

அவருடைய புகழ்பெற்ற அமைதிப்படை படத்தின், ‘வில்லன் மனோபாவம்’ கொண்ட நாயகனுக்கு பெயர் அமாவாசை.

‘அமாவாசை’ என்பது தலித் குறியீடு. தலித் மக்கள் எந்தவகையிலும் தங்களை உயர்வாக காட்டிக் கொள்ளக் கூடாது. அவர்கள் பெயர்கள்கூட இழிவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்து சமூக அமைப்பின் முறை.

அதனால்தான் அமாவாசை, மண்ணாங்கட்டி போன்ற பெயர்களை தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமே பார்க்க முடியும். அதுபோலவே அவர்களுக்கு எந்த சொத்தும் இருக்கக்கூடாது.

அதன் அடிப்படையிலேயே அமைதிப்படையில், அமாவாசை கதாபாத்திரம் ரோட்டில் தேங்காய் பொறுக்கிக்கொண்டு அறிமுகமாகும்.

‘அமாவாசை’ அரசியல்வாதியாக மாறிய பிறகு நாகராஜசோழனாக பெயர் மாறுவது திராவிட இயக்க குறியீடு.

‘புனைப் பெயர், தோளில் துண்டு’ இதுபோன்ற குறியீடுகள் திராவிட இயக்கத்தை மட்டுமே அடையாளப்படுத்துகிறது.

அமாவாசை என்கிற தலித், தன்னுடைய திராவிட இயக்க பாணியிலான அரசியல் முறையால் சட்டமன்ற உறுப்பினராகி, தான் வாழ்கிற ஊரையே சூறையாடுகிறான்.

பரம்பரை பரம்பரையாக பணக்காரராக இருக்கிற அப்பாவியான ராஜ பரம்பரை அல்லது பண்ணையாரை ஏமாற்றி அவரின் ஒரு பாவமும் அறியாத மிக அப்பாவியான மகளை திருமணம் செய்து கொள்கிறான். அவர்களின் சொத்தை தன் வசப்படுத்திக் கொள்கிறான்.

ராஜ பரம்பரை என்பது காங்கிரஸ் குறியீடு. பண்ணையார் எல்லாம் காங்கிரஸ்காரன்தானே?

‘பாரம்பரியமிக்க புனிதர்களான காங்கிரஸ் ஆட்சியை தன் தந்திரத்தால் தோற்கடித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தது திமுக.’ – இதுதான் அமைதிப்படை முதல் பாகம் முன்மொழிந்த அரசியல்.

இந்தத் தொடர்ச்சிதான் வரப்போகிற இரண்டாம் பாகத்திற்கும் என்றால்… So Sad!

தமிழ்த் தேசியத்தின் நேர் எதிர் அரசியல் இந்திய தேசியம், மத்திய அரசு. அதைக் கட்டி காப்பாற்றும் மாநில அரசுகள்.

தமிழ்த் தேசியம் பேசிகிறவர்கள் இவைகளுக்கு எதிராக பேசுவதுதான் அடிப்படை அரசியல். அதன் பிறகே திராவிட இயக்க எதிர்ப்பு இன்னும் பிற…

மாறாக இதை பேசுவதற்கு பயந்து, எதிர்கட்சியாககூட இல்லாத திமுகவையும் அதன் தலைவரையும் மட்டுமே விமர்சிப்பதும் கண்டிப்பதும் வடிவேல் பாணியிலான வீரம். அப்படி மட்டும் விமர்சிப்பதால். அதிமுக அரசின் ஆதரவை பெறலாமே தவிர, வேறு ஒரு வௌக்கெண்ணை வேலையும் நடக்காது.

இன்றைய நிலையில் இதை இப்படி சொல்லலாம், ‘இது இந்திய தேசிய ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியம்’

இந்த வடிவேல் பாணி வீரத்தில் படம் எடுத்துவிட்டு, ‘என் வீட்டில் கல் விழுந்தால்… நடக்கிறதே வேற’ என்று வடிவேல் பாணியிலேயே வசனம் வேறு.

விஜய் டி.வியில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘சினிமாவில் ஜாதி இருக்கிறது. தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான கவுரவக் கொலைகள் நடக்கிறது. ரெட்டை டம்பளர் முறையும் இருக்கிறது. இதை குறித்து வாழும் காலத்தில் கலைஞனாக நான் என் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது என் கடமை. நாளை என் மகள் என்னை கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வேன்?’ என்று குற்றம் உணர்வோடு பேசிய அந்த நேர்மை ‘மவோ’ மணிவண்ணனிடம் ஒருபோதும் வெளிபட்டதில்லை.

ஜாதி இந்துவின் தலித் விரோதத்தை படமாக எடுங்கள், அதுதான் வீரம். அப்படி எடுத்தா, ‘விட்ல கல்லு விழாது. கழுத்துல கத்தி விழும்’ அப்படிங்கற பயம்தானே?

**

சீமான் பற்றி இப்போது உயர்வாக பேசும் மணிவண்ணன், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் சீமான் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

சீமானை தனிமைப் படுத்தி, தமிழகம் முழக்க அவருக்கு எதிராக ஆர்ப்பட்டத்தையும் நடத்தியது.

இராம. கோபாலன் திரைத்துறையினரையும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த இராம. நாராயணனையும் சந்தித்து ‘சீமானை சினிமாவை விட்டு வெளியேற்ற வேண்டும்’ என்று மனு கொடுத்தபோது, ஒரு தமிழ் உணர்வாளராககூட அல்ல, ஒரு சினிமாககாரராககூட தனது கண்டனத்தை தெரிவிக்காதவர்தான் இந்த மவோ மணி.

அன்று தனியாக நின்ற சீமானுக்கு ஆதரவாக களம் இறங்கியவர்கள் மார்க்சிய-லெனினிய அமைப்புகளும், தலித் இயக்கங்களும், பெரியார் தொண்டர்களும்தான்.

ஆனால், இன்று தன் பிணத்தையே சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அளவிற்கு நெருக்கமாகியிருக்கிறார் மணிவண்ணன்.

ஆமாம், சீமானிடம் மணிவண்ணனின் பிணத்தை ஒப்படைத்துவிட்டு, அவருடைய வீடு உட்பட்ட சொத்துக்களை அவர் மகனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

அதுதான் தமிழ்த் தேசியத்திற்கு அவர் செய்யும் தொண்டு.

தொடர்புடையவை:

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்

இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

This entry was posted in கட்டுரைகள் and tagged . Bookmark the permalink.

18 Responses to மணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad! – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்ப்பும்

 1. குட்டி சொல்கிறார்:

  இப்போ இவ்வளவு அறிவா பேசுறிங்களே. இந்த அறிவு இதை
  செய்தபோது எங்கே போனது.

  https://mathimaran.wordpress.com/2012/02/

 2. குட்டி சொல்கிறார்:

  இப்போ இவ்வளவு அறிவா பேசுறிங்களே. இந்த அறிவு இதை
  செய்தபோது எங்கே போனது.

  https://mathimaran.wordpress.com/2012/02/13/504/

 3. சேக்காளி சொல்கிறார்:

  //நடிகர் பிரகாஷ்ராஜ்//
  கன்னடக்காரர் அல்லவா?.

 4. ssk சொல்கிறார்:

  அற்புதமான உண்மை கருத்துகள் ..
  இவர்களுக்கு ஜெ எது செய்தாலும் கண்ணுக்கே தெரியாது..
  நீங்கள் கூறிய பிழைப்பு வாத முன்னோடிகள்..
  கலைஞரை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் .. உடனடி புகழ் ஊடகத்தில் கிடைக்கும். ஊடகம் அவாளிடம். அது தான் வேண்டும் அவாளுக்கு ..
  தமிழனை வைத்தே தமிழன் கண்ணை குத்த விட்டு, இனத்தை ஏறி மிதிப்பது .

 5. Sridhar Kannan சொல்கிறார்:

  செருபாலையே அடிச்சிருக்கிங்க தோழர்….

  இவன், இந்த தமிழருவி மணியன் இன்னபிற கூமுட்டைகள் இவனுங்க தான் ஈழத்தையே வாங்குரமாதிரி பேசிட்டி திரியுரானுங்க…..

  இவனுங்கள பெரிய போராளிகளா வேறு பார்க்குரானுங்க முட்டா டமில் தேசியகாரனுங்க…..

  உங்களுடைய விமர்சனத்தை மிக நேர்மையாக தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

  நன்றி

  ஸ்ரீதர்

 6. sou paavendhan சொல்கிறார்:

  idhey manivannan oru padathil sathyaraaj uyar policu athikari vesam kattiyiruppaar, sathyaraajuku karuppu varnam poosi thazhtthapattavargal karupagathaan irupaargal endru kaattuvaar,

 7. KARAN சொல்கிறார்:

  நான் பல ஆண்டுகளாக தலித், திராவிடம் அதன் தொடர்பு இடங்களில் தான் வசித்துக்கொண்டு இருக்கிறேன் .ஏன் ,தலித் பெண்ணையே மணந்து இருக்கிறேன் ,அவர்களை யாரும் எதுவும் செய்யமுடியாது .ஊடங்களில் வருகிற தலித்திய வன்கொடுமை எல்லாமே இட்டுகட்டபட்டவை .அவர்கள் vote bank politics அவர்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கிறது .பிராமிணர்களை பற்றி பேச ஒன்றும் இல்லை .ஆனால் மற்ற தமிழ் மக்கள் எல்லா முறையிலும் இவர்களால் பாதிப்பு அடைகிறார்கள் .இது உண்மை.மற்றபடி தமிழ்நாடு politics பேசுவதை விட மலையாளி politics புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம் .அல்லது அவன் தமிழ்நாடு politics பற்றி திட்டுவதை காது கொடுத்து கேட்கலாம்.ஒருவேளை அடுத்த century ல பொலிடிகல் அறிவு பெறலாம்.கருணா க்கு மணிவண்ணன் எவ்வளோவோ மேல்.atleast அவர் காமெடி யா ரசிக்கலாம். பிரச்சினை இல்லை .ஆனால் கருணா வின் எனக்கு தெரிந்த முப்பது வருட துரோகம் ரசிக்கமுடியலை .கொஞ்சமாவது pl. தமிழனா இருங்க.

 8. கார்த்திக் சொல்கிறார்:

  //மோகனை தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அவர் ஒரு கன்னடர். தனது மகளின் திருமணத்தில் பல பச்சைத் தமிழர்கள் இருந்தபோதும் கன்னடரான ரஜினிகாந்தை ‘தாலி’ எடுத்து கொடுக்க வைத்துதான் திருமணத்தை நடத்தினார்.//

  ஏம்பா மதிமாரா,

  இன்னைக்கு உங்க “கன்னடர்” ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இருந்து அவர் தாலி எடுத்து கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைத்திருந்தாலும் இதையேத்தான் சொல்லுவியா? இப்படி என்ன பேசுறோம்ன்னு தெரியாம உளறிக்கிட்டு திரிவதால்தான் உங்க கூட்டத்த எவனுமே மதிக்கமாட்டேன்னு சொல்லுறானுக…………
  அடுத்த பதிவில் “நாயக்கர் கருப்பு தமிழர்” என்று சொல்லிடாதப்பா, நாடு தாங்காது 🙂

  //அமாவாசை என்கிற தலித், தன்னுடைய திராவிட இயக்க பாணியிலான அரசியல் முறையால் சட்டமன்ற உறுப்பினராகி, தான் வாழ்கிற ஊரையே சூறையாடுகிறான்.//

  எந்த பறையனும் பள்ளனும் சட்டமன்ற உறுப்பினராகி ஊரை சூறையாடவில்லை என்கிறாயா மதிமாரா? எம்.எல்.ஏ ஆனவுடன் இமேஜ் வேனும், கெளரவம் வேனும் என்பதற்காக எத்தனை எத்தனை மொள்ளமாறித்தனங்களை செய்யிரானுக இவனுக; ஊருக்கு ஒரு ஞாயம் உனக்கு ஒரு ஞாயமா?

  அடுத்த சாதிக்காரனை நீ திட்டும் வரை உன்னால் சாதியை ஒழிக்கவே முடியாது. நான் தாழ்ந்த சாதி; நான் தாழ்ந்த சாதி என்னும் தாழ்வு மனப்பான்மையிலேயே வெந்து வெந்து சாகப்போற………………

  பார்ட்-1 – இல் மணிவண்ணன் கேரக்டர் பெயர் – மணிமாறன், எம்.எல்.ஏ
  பார்ட்-2 -இல் மணிவண்ணன் கேரக்டர் பெயர் – மதிமாரன், எம்.எல்.ஏ

  என்று வைக்கப்பட்டுள்ளதாக கேள்வி 🙂

 9. சம்பூகன் சொல்கிறார்:

  மணிவண்ணண் குறித்த மிகச் சரியான பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை.தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் ஜாதிய உணர்வாளர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு மணிவண்ணன் ஒரு உதாரணம்.இவரது படமெல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது.அவருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது.அதனால்தான் `கல் எரிதல்’ பற்றி பிதற்றியிருக்கிறார்.

  ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல கருணாநிதி பற்றி யார் என்ன பேசினாலும் நடுநிலை(?)பேசுவோரும் கண்டுகொள்வதில்லை;தி.மு.க.வும் கண்டுகொள்வதில்லை.கருணாநிதியும் செய்தியைப் படித்து விட்டு சிரித்துவிட்டுப் போய்விடுபவர்தான்.அவர் பொதுவாகவே தாராள ஜனநாயகவாதி.அவர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்த சினிமாக்காரர்கள் ஏதாவது அவருக்கு ஐஸ் வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.அவருக்கு நாலு நடிகை அரைகுறையாக ஆடினால் போதும் ரசித்துவிட்டு சினிமாத்துறைக்கும்,தனிப்பட்டமுறையில் சினிமாக்காரர்களுக்கும் நிறையவே சலுகைகள் செய்துள்ளார்.மணிவண்ணன்,சீமான்,சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இப்படி சலுகைகளைப் பெற்றவர்களே.

  ஆளும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போட கையாலாகாதவர்கள் இவர்கள்.மருத்துவமனையில் தன் கடமையைச் செய்த ஒரு வயதான மருத்துவரை கொஞ்சம்கூட ஈவு இறக்கமின்றி சிறையில் தள்ளிய முதலமைச்சரை இந்தியா இதுவரை பார்த்ததில்லை.இந்தக் கொடுமைக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தார்களா?
  அடிப்படை மனிதநேயத்திற்கே இடமில்லாத நிலையில் தமிழகம் போய்க்கொண்டிருக்கிறது.இந்தப் பிரச்சினை குறித்து மணிவண்ணன் காட்சி வைப்பாரா? ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதா ஆடிய நாடகங்கள் கொஞ்ச நஞ்சமா?அதையெல்லாம் பேச சீமானோ,மணிவண்ணனோ தயாரா?

  ஹூம்…வெட்கங்கெட்ட தமிழ்நாடு…!

 10. மா. தமிழ்ப்பரிதி சொல்கிறார்:

  எந்த செய்தியையும் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அணுகி, ஆழ்ந்து சிந்திக்கும் தங்களின் பணி அரியது, காலத்தின் குரல். சமூக சமத்துவம் ஓங்கட்டும்!

 11. இராவணன் - இந்திய தேசிய விரோதி சொல்கிறார்:

  நல்லாத்தானெ இருக்கு இதுவும்

 12. anbumani சொல்கிறார்:

  அமாவாசை என்ற பெயர் தலித்துகள் மட்டும் வைப்பதில்லை.வன்னியர் உள்ளிட்ட இடைச்சாதிகளிலும் இந்த பெயர் உடையோர் உண்டு.எங்கள் ஊரிலேயே அமாவாசை, அம்மாசி என்றும் பெயருடையோர் உண்டு.அமாவாசை அன்று பிறந்தவர்களுக்கும் இந்த பெயர் வைப்பது உண்டு.இந்த பத்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட பெயர்கள் வைப்பது பமாறி,அனைத்தி சாதியிலும் வடநாட்டு வடமொழிப் பெயர்கள் வைப்பது “பேஷன் “ஆகிவிட்டது.

 13. காசிமேடுமன்னாரு சொல்கிறார்:

  தோழர் மணிவண்ணன் அவர்களின் அமைதிப்படையின் ஒன்றாம் பாகத்தின் விமர்சனம் போன்றே அமைந்திருக்கிறது. இரண்டாம் பாகம் வெளியாகும் வேளையில் காலத்துக்கேற்ற விமர்சனமே! எந்த ஒன்றையுமே ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து பார்ப்பதன் மூலமே அதற்குள் பம்மியிருக்கும் பார்ப்பனியம், சாதிவுணர்வு, மதவெறி, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை முதலிய பயங்கரங்கள், தமிழனின் நச்சுக்கிருமிகள், தமிழனுக்கெதிரான சூழ்ச்சிகள் முதலியவை நம் கண்ணுக்குத் தெரிய வருகிறது! அந்த வகையில் மதிமாறனின் இந்த விமர்சனம் தமிழர்கள் நலன் சார்ந்தே உள்ளது! பாராட்டுகள்!
  தந்தை பெரியார் தாய் மொழியால் கன்னடரே! இது எல்லோரும் அறிந்த ஒரு சாதாரண விடயமே! தான் தமிழன் அல்ல என்ற உண்மையை தந்தை பெரியார் யாருக்கும் மறைக்கவில்லை! தமிழ் நாட்டுக்கு முதல்வராக ஒரு பச்சைத் தமிழனே வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதனாலேயே இரண்டு முறைகள் தமிழ்நாட்டு முதல்வர் பதவி தந்தை பெரியாரைத் தேடி வந்து அழைத்தபோது கூட அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர் அல்ல! மனதில் பட்ட உண்மையை, அது யாருக்கு எங்கு தைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் ஒளிவு மறைவின்றிப் பேசுபவர்! அதனால்தான் தமிழ் மொழி உணர்வாகட்டும், தமிழின உணர்வாகட்டும் அல்லது பகுத்தறிவாகட்டும்… தமிழ்நாடு நலன் சார்ந்த எதுவென்றாலும் தந்தை பெரியாரின் கருத்துக்குள் வந்துதான் ஒருவரால் அவைகளைப் பற்றிப் பேச முடியும்! தந்தை பெரியாரை புறம் தள்ளிவிட்டு தமிழர் நலனோ தமிழ் நாட்டின் நலனோ இவைகளில் அவர்கள் உண்மையாக இருக்க முடியாது, அப்படிச் செய்வார்களென்றால், அவர்கள் கடைசியில் தமிழனின் நச்சுக்கிருமிகளான பார்ப்பனியத்திடம்தான் போய் சரணடைவார்களேயன்றி தமிழனுக்கு ஊசிமுனை அளவு கூட நன்மையை அவர்களால் செய்ய முடியாது!
  காசிமேடுமன்னாரு.

 14. காத்த‌வ‌ராய‌ன் சொல்கிறார்:

  // கன்னடரான ரஜினிகாந்தை //

  ரஜினிகாந்த் “மாராத்திக்காரர்” என்ற சின்ன விஷயத்தை கூட அறிந்திறாத உங்கள் எழுத்தை எப்படி நம்புவது? எழுத்தாளார் என்றால் ஒன்றை எழுதும் முன்பு அது சரியான தகவல்தானா என்று பலமுறை சரிபார்க்க வேண்டும்.

  நீங்கள் “எழுத்தாளர்” வே.மதிமாறன் என்று எல்லாம் இனி போட்டுக்கொள்ளாதீர்கள். அதற்கு உங்களுக்கு தகுதியே கிடையாது. இன்னும் நிறைய பயிற்சி வேணும் மதிமாறன்.

 15. Ezhil சொல்கிறார்:

  ‘அமாவாசை’ என்பது தலித் குறியீடு// மிகத் தவறான வாதம் கொங்கு மண்டலத்தில் அம்மாசையப்பன், அம்மாசையப்ப கவுண்டர் என பழைய பெயர்கள் உண்டு. அந்த படத்தை நீங்கள் சரியாக பார்க்கவில்லை எனத் தெரிகிறது. அதில் அவர் எம் எல் ஏ வாக வெற்றி பெற்ற பின்பு ஒரு மது விருந்தில் மணிவண்ணன் பேசுவார் “நம்மாளுங்க ஒருத்தன் பெரியாள பின்னாடி சொந்தம்கிறது ஒரே கூட்டம்கிறது ஆனா யாராவது பொண்ணு கொடுப்பீங்கலாயா ? என்று இதில் நம்மாளுங்க என்று சொல்வது சத்யராஜ் ஆதிக்க சாதியின் குறியீடாகத்தான்.. மேலும் அதில் கலவரம் நடக்க திட்டமிடும் இடத்திலும் அதே மாதிரி தான் நம்ம ஜாதி என்று குறிப்பிடுவது ஆதிக்க சாதியாகத்தான்.முதலில் தகவல்களை சரி பார்த்து விட்டு பின்னர் எழுதுங்கள்..போகிற போக்கில் கருத்துக்களை வீச வேண்டாம்

 16. kumar-villupuram சொல்கிறார்:

  என்ன சொல்ல வரீங்க அம்மாவாசையா இருந்த நாங்கள் நாகராஜசோழனா மாறிட்டோம் -னு –அதான் எங்களுக்கு தெரியுமே !!

 17. Pingback: இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது! | வே.மதிம

 18. Pingback: பொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s