எஸ். ஜானகியின் சுயமரியாதை!

janaki-various-artists-

எஸ். ஜானகி பத்மபூஷன் விருதை வாங்க மறுத்ததை பற்றி?

-சின்னவர், பாண்டிச்சேரி.

கொஞ்சும் சலங்கை படத்தில் இடம் பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் தமிழர்களின் இனிமைகளில் ஒன்று.

அந்தப் பாடல் பெண் குரலுக்கும் நாதஸ்வரத்திற்குமான டூயட்.

முதலில் பெண் குரலும் அதைத் தொடர்ந்து அதையே நாதஸ்வரத்தில் வாசிப்பதுமாக, நாம் இப்போது கேட்பதுபோல் அந்தப் பாடல் பதிவு செய்யப்படவில்லை.

இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடுவின் உன்னத இசையமைப்பில் நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலத்தின் அமர்க்களமான வாசிப்பில், முதலில் நாதஸ்வர இசைதான் பதிவு செய்யப்பட்டது.

நாதஸ்வரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய பெண் குரலைத் தேடி பல முன்னணி பாடகிகளை பாட வைத்து பார்த்திருக்கிறார் சுப்பையா நாயுடு.

மும்பை சென்று லதா மங்கேஷ்கர் வரை முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் காருக்குறிச்சியின் நாதஸ்வர வாசிப்பிற்கு முன் எந்தக் குரலும் எடுபடவில்லை.

பிறகுதான் எஸ். ஜானகியை பாட வைத்திருக்கிறார்.

பாட்டை கேட்டவர்களுக்குத் தெரியும். காருக்குறிச்சி அருணாசலத்துனுடன் ‘பாக்கலாம், உன் நாதஸ்வரமா? என் குரலா?’ என்று சவால் விடுவது போல் பாடியிருப்பார் ஜானகி.

இது நடந்தது 1962 ஆம் ஆண்டு. அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது 2013 ஆம் ஆண்டு. என்ன நியாயம் இது?

ஜானிகியிடம் இருந்த உன்னதமான பாவங்களையும்; குழைந்து, வளைந்து, எதிர்பாராத இனிய திருப்பங்ளோடு அமைந்த அவரின் சங்கதிகளையும் முழுமையாக பயன்படுத்தியவர் அல்லது வெளி கொண்டுவந்தவர் இசைஞானி இளையராஜா.

செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் அவர் காட்டிய பாவம் உலக உன்னதம்.

‘சின்னத் தாய் அவள் தந்த ராசாவே’ பாடல் இதற்கு மேல் ஒரு பாடகர் இவ்வளவு உருக்கும் பாவங்களோடு பாட முடியுமா?

காலதாமத பத்மபூசனை திருப்பி ‘அடித்த’ திருமதி ஜானகி அவர்களின் சுயமரியாதை அவர் பாடல்களைப் போல் உயர்ந்து நிற்கிறது.

S+Janaki (1)

தங்கம் 2013 மார்ச்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

‘சொன்னது நீதானா?..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’


This entry was posted in கேள்வி - பதில்கள் and tagged . Bookmark the permalink.

6 Responses to எஸ். ஜானகியின் சுயமரியாதை!

 1. அமுதவன் சொல்கிறார்:

  எஸ்.ஜானகியைப்பற்றிய கட்டுரைக்கானது இந்த பதில். மதிமாறன், இதுவரையிலும் கேள்விப்படாத வெளியில் கசியாத ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இளையராஜா சிறுவனாக இருந்தபோது தேனிமாவட்டக் குன்று ஒன்றில் அமர்ந்து சிங்காரவேலனே தேவா மெட்டைப் பாடிக்கொண்டிருந்தாராம். காருக்குறிச்சியின் நாதஸ்வர இசையும்கூட அவர் மூக்கால் வாசித்துக்கொண்டிருந்ததுதானாம். அந்த வழியே காரில்போன எஸ்.எம்.சுப்பையா நாயுடு அதனை அப்படியே மனப்பாடம் பண்ணிக்கொண்டுபோய் இசையமைத்து ஜானகியைப் பாடவைத்து படத்தில் சேர்த்துவிட்டாராம். இப்படி ஒரு கற்பனைக்கதையை முற்பகுதியில் அடித்து விட்டிருந்தீர்களானால் பிற்பகுதியில் அதே இளையராஜா இசையமைப்பாளராக வந்தபிறகு ஜானகியை வைத்து மேலும் பல பாடல்களைக் கொடுத்துப் புகழ்பெற வைத்தார் என்று இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டுபோவதற்கு வசதியாக இருந்திருக்கும்.
  சிங்காரவேலனேக்கும் அன்னக்கிளிக்கும் இடையில் ஒரு இருபத்தைந்து முப்பது ஆண்டுகளாவது இருக்கும். இடையில் ஜானகியின் எந்தப் பாடலும் பிரபலமாகாத நிலையில் இத்தனை ஆண்டுகளில் ஜானகியின் ‘சர்வைவல்’ நடந்தது எப்படி? விஸ்வநாதன்-ராமமூர்த்தியையோ, விஸ்வநாதனையோ, கே.வி.மகாதேவனையோ வேறுபல இசையமைப்பாளர்களையோ மூடிமறைத்து இளையராஜாவை மட்டும் தூக்கிப்பிடிக்கும் கபோதி அரசியலுக்கு அவசியமென்ன?
  காந்தியையும் பாரதியையும் கண்ணதாசனையும் தமிழ்ச்சமூகத்திலிருந்தே தூக்கி எறிந்து ‘சாதனைப் புரிந்துவிட்டீர்கள்.’ இந்த மூன்றுபேரும் யாரென்றே இப்போதெல்லாம் மக்களுக்குத் தெரிவதில்லை. இப்போது இளையராஜாவுக்கு முன்பு வந்த அத்தனை இசையமைப்பாளர்களையும் தூக்கி எறியும் தார்மிகப்பணியா? என்ன போங்காட்டம் இது? இதன் மூலம் நீங்கள் நிலைநாட்டவரும் ‘கருத்து’ என்ன? உங்களின் மறைமுக ‘அஜெண்டா’ என்ன?
  எஸ்.ஜானகியே அவரது பேட்டிகளில் தம்மைப் பிரபலப்படுத்திய இசையமைப்பாளர்களைப் -பாடல்களைச்- சொல்லும்போது மிகவும் கடைசியில், பல இசையமைப்பாளர்களுக்கு அடுத்துதான் இளையராஜா பெயரையே சொல்கிறார், இளையராஜா இசையமைப்பில் வந்த பாடல்களைப் பற்றிச் சொல்கிறார். இது அந்த அம்மையாரின் தொழில் நேர்மை.
  அம்பேத்கர், பெரியார் என்று சமூகமேம்பாட்டிற்கான சில அடிப்படை விஷயங்களை அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் சரியான தகவல்களை மூடிமறைக்கும் மோசடியில் ஈடுபடக்கூடாது. மாபெரும் கலைஞர்களின், படைப்பாளிகளின் படைப்புக்கள் மீது விமர்சனம் வைப்பது என்பது வேறு; அவற்றையும் அவர்களையும் அப்படியே சோற்றில் மறைக்கும் சதியில் ஈடுபடுவது என்பது வேறு.
  உண்மைகளை மறைக்கும் சதியில் ஈடுபட்டால் அம்பேத்கர், பெரியார் என்று நீங்கள் பேசவரும்போது, திறமையான வாதங்களை அடுக்கினால் மட்டும் போதாது நியாயமோ நேர்மைத்திறனோ இல்லாத டுபாக்கூர் அந்த மதிமாறன் என்ற அவச்சொல்லுக்குத்தான் ஆளாகவேண்டியிருக்கும்.

 2. காசிமேடுமன்னாரு சொல்கிறார்:

  என்னைக் கேட்டால், திருவாட்டி. ஜானகி அவர்கள் இராசபக்சேயின் எடுபிடிகளால் வழங்கப்படும் இந்தப் பத்மபூசன் விருதை மேடையில் வைத்தே எல்லோருக்கும் அறிவித்து விட்டு புறக்கணித்து விட்டு மேடையை விட்டு இறங்கியிருக்கலாம். இந்திய அரசுக்கு அதைக்காட்டிலும் வேறு அவமானம் கிடையாது, அப்படிச் செய்திருந்தால் தமிழர்களால், அவரின் சொந்த மண்ணான ஆந்திர மக்களாலும் பூரிப்புடன் கொண்டாடப் பட்டிருப்பார். அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்! என்றாலும் தாழ்வில்லை!
  இந்தப் புறக்கணிப்பே இந்திய அரசுக்கு பெருத்த அவமானம் தான்! அதற்காகவே தமிழர்கள் ஜானகி அவர்களுக்கு என்றைக்குமே நன்றி சொல்வர்.
  திருவாட்டி ஜானகி அவர்கள் கொஞ்சும் சலங்கைக்குப் பிறகு பல படங்கள் போலீசுக்காரன் மகள் உட்பட பல படங்களில் பாடியிருந்தாலும் அந்த நேரத்தில் திருவாட்டி. ஜிக்கி, இலீலா, சுசீலா இவர்களோடு ஒப்பிடக்கூடிய இடத்தில் அவர் திரையிசைக் குரலில் ஒளிர்விட வில்லை. பாவலர் இசைக்குழுவிலிருந்த இசைஞானி இளையராஜா அவர்களின் இசைத்துறை நுளைவுக்குப் பின்பே திருவாட்டி ஜானகி அவர்கள் தமிழ் மக்களுக்கு வெளிப்படத்துவங்கினார்! அவரை வெளிக்கொணர்ந்தது இசைஞானி இளையராசா அவர்களே! அவரின் திறமைகளை அவரிடமிருந்து தருவித்து தமிழர்களின் காதுகளில் இரீங்காரமிட வைத்தவர் இசைஞானி இளையராசா அவர்களே! இசைஞானி இசை அரசாங்கம் நடத்திட்ட சுமார் இருபத்தைந்து ஆண்டுகளும் ஜானகி அவர்களை மிஞ்ச யாருமே இல்லை என்ற நிலைதான்! அவருக்குப் போட்டியாக அதே நேரத்தில் களத்திலிருந்த சுசீலா, ஜென்சி, சசிரேகா பின்பு சித்ரா, சொர்ணலதா, சுனந்தா.. இப்படி பல போட்டியாளர்கள் இருந்தாலும் ஜானகி அவர்களோடு சமமாக நிறுத்தக் கூட இவர்கள் தகுதி பெறவில்லை. இந்தத் தன்னிகரில்லாத் தகுதியை ஜானகிக்கு அவரிடமிருந்தே பெற்றுக் கொடுத்தவர் இசையரசு இசைஞானி இளையராஜா அவர்களே!
  நாங்கள், தமிழர்கள் இசைஞானி அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு அவர் பலமடங்கு தகுதியானவர்! இசைஞானியின் அளவுக்கு இசைத்துறையில், உலக அளவிலேகூட யாரையுமே நம் இசைஞானியோடு ஒப்பிட முடியாது! எங்களின் நாற்பதாண்டுகளுக்கு மேலான இசை அனுபவத்தில் எங்களின் ஒருமித்த முடிவும், கருத்தும் இது! தமிழர்கள் இத்தரணியில் தன்னினைவோடு இருக்கும் வரை எங்கள் இசைஞானிக்கு, அவரின் இசைத் தாலாட்டிற்கு முடிவிருக்காது!
  நண்பர் அமுதவனின் குற்றச்சாட்டு அபாண்டமானது! மதிமாறனின் இந்தக் கட்டுரைக்கும் அமுதவன் அவர்களின் கேள்விகளுக்கும் சிறிதும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. சற்றும் தொடர்பில்லாமல் கேள்வி கேட்டுள்ளார். எனது இந்தப் பதிலை அவரும் தனக்கான பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
  மாறுபட்ட ஒரு கருத்துரையை, அதுவும் இந்திய அரசு செய்த கொலைபாதகத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்ட நேரத்தில் இக்கட்டுரை வெளியிட்ட நண்பர் மதிமாறனுக்குப் பாராட்டுகள்! நன்றி மதிமாறன்!! காசிமேடுமன்னாரு.

 3. அமுதவன் சொல்கிறார்:

  மதிமாறன். என்னுடைய தளத்தில் ‘ஜெயலலிதாவும் சமஸ்கிருதப் புலிக்குட்டிகளும்’ என்ற பதிவின் பின்னூட்டங்களில் இந்தப் பதிவு தொடர்பாகவும் இதன் மறுமொழி தொடர்பாகவும் சில பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. சில கருத்துக்களை நான் எழுதியிருக்கிறேன். முடிந்தால் படித்துப்பார்க்கவும். நன்றி.

 4. ராமய்யா சொல்கிறார்:

  நேத்து ராத்திரி யம்மா… தூக்கம் போச்சுடி யம்மா என்று குரலிலேயே சிருங்கார சிற்றின்ப ரசத்தை ஊற்றிய பாடலை பாடிய ஜானகியா இது இல்லை வேறு ஜானகியா?

 5. உமையவன்.எஸ் சொல்கிறார்:

  அதே ஜானகி அம்மாதான். உங்களுக்கு சிருங்கார ரசப் பாடல்கள் மட்டும்தான் தெரியுமா? ஆயிரக்கணக்கான தாய்ப்பாசப் பாடல்களையும் காதற்பாடல்களையும் மழலைப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் தன் தேன்குரலில் கொடுத்தவர் இவரே. இந்திய அளவில், ஏன் உலக அளவில் எஸ்.ஜானகி என்றால் அது நம் ஜானகி அம்மாவைத்தான் குறிக்கும்.

 6. Pingback: குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக… | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s