மகாத்மா: விமர்சனப்படுத்துவது தேவையானது, ஆரோக்கியமானது, சுவாரசியமானதும் கூட

ச.முகமது அலி

ஆய்வாளர்-எழுத்தாளர்
ஆசிரியர்-காட்டுயிர் மாத இதழ்

முன்பு பாரதியாரின் ஒளிவட்ட மர்மத்தை உடைத்த மதிமாறன் அவர்களின் அண்மை வெளியீடு தான் ‘காந்தி; நண்பரா துரோகியா?’ என்ற நூல். இது காந்தியைக் கட்டுடைக்கிறது. ஆம் வலிமை வாய்ந்த தமது ஆராய்ச்சியின் மூலம் அந்த இராஜ விக்ரகத்தின் உள்ளீடை மட்டுமல்ல, அதன் பக்தர்களின் பித்தங்களையும் அம்பலப்படுத்திய வகையில் இந்தியாவின் நேர்மையான எழுத்தாளர்களில் ஒருவராக மதிமாறன் அறியப்பட்டுவிட்டார்.

அறிவியலாளரோ, அரசியல்வாதியோ யாராயினும் அவர்களை நுண்மாண் நுழைபுலத்தோடு ஆராய்ந்து விமர்சனப்படுத்துவது தேவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும், சுவாரசியமானதும் கூட. இதுவே ஒரு சரிநிகர் சமுதாயத்தைக் கட்டமைப்பதும் மாற்றியமைப்பதற்குமான அடித்தளம். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு முதல் தர பிற்போக்கு நாடான நமது நாட்டில் தான் எதைத் தொட்டாலும் அதை சாதியோடு, சமயத்தோடு, கடவுளோடு முடிச்சுப் போட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே கலை, இலக்கியம், விஞ்ஞானம் என நாம் எங்கே போனாலும் கொக்கரித்தெழும் மதவாதக் கொடூரர்களால் முத்திரை குத்தப்படுவதோடு அவர்களால் சீர்திருத்தமோ, சமத்துவமோ, நவீனமோ எதையும் குத்திக் குதறும் அபாயம் அன்றும், இன்றும் உண்டு.

அந்த கொலைபாதகப் பண்பாட்டுக்கே  பலியான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை வெகு நீண்ட காலத்திற்கு முன்பே விமர்சனப்படுத்தி, அம்பலப்படுத்தியவர்கள் இந்தியாவில் இருவர்; ஒருவர் அம்பேத்கர், இன்னொருவர் ஈ.வே.இராமசாமி. இது முந்தைய தலைமுறை. இன்றைய தலைமுறையில் இவ்விமர்சன மரபில் இருப்போர் தமிழகத்தில் இருவர்; ஒருவர் மதிமாறன், மற்றவர் மருத்துவர் செயராமன். செயராமனின் நூல் ‘காந்தியின் தீண்டாமை’ விமர்சனப்படுத்தியது என்றால், மதிமாறனின் நூல் அம்பலப்படுத்துகிறது எனலாம்.

காந்தி இந்தியாவுக்கு எதுவும் செய்திடாமலேயே ‘பிதாவாகி’ விட்டதற்கான காரணம் என்னை பொருத்தவரை கோவணமும், ஆங்கிலமும் தான். இதையடுத்த மூன்றாவது கருத்தை காந்தியே குறிப்பிடுகிறார்…  ‘நான் அரசியல்வாதியல்ல, அரசியல் பேசுகின்ற சமயவாதி’ (இந்த சமயவாதப் போக்கினால் தான் பாகிஸ்தானே உருவானது என்பது வேறு கதை) இன்றைய சூழலில் நுனி நாக்கு ஆங்கில மொழிச் சாமியார்கள், வெற்றிகரமாக தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்க முடிவதும் இந்தப் பின்னணியில் தான்.

இந்த ஆங்கில மொழி (இரகசிய) மோகம் அரசியல், ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல பெரிய பெரிய தமிழ்த்தேசிய, தாய்த் தமிழ்வாதிகளையும் ஆட்டிப் படைத்துகொண்டிருப்பது ஒரு சுவை முரண். விசித்திரமான இவர்களும் சரி மற்றவர்களும் சரி தமது மேதாவிலாசத்திற்கு ஒன்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்; அதுதான் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு மட்டுமல்ல மொழிநடைகூட. இதில் ஒரு முக்கிய நகைச்சுவை, காந்தி உள்ளிட்ட இவர்கள் அனைவருக்கும் ஆங்கில மொழி மட்டும்தான் தேவை. ஆனால், ஆங்கில பண்பாட்டை வெறுப்பார்கள். ஆனால் இவர்கள் எழுத்துக்கள், பேச்சுக்கள் அனைத்திலும் ஆங்கிலப் பண்பாட்டுப் பாதிப்பு மிளிரும். இந்த வழியில்தான் பண்டைய தமிழ் இலக்கிய இயற்கை மரபானது மூடநம்பிக்கைத் தமிழர்களால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது.

காந்திக்கு மட்டும் ஆங்கிலம் எழுத, பேசத் தெரியாமல் இருந்திருந்து… இந்தி கூட அல்ல, குசராத்தி மட்டுமே தெரிந்திருந்தால் எவ்வளவுதான் அவர் “ஒளிவட்டம்” உள்ளபடியே பிரகாசமாக இருந்தாலும் தேசப் பிதாவாக அவர் போற்றப்பட 100 விழுக்காடு வாய்ப்பே வந்திருக்காது. மாறாக குசராத்தின் சத்ய சாய்பாபாவாகவே அவர் இருந்திருக்க முடியும்.

நூல் முழுவதிலும் காணப்படும் மதிமாறனின் தார்மீகக் கோபத்தில் இருக்கும் நியாய உணர்வை, சவால் விட்டு அவர் காட்டும் புள்ளி விவரங்கள் மற்றும் ஆய்வுகளிலிருந்து தெளிவாக ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இந்தியர்களின் மூளைகளில் பதித்து வைக்கப்பட்டிருக்கும் ‘தென்னாப்பிரிக்க இரயிலில் ஒரு வெள்ளைக்காரன் காந்தியைத் தாக்குதல்’ சம்பவத்தின் உண்மை நிலையை மதிமாறனுக்கு முன்பு வரை ஏன் எந்த மதியூகிகளும் கண்டுபிடிக்க முடியவில்லை? என்பது போன்ற கேள்விகளுடன் தொடர்ச்சியாக பல புதிய எண்ணங்களும் உருவாக நூல் வாய்ப்பளிப்பது ஒரு சிறப்பு.

காந்தியின் இளவயதில் அவர் கருப்பாக, காதுகள் அகன்று அவர் தாயாருக்கே அவர் அருவெறுப்பாக இருந்ததாக நாம் முன்பு படித்திருக்கிறோம். மிடுக்கான தோற்றத்தில் வெள்ளை வெளேர் என சூட், கோட் அணிந்திருக்கும் ஒரு ஆங்கிலேயன் பயணச் சீட்டு இன்றி இரயிலில் எடக்கு மடக்காகப் பேசும் ‘அசிங்கமான’ ஒருவரைப் பார்த்தால் கோபம் வருமா, வராதா என்பது பொதுப் பார்வையில் சிந்திக்கத் தக்கதே. அதே இரயிலில் எத்தனையோ இந்தியர்கள் பயணித்துக் கொண்டுதான் இருந்திருப்பர். ஏன் அம்பேத்கர் கூட ‘நிறவெறி’ கொண்ட அமெரிக்காவின் கொலம்பியா வரை சென்று படித்து வரவில்லையா… என்னவாகி விட்டது? (பெரியாரை விடுங்கள் அவர் சிவந்த நிறத்தை உடையவர் என விவாதத்திற்கு இழுக்காது விட்டு விடலாம்) இயல்பாகவே ஆங்கிலப் பண்பாட்டைப் பார்த்தால் ஏற்படும் ஆத்திரம், சமய காந்தியின் இரத்தத்தில் உண்மையாகவே கலந்திருக்கிறது. எனவே, ஆங்கிலப் பண்பாட்டை வெறுக்கும் மனோபாவத்துடன், தாம் ஒரு பாரிஸ்டர்-வழக்கறிஞர் என்ற மமதையோடு ஆங்கிலேயர் ஒருவருடன் பயணச் சீட்டு வாங்காமல் மல்லுக்கு நிற்கும் ஆளுமை கொண்டவராகவே நமக்குப் புலப்படுகிறது. இப்படிப்பட்ட பலரை இங்கே, இப்போதும் கூட பேருந்தில், இரயிலில் நாம் காண முடியும்.

மேலும் காந்தியின் வாரிசுகளிலும், பக்தர்களிலும் லட்சக்கணக்கானோர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்தும், சுற்றிக் கொண்டும் இருக்கிறார்களே எப்படி? அவர்கள் காந்தி போலவே நடந்து கொள்கிறார்களா? அல்லது காந்தி போலவே மனோபாவம் கொண்டிருக்கிறார்களா என்பதை ஆய்வுக்குட்படுத்தவும் இந்நூல் தூண்டுகிறது.

ஒரு உண்மை புரிகிறது; அன்று காந்திக்கு இருந்த ‘அறிவும், தன்னம்பிக்கையும்’ கூட வெள்ளைக்காரன் போட்ட பிச்சை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வெள்ளையர் இனமே இல்லாமல் ஒரு காலமிருந்து, அதில் பாரதமாதாவின் புதல்வர்களின் இராமராஜ்ஜியத்தில் 1008 புண்ணிய தேசங்களில் ஏதாவது ஒரு தேசத்தில், ஒரு உருமால் சிங் அரசின் வாகனப் போக்குவரத்தில் காந்தி தனது தென்னாப்பிரிக்க வேலையைக் காட்டியிருந்தால் என்னவாகியிருக்கும் அவர் கதி? மனிதாபிமானம், மனித உரிமை, சனநாயகம், சிவில் சட்டம், கல்வி, பட்டம், வழக்கு, வாயிதா, வாதம் இத்தனையையும் அந்நியத்திலிருந்து பெற்றுக் கொண்டு ஒருவர் தமது ஆளுமையைக் காட்டுவது பெரிய வீரமுமல்ல, தர்மமுமல்ல. ஆங்கிலம் தெரிந்து கொள்வதே ஒரு தைரியம் என்று நமது பள்ளிகளில் இப்போதும் நாம் சொல்லித் தருவதில்லையா? ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

‘சர்’களிலிருந்து ‘நோபல்’கள் வரை வெள்ளை ஏகாதிபத்தியத்தின் மொழியை அறியாமல், அவர்கள் அறிவியல் துணையின்றி முன்னுக்கு வந்தவர்கள் எத்தனை பேர்? கைகளை உயர்த்தட்டும். ஆக எதையுமே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பார்க்கும் போது உண்மைகள் மறைந்து புனிதமாகி விடுவது நமக்குத் தெரியாததல்ல. ஒரு வக்கீலின் விவாதமாகக் கூட வைத்துக் கொள்ளாலாமே. அன்று இரயிலில் நடந்த அச்சம்பவம் காந்தி சொல்லித்தானே நமக்கு தெரிகிறது. அதை நேரில் கண்ட சாட்சி யார்? ஆதாரம் என்ன? ‘புரை தீர்த்த நன்மை பயக்கும்’ என மக்களை உசுப்பி விட, கழிவிறக்கம் காண, 1916 இல் நடந்ததை 1940 இல் சொல்லும் திட்டத்தின் உள்ளீடை நாம் மதிமாறன் நூல் வழியே தான் புரிந்து கொள்கிறோம்.

64 பக்கங்களில் உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலின் பின் அட்டையில் அம்பேத்கர், பெரியார், காந்தியின் படங்களைத் தந்து சிறு விளக்கங்கள் கொடுத்திருப்பது சரியான வடிவமைப்பு. அதில் காந்தி பற்றிய குறிப்பில் இதையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்; தினசரி மார்பு, கை, கால், முகச்சவரம் செய்வதும் முடி வெட்டிக் கொள்வதும் உடையமைப்புக்கேற்ற திட்டமிட்ட ஒப்பனையே.

இது போல் பலவித எண்ணங்களையும், தகவல்களையும் மேலதிகப் புரிதல்களையும் மதிமாறனின் ‘காந்தி; நண்பரா? துரோகியா?’ நூல் நமக்குள் உருவாக்கிவிட்டது. இருப்பினும் இது தமிழில் மட்டுமே வெளிவந்திருப்பது தான் பொருத்தமில்லாதது. ஆம் முதலில் இந்நூல் இந்தியிலும், குசராத்தியிலும். மத்திய, உத்தரப் பிரதேசங்களிலும் தான் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். நவீனமாக இந்தியாவை மறு உருவாக்கம் செய்திட விரும்புவோர் அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய இந்நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கில் அச்சிடப்பட்டு வழங்கி இந்தியாவின் ‘புனிதம்’ உடைக்கப்பட வேண்டும். புதிய மனிதம் படைக்கப்பட வேண்டும். இதுவே நூலாசிரியரும், பதிப்பாளரும் வேண்டுவது என்பதாக நாம் அறிகிறோம். அவர்கள் முயற்சிகள் வெல்ல வேண்டும். நாடு உருப்பட வேண்டும்.

ச.முகமது அலி

ஆய்வாளர்-எழுத்தாளர்
ஆசிரியர்-காட்டுயிர் மாத இதழ்
காடுகள் பற்றிய ஆய்வில் இந்தியாவில் உள்ள முன்னணிஆய்வாளர்களில் ஒருவர்.

காடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி ஆய்வு செய்வது இவரது சிறப்பு.

கறாரான விமர்சனம் இவரின் இன்னொரு சிறப்பு, அதனாலேயே சிறு பத்திரிகை இலக்கியவாதிகளிலிருந்து ‘பெரிய‘ பத்திரிகை வரை உள்ள பழைமைவாதிகள் இவரை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.

ச. முகமது அலியின் நூல்கள்

பறவையியல் அறிஞர் சாலிம் அலி

நெருப்புக்குழியில் குருவி

யானைகள் அழியும் பேருயிர்

இயற்கை செய்திகள் சிந்தனைகள்

பாம்பு என்றால்…

பல்லூயிரியம்

வட்டமிடும் கழகு

தொடர்புடையது:

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

15 Responses to மகாத்மா: விமர்சனப்படுத்துவது தேவையானது, ஆரோக்கியமானது, சுவாரசியமானதும் கூட

 1. வைசூரி அய்யர் சொல்கிறார்:

  // ஒரு உண்மை புரிகிறது; அன்று காந்திக்கு இருந்த ‘அறிவும், தன்னம்பிக்கையும்’ கூட வெள்ளைக்காரன் போட்ட பிச்சை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது //

  ஜின்னாவுக்கும் அதேதான் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாதா பாய்?

 2. rammy சொல்கிறார்:

  காந்தியைப் பார்வை பார்க்கிறேன்…என்று ஏசுவது இன்று ஃபேஷனாகி விட்டது! காந்தி எளிய இலக்கு இவர்களுக்கெல்லாம்!

  காந்தியை மட்டுமல்ல..எந்தத் தலைவரையும்,கடவுளரையும் எந்த பார்வை கொண்டும் பேசலாம்,ஏசலாம்,தூற்றலாம்! திருப்பி அடிக்க ஆள் பலமில்லாதவராகப் பார்த்து!

 3. ssk சொல்கிறார்:

  ச.முகமது அலியின் சிறப்பான பார்வை

 4. கனல் சொல்கிறார்:

  rammy
  காந்தியைப் பார்வை பார்க்கிறேன்…என்று ஏசுவது இன்று ஃபேஷனாகி விட்டது! காந்தி எளிய இலக்கு இவர்களுக்கெல்லாம்!//

  அம்பேத்கர் சிலை இ டிக்கும்போது இதுபோன்று கருத்து சொல்லாமல் நீங்கள் எங்கு இருந்திர்கள்..

 5. tamil சொல்கிறார்:

  ///ஜின்னாவுக்கும் அதேதான் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாதா பாய்?//

  யாரையும் மதம், ஜாதி சார்ந்து பார்க்கிற அதே இந்து புத்தி

 6. Ravi சொல்கிறார்:

  //// அன்று காந்திக்கு இருந்த ‘அறிவும், தன்னம்பிக்கையும்’ கூட வெள்ளைக்காரன் போட்ட பிச்சை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வெள்ளையர் இனமே இல்லாமல் ஒரு காலமிருந்து, அதில் பாரதமாதாவின் புதல்வர்களின் இராமராஜ்ஜியத்தில் 1008 புண்ணிய தேசங்களில் ஏதாவது ஒரு தேசத்தில், ஒரு உருமால் சிங் அரசின் வாகனப் போக்குவரத்தில் காந்தி தனது தென்னாப்பிரிக்க வேலையைக் காட்டியிருந்தால் என்னவாகியிருக்கும், அவர் கதி?ஃ/////

  உண்மையை அழமாக சொன்ன வரிகள். வாழ்த்துக்கள் முகமது அலி சார்

 7. shanmuganantham.e. சொல்கிறார்:

  காந்தியை பற்றிய வேறு ஒரு பார்வையை அலி சாரின் மதிப்புரை தருகிறது. மொத்ததில் எந்த பாரவையில் பார்த்தாலும் காந்தி நன்மதிப்புக்குள் வரவில்லையே? இது ஏன் புரியவில்லை மக்களுக்கு? புத்தகத்தை அளித்த தோழர்.மதிமாறனுக்கும், சிறப்பானதொரு மதிப்புரை தந்த தோழர்.முகமது அலிக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் இவர்களது சமூகப் பணி. நன்றி.

 8. சோத்து பானை சொல்கிறார்:

  சாமியார் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட எழுத்தாளருக்கு வரும் மதிப்புரைக்கள் போல உள்ளன ‘உலக மகா துரோகி காந்தி’ புத்தகத்துக்கு வரும் மதிப்புரைகள்.

  //ஒரு உண்மை புரிகிறது; அன்று காந்திக்கு இருந்த ‘அறிவும், தன்னம்பிக்கையும்’ கூட வெள்ளைக்காரன் போட்ட பிச்சை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.//

  இதே வேளையில் அம்பேத்கர் அமெரிக்கா சென்று படித்தார் என்கிறார். காட்டுயிர் ஆசிரியர் ஏன் இவ்வளவு மோசமாக மதிப்புரையில் எழுதுகிறார் ?

  தென்னாப்பிரிக்காவில் ஏதோ நிறவெறியே நடக்காதது போலவும் ‘நோபல்’பரிசுக்குறிய ஆராய்ச்சி நடத்தி அதில் காந்தி உலக மகா பொய் சொல்லிவிட்டார் என்று புழுதி வீசுவதெல்லாம் எப்படி சமுதாய மாற்றத்திற்கு வித்திடும் ?

  மதிமாறன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியைப் பற்றி ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’க்கு செய்த ஆராய்ச்சி தான் கந்தல் துணியாக தொங்குகிறதே!

 9. தா. வைகுண்டராமன் சொல்கிறார்:

  காந்தி நண்பரா” துரோகியா”
  அழகான ஆராச்சி கட்டுரை.
  தோழருக்கு நன்றி

 10. பரிமேலழகன் சொல்கிறார்:

  இந்திய சுதந்திரத்துக்கு முப்பது வருடங்களாக ஒரு துரும்பைக் கூட எடுத்துக் கொடுக்காதவர் தான் பெரியாரும் அம்பேத்காரும். இருந்தாலும் தவறு என்று சொல்ல முடியாது, அவர்கள் கருத்து அது. அவர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது – பெரியார் இந்தியாவை காந்தி நாடு என்று வழங்கிட வேண்டும் என்றார். அதற்குக் காரணம் காந்தியார் உண்மையிலேயே பெரியவர் என்பது தான். நீதி கட்சியை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான ரெட்டைமளையார்அவர்களின் பேரன் காங்கிரசில் சுதந்திரத்துக்கு முன்னரேயே இணைந்ததும் காந்தியார் மேல் கொண்ட நன்மதிப்பால் தான். மேலும் நீதிக் கட்சி வெறும் ஜமீந்தார் கட்சி என்பதை ரெட்டைமளையாரும் எம்.சி. ராசாவும் அறிந்து 1920-களிலேயே நீதி கட்சியிலிருந்து வெளியேறினர். காந்தி தென் ஆப்பிரிக்காவில் நிகழ்த்திய சாதனைகளை தமிழனைக் காட்டிலும் நெல்சன் மண்டேலா அறிந்து வைத்து பாராட்டி எழுது இருக்கிறார்.

  நன்றி
  பரிமேலழகன்

 11. குறிஞ்சி சொல்கிறார்:

  சோத்து பானை
  நீ தயிர் சாத பானைதானே?

 12. Ravi சொல்கிறார்:

  காந்தி பற்றிய திரு.முகமது அலியின் தெளிவான பார்வை

 13. Pingback: நூல்கள் அறிமுக விழா « வே.மதிமாறன்

 14. Harishh Tryin To Prove சொல்கிறார்:

  காந்தி நிச்சயம் ஒரு சுயநல வாதி …ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள் அளவுக்கு மோசம் அல்ல. அவரது சுயநலத்திலும் ஒரு பொது நலம் இருந்தது. அவர் ஒரு கலகக்காரர் . பெரும் புரட்சி வீரர் தான் . ஆனால் மகாத்மா அல்ல. என்னை பொறுத்த வரை நேதாஜி ஒரு மகாத்மா , அம்பேத்கர் மகாத்மா !!!

  நிச்சயம் இது ஆரோக்கியமான விஷயம்

 15. R.Devaraju. சொல்கிறார்:

  In those age, Gandhiji has done maximum good to the country with the least available facilities and support. The crticizing people, like MD.Ali and others, should serve at least something to Indians at start criticizie. They should not write something because they got pen.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s