பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்….

http://cpmtataistfascist.files.wordpress.com/2009/01/periyar.jpg

‘பழந்தமிழன்’ பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் திண்ணைப் பேச்சு வீரர்களை, தந்தை பெரியார் தடியாலேயே தலையில் அடிக்கிறார்.

ழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆளைக் காணோம். வீணாக அந்தப் பெயரின் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ, தங்கள் எண்ணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவோ அது பயன்படுகிறது.

பழந்தமிழன் யாரயிருந்தால் எனக்கு என்ன – உங்களுக்குத்தான் என்ன காரியம் ஆகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாய் இருந்தாலும் இங்கு, இன்று நமக்கு அதனால் என்ன லாபம் என்பதுதான் கேள்வி. பழந்தமிழர் நிலையைப் பற்றி பேசுபவர்கள் பகுத்தறிவாதிகளானால், நடுநிலைமைக்காரர்களானால் – அவர்களை ஒன்று கேட்கிறேன்.

அதவாது, காட்டுமிராண்டி வாழ்க்கைக் கால மனிதனைவிட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன் சிறந்தவன் அல்லவா என்பதும்; அது போலவே 4000 , 5000 வருஷ காலத்திற்கு முன் இருந்த மனிதனை விட, இன்று 20 ஆவது நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவமும், அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா அல்லவா என்பதோடு, அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வைவிட, எண்ணிய எண்ணத்தைவிட வேறான எண்ணங்கள் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா இல்லையா என்பதுமே ஆகும்.

இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்குப் பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாகக் கேட்கிறேன்.

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்தச் சீர்த்திருத்த்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, பகுத்தறிவுவாதியின் கடமையாகி விட்டது.

இன்றும் நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவுப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்குக் காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை என்பன போன்ற பழமையேயாகும்.

பழந்தமிழர் பேச்சைப்பேசி இனி ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கிய கடமையாகும்.

தந்தை பெரியார்

குடி அரசு 10-1-1948

தலித் முரசில் நான் எழுதியஆண்ட பரம்பரைக் கனவு-தொடரும் ஜாதியின் நிழல் என்ற கட்டுரைக்கு பலம் சேர்ப்பதற்காக அந்தக் கட்டுரையின் இடையில் கட்டம் கட்டி பெரியாரின் இந்தக் கட்டுரையை தேர்தெடுத்து, தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் வெளியிட்டு இருந்தார்.

கட்டுரைக்குள் தரப்பட்டு இருக்கிற அழுத்தம் ( Bold ) என்னால் தரப்பட்டது. பெரியாரின் கட்டுரைக்குள் இருந்த வாசகத்தை எடுத்து தலைப்பாக நானே வைத்தேன், இந்தப் பதிவுக்காக.

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

34 Responses to பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்….

 1. சீ.பிரபாகரன் சொல்கிறார்:

  பழந்தமிழர் பெருமை, வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பேசிக்கொண்டே இருப்பது “முட்டாள்தனம்” தான். இருப்பினும் ஒரு இனம் “வரலாறை வழிகாட்டியாகக்” கொள்வது அவசியமாகும்.

  தமிழினத்தின் முன்னேற்றத்திற்கான தனித்துவங்களையும் காரணிகளையும் பேனி பாதுகாத்து மேம்படுத்துவதும், வீழ்ச்சிக்கான காரணிகளை கண்டிறிந்து அவற்றை கைவிடுவதும் நமது கடமையாகும்.

 2. vanathy சொல்கிறார்:

  உங்களைபோல் எனக்கும் பழந்தமிழர் பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதில் உடன்பாடு இல்லைத்தான்.

  ஆனால் அதற்காக வரலாறு என்பதே தவறு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை
  வரலாறுதான் பரிணாம வளர்ச்சியையும் பண்பாட்டு வளர்ச்சியையும் அது மனிதமாக இருந்தாலும் இனமாக இருந்தாலும் எமக்கு கற்பிக்கிறது.வரலாறு கடந்த
  காலத் தவறுகளையும் திருத்திக் கொள்ள உதவுகிறது.

  கடந்த காலம் இல்லாத நிகழ் காலம் சாத்தியம் இல்லை.
  ஆனாலும் வெறுமனே பழம்பெருமை பேசி தமிழர் நாம் நிகழ்காலத்தில் பல விஷயங்களைக் கோட்டை விட்டுவிட்டோம் என்பது உண்மைதான்.

  —-வானதி

  .

 3. Dr. V. Pandian சொல்கிறார்:

  பெரியார் பார்ப்பனீயத்தின் கொடூரத்தைப் புரிந்து கொண்டு, பகுத்தறிவின் மேண்மையைப் பேணியவர். அதே நேரம், அவரத் மொழி பற்றிய புரிதல், தமிழிலக்கியம் சார்ந்த புரிதல் எல்லாம் குறையுடையன. மொழியை அவரு வெரும் கருத்துப் பரிமாற்றக் கருவி என்று தான் வரையறுத்தார். அது மிகவும் தவறான கருத்தென்று நிருவப்பட்டுள்ளது. மொழி என்பது கருத்து உருவாக்கக் கருவியும் கூட. அவர் வாழ்ந்த காலத்தில் இல்லாத புதிய கருத்துகளும் இப்போது ஆய்வின் மூலம் வௌிவருகின்றன.

  கம்ப்யூட்டர் செய்யும் காலத்தில் தான், அனுகுண்டும் செய்கிறான். ஈழத்திலே லட்சக்கணக்கில் கொலையும் செய்கிறான். அதை இந்து பாரப்பான் ஆதரிக்கவும் செய்கிறான்.

  நமது அறவழி என்னவாயிற்று? 100க்கு 80 பேர் கையூட்டு வாங்குகிறான். அறிவியல் அறிவால் மனிதன் அடைந்தது என்ன?

  திருக்குறள் 2000 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட நூல். அதை இந்த உலகம் கடைபிடித்தால் செழுமையுற்றிருக்குமா?

  யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. பெரியாரும் தான்.

  இன்று நமக்கு தேவைப்படும் எவ்வளவோ விடயங்கள் நமது பண்டைய வரலாற்றில், இலக்கயத்தில் உண்டு.

  நேரமின்னையால் இத்தோடு முடிக்கிறேன்.

 4. முகமது பாருக் சொல்கிறார்:

  //அதே நேரம், அவரத் மொழி பற்றிய புரிதல், தமிழிலக்கியம் சார்ந்த புரிதல் எல்லாம் குறையுடையன. மொழியை அவரு வெரும் கருத்துப் பரிமாற்றக் கருவி என்று தான் வரையறுத்தார்.//

  அய்யா மதிப்பிற்குரிய பாண்டியரே.. உங்கள் கருத்துகள் அனைத்தும் இன்றைய அரசியல் மற்றும் ஆண்மீக தலைவர்களின் போல் உள்ளது.. மொழி என்பதை தந்தை பெரியார் மற்றுமல்ல மனிதம் உள்ள அனைவரும் மொழியை இப்படித்தான் வரையறை செய்வார்கள்..சும்மா உணர்ச்சியின் உச்சக்கட்டத்திலேயே நாம் அனைவரும் மொழியை பயன்படுத்துகிறோம்..அவ்வளவுதான் ஆனா படிக்கிறது பொலக்கதுக்கு எல்லாமே தங்கலிஷ் தான் உள்ளது..

  மொழி வளர்ச்சி என்பது தொழிநுட்பத்தில் பயன்பட வேண்டும் உதாரணத்துக்கு இங்கிலாடின் தாய்மொழி இங்கிலீஷ் அங்கே அணைத்து துறைகளும் அவர்களின் தாய்மொழியிலேயே இருக்கும், பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், டச்சு, சைனிஷ், அராபிக் அனைத்தும் அதன் மொழியிலேயேதான் இருக்கும் அது தான் மொழியோட வளர்ச்சியும் பயன்பாடும்.. ஆனால் நாம என்ன செஞ்சோம் சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் இந்த மாதிரி மதத்தை வளர்ப்பதற்கு நம்ம தாய்மொழியை பயன்படுத்தி சீரழித்து உள்ளோம் அதில் பெருமை வேற நமக்கு..

  இதை தெளிவாக புரிந்து மக்களுக்கு எடுத்து சொன்னவர்தான் தந்தை பெரியார் அதை அவர் வாழ்நாள் முழுதும் எமக்காகவும் எம் மண்ணிற்காகவும் அர்ப்பணித்தவர் .. ஒரு மனிதரை வேண்டுமானால் விமர்சனம் செய்யுங்கள் ஆனால் அவரின் செயலால் ஒவ்வொரு திராவிட மனிதம் உள்ள மனிதர்கள் நெஞ்சிலும் இருப்பார் ஒரு கணத்தில் ஒவ்வொரு மனிதனும் பெரியாரைப் பொல ஆவான் அப்போ நீங்க பன்னுவீங்குனு பாப்போம்..

  //நமது அறவழி என்னவாயிற்று? 100க்கு 80 பேர் கையூட்டு வாங்குகிறான். அறிவியல் அறிவால் மனிதன் அடைந்தது என்ன?//

  இதுக்கு யாரு பொறுப்பு நீங்களும், நானும் நாம உருவாக்கின அரசியல்வியாதிகள் தானே அப்போ மாற வேண்டியது நாம தானுங்க..

  //திருக்குறள் 2000 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட நூல். அதை இந்த உலகம் கடைபிடித்தால் செழுமையுற்றிருக்குமா?//

  நல்ல விஷயங்கள் எதில் இருந்தாலும் எடுத்துக்கலாம் நண்பரே,

  //இன்று நமக்கு தேவைப்படும் எவ்வளவோ விடயங்கள் நமது பண்டைய வரலாற்றில், இலக்கயத்தில் உண்டு//

  அப்புறம் ஏன் நம்ம கண்முன்னாடியே நம்ம உறவுகளை காப்பாத்த முடியல? (மன்னிக்க வேற கேள்வி எழுப்ப மனம் வரவில்லை ).. இலக்கியங்களில் நல்ல விசயங்களையும், மொழியின் தொண்மையும் அறிய எடுத்துக்கொள்ளலாம்.. வேற வெட்டி பெருமை பேசுவது எதற்காக யாருக்கு நன்மை? இதுதான் தோழர் மதிமாறனின் பதிவு கேட்கும் கேள்விகள்?..

  //இன்றும் நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவுப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்குக் காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை என்பன போன்ற பழமையேயாகும்.//

  இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அருமையான பதிவு தோழரே.. உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  தோழமையுடன்

  முகமது பாருக்

 5. Dr. V. Pandian சொல்கிறார்:

  முகமது பரூக்!
  நான் ஆன்மீகவாதியுமல்ல, அரசியல்வாதியுமல்ல. ஏனெனில் என்னுடைய பிழைப்பிற்கு வேறு தொழிலுண்டு. அதையும் அளவோடு செய்து, அளவோடு பொருள் சேரத்து, மீதமுள்ள நேரத்தில், சமூக செயல்பாடுகளும், சிந்தனைகளும் தான்.

  ஆனால், கண்மூடித்தனமாக அடுத்தவன் சொன்னதெல்லாம் சரி என்றோ, அல்லது எனது தலைவர் சொன்னால் அது சரி என்றோ அலையும் சாதியல்ல நான். நான் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆக, தற்சார்பற்ற கண்ணோட்டம், நான் தொழில் முறையாகவும் பயின்ற ஒன்று.

  தி.மு.க. சீரழிந்ததற்கு அண்ணாவும் ஒரு காரணமென்று திரணாய்வு சொல்கிறது. அது உண்மை. ஆக, அதுபோல பெரியாரிடம் தவறே இல்லை என்று நம்பும் பெரியார் “பக்தனல்ல” நான்.

  ஒருவனுக்கு தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமிருந்தால் தான், அதைக்காக்க சிறத்தை எடுப்பான். வளர்வான். நேர்மையாகவும் நடந்துகொள்வான்.

  பாரப்பனீந்த்தால் வீழ்த்தப்பட்ட தமிழன் தலை நிமிரத்தான், சற்று அவனது பெருமையையும் பேசவேண்டியுள்ளது. தமிழனது அனைத்துக் கலைகளையும் களவாடிக்கொண்டு, இலக்கியங்களில் பேரளவு களவாடிக்கொண்டு, சூத்திரப்பட்டம் கொடுக்கப்பட்டவன், தன்னிலை அறிய, தன்னைப்பற்றி உயர்வாக எண்ண, தமிழனது மெய்யான வரலாறு உதவுகிறது.

  நீங்கள் படித்தது பெரியாரிசமென்றால், நான் சற்றுக் கூடுதலாக வரலாறும் படித்துக் கொண்டுள்ளேன். பெரியார் பல சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டும் பேசியுள்ளார்.

  தனித்தமிழ் நாடு கிடைத்தால்தான் அனைத்து கலை, அறிவியல்களையும் தமிழிலே படிக்க முடியும். ஆனால், பலர் அதற்கு குறுக்கே நிற்கின்றனர். தமிழ் மொழிபற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன். எனக்கே வியப்பாக உள்ளது, தமிழின் அறிவியல் சார்ந்த அமைப்பைப்பற்றி. விரைவில் இணையதளங்களில் வௌியிடுவேன்.

  ஆங்கிலம் கூடத்தான் கிருத்துவத்தை வளர்த்தது. கிருத்துவம் என்ன புத்தறிவு மதமா? அதே ஆங்கிலம் தான் அறிவியலுக்கும் பயன்பட்டது. ஆங்கே பாரப்பான் இல்லை, அறிவுக்குத் தடை போட. இங்கே இருந்தான். இல்லையென்றால், தமிழும் சாதித்திருக்கும்.

  அனைத்தையும் மடலில் எழுதுவது இயலாது. நீங்கள் விரும்பினால் நேரிலும் பேசலாம். தமிழனுக்கு மாபெரும் அறிவியல் பின்புலம் உண்டு. வானியல், அனுக்கொள்கை, வேதியல், இசை, சிற்பக்கலை, கட்டிடக்கலை என்று எவ்வளவோ. இவைஎல்லாம் ஆரியத் தலையீட்டுக்குப் பின்தான் செயலிழந்தது. அப்போது கிரேக்கம் வளர்ந்தது.

  மற்றவரைப் புண்படுத்தாத பெருமிதம் ஒருவனுக்குத் தேவை. நாம் அனைவரும் எந்திரங்களோ அல்லது முனிவர்களோ அல்ல. தமிழனின் வரலாறு அவனுக்கு ஒரு டானிக் போன்றது. தனது தாழ்மை உணர்விலிருந்து மீள அது அவனுக்கு அவசியம்.

  மற்ற மொழியைவிட தமிழைப் பேணவேண்டிய தேவை உள்ளது. இது உலக பண்டைய வரலாற்றின் பெட்டகமும் ஆகும். இது ஒரு இயற்கை மொழி. இதிலிருந்து மனிதகுலம் பெற எவ்வளவோ உள்ளன. மனிதன் எப்படி ஒரு ரோபாட் இல்லை என்று சொல்வீர்களோ, அதேபோல மொழியும் ஒரு கருத்துப்பறிமாற்றக் கருவி மட்டும் இல்லை என்பதும் உண்மை.

 6. Murugan சொல்கிறார்:

  Language is not just for communication and to express feelings, inorder to study the development of different rece one need to look in to the language very carefully , how old it is, how much old literaure it has got and several aspects like that… with out looking at the language we canot read the different race . Then coming to the Dravidian race aspect – if you want to identify ourself as a dravidian we cant do so without tamil language and the old literature also wtihout talking about ancient tamilian culture…

  Christianity came somewhere from middleeast and everybody knows that it is nothing to do with tamilian (dravidian rece and culture) came to india 200 years back..somany tamilians follow this religion now;
  At that time when people came here to spread chirianity religion they learnt tamil first then started to spread their religion; Then the guy who came for this purpose started to perform research on all dravidian languages to convince people here to convert into chirstianity… thats how it worked and somany nasty things they did to convert people.. but the point is without language nothing wouldhave been possible..

 7. Dr. V. Pandian சொல்கிறார்:

  உங்களின் பண்டய தமிழிலக்கியங்களால் ஏன் ஈழமக்களைக் காக்க முடியவில்லை என்று, மாமியார் மருமகள் சண்டைபோன்று, பகுத்தறிவுக்கு அப்பால் நின்று கேட்கின்றீர், பரூக். ஆனால், அங்கே சிங்களன் வரலாற்றின் மீதுதான் கைவைக்கிறான். தமிழனின் தொன்சின்னங்ளை அழித்துவிட்டு, அங்கே புத்தர் சிலைகளை புதைத்து வைக்கிறான், நட்டு வைக்கிறான். தமிழ் இடங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றுகிறான். சிங்களனுக்கு வரலாற்றின் முக்கியம் புரிகிறது. உங்களுக்கோ, பெரியாருக்கோ தெரியவில்லை என்றால் என்ன செய்ய?

  இவ்வுலகைக் கண்டு மிரளுகின்றேன் நான். எங்கும் நேர்மை இல்லை. நாட்டின் தலைவர்களே உண்மை பேசுவதில்லை என்பது எவ்வளவு சீரியசான விடயம் என்று யாரும் உணருவதில்லை. இவ்வுலகம் அதிக நாள் தாங்காது பாருங்கள். ஈழப் படுகொலையே அதற்கு ஒரு சான்று. மன்னின் மைந்தர்களை, வந்தேறிகள் படுகொலை செய்ய, கனிவற்ற உலகமாக இருக்கிறது இந்த பாழாய்ப்போன உலகம்.

 8. முகமது பாருக் சொல்கிறார்:

  //உங்களின் பண்டய தமிழிலக்கியங்களால் ஏன் ஈழமக்களைக் காக்க முடியவில்லை என்று, மாமியார் மருமகள் சண்டைபோன்று, பகுத்தறிவுக்கு அப்பால் நின்று கேட்கின்றீர், பரூக்.//

  இப்படி பதில் வரும் என்றுதான் அடைப்புக்குறிக்குள் இட்டேன்..உங்கள் பதில் மற்றும் உங்களின் எழுத்துக்களில் உள்ள முதிர்ச்சி நன்கு தெரிகிறது..

  நான் சொல்ல வருவது பழம்பெருமை பேசி நம்மையும் நம் அடுத்த தலைமுறையையும் வீணடிக்கவேண்டாம் என்றுதான் சொல்லுகிறேன்..இப்போ நம்முடைய மொழியின் பயன்பாடு அணைத்து துறைகளிலும் இருக்கும் பட்சத்தில் பேசினால் கூட பரவாயில்லை ஆனால் இதை விட ஒரு கொடுமை வேறந்த இனத்திற்கும் நடக்காது அதையும் கேலி கிண்டல் பேசிய பார்பண, தமிழின விரோதி தமிழர்களின் தொலைகாட்சி மற்றும் வட இந்திய தொலைகாட்சிகளை விட எனக்கு கோபம் வருவது நம் இனத்தில் நடக்கும் தேவை இல்லாத சண்டைகளும் ஒற்றுமை இன்மையே ஆகும்..

  உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நானே அழைக்கிறேன் நண்பரே..

  தோழமையுடன்

  முகமது பாருக்

 9. முகமது பாருக் சொல்கிறார்:

  ஒரு (எம்) இன மக்களை கொன்று குவிக்கிறது இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அதை நீங்கள் மாமியார் மருமகள் சண்டையோடு ஒப்பிட்டதை ஏற்றுக்கொள்ள மனம் விரும்ப வில்லை நண்பரே

 10. வேந்தன் சொல்கிறார்:

  பாண்டியன் அவர்களே.. பலே பலே..
  உங்கள் எழுத்தில் எள்ளளவும் ஒளி மறைவு இல்லை.அழகு..
  மிக்க நன்றி. நீங்க சொல்லுவதைதான் மதிமாறன் அவர்களும் சொல்கிறார்.
  உங்கள் நிலைபாடுதான் அவர் கருத்தின் சாராம்சமும். பிறகு ஏன் இவ்வளவு குழப்பம்??
  நீங்கள் சுத்தி சுத்தி, சொல்ல முடியாமல் கடைசியில் குறியீடாக உங்கள் நிலையை சொல்வதைதான் அவர் ஆரம்பிக்கும் முன்னமே தலைப்பாய் வைத்துள்ளார் (தமிழ் தேசியம் – ஒழிக பார்பனியம். வாழ்க பார்பனியம்).
  நீங்க பாவம் மெனக்கெட்டு கடைசியல ஒத்துகொள்கிறீர்.
  பரவாயில்லைங்க. இனிமே என்னத்த விவாதிப்பது. மதிமாறன் என்ன எழுதியிருக்காரோ அதற்கேற்றார்போல் தான் உங்கள் தமிழ்தேசியம் உங்களை அம்மனமாய் நிற்கவைக்கிறது.

  பதிப்புக்கு மறுப்பு தெரிவித்த தோழர்களே,

  இதோ ஒரே ஒரு (முற்போக்கான) தமிழ்தேசியவாதியின் பெரியார் மீதுள்ள வெறுப்பும்,பார்பனிய மோகமும்..
  இதை விட நடைமுறை ஆதாரம் வேண்டுமா????

  கீழ்காணும் பதிவுகள் அனைத்தும், ஒரே தமிழ்தேசிய ஆதரவாளரால்
  முன் வைக்கபட்டது.

  1.பெரியாரிசமும் தோற்று விட்டதாகவே கருதுகிறேன்

  2.பாரப்பான் உட்பட எல்லோருக்குமான, சம உரிமையுள்ள தமிழ்த்தேசம் தான் எங்களது இலக்கு.

  3.அவரத் மொழி பற்றிய புரிதல், தமிழிலக்கியம் சார்ந்த புரிதல் எல்லாம் குறையுடையன. மொழியை அவரு வெரும் கருத்துப் பரிமாற்றக் கருவி என்று தான் வரையறுத்தார்.
  அது மிகவும் தவறான கருத்தென்று நிருவப்பட்டுள்ளது.

  4.அதுபோல பெரியாரிடம் தவறே இல்லை என்று நம்பும் பெரியார் “பக்தனல்ல” நான்.

  3.நீங்கள் படித்தது பெரியாரிசமென்றால், நான் சற்றுக் கூடுதலாக வரலாறும் படித்துக் கொண்டுள்ளேன்.
  பெரியார் பல சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டும் பேசியுள்ளார்.

  4.உங்களுக்கோ, பெரியாருக்கோ தெரியவில்லை என்றால் என்ன செய்ய?

  ஆரம்பத்தில் பெரியாரின் ஆதரவாளராய் காட்டி கொண்டு பிறகு மெல்ல மெல்ல தமிழ் தேசியத்தின் ஓரவஞ்சனையயும்,
  பெரியாரின் மீதுள்ள கடுப்பும்,பார்பனியத்திடம் உள்ள மோகமும் வெளிபடுகிறது.

 11. வேந்தன் சொல்கிறார்:

  பாரப்பனீந்த்தால் வீழ்த்தப்பட்ட தமிழன் தலை நிமிரத்தான், சற்று அவனது பெருமையையும் பேசவேண்டியுள்ளது. தமிழனது அனைத்துக் கலைகளையும் களவாடிக்கொண்டு, இலக்கியங்களில் பேரளவு களவாடிக்கொண்டு, சூத்திரப்பட்டம் கொடுக்கப்பட்டவன், தன்னிலை அறிய, தன்னைப்பற்றி உயர்வாக எண்ண, தமிழனது மெய்யான வரலாறு உதவுகிறது.//

  மொழியுணர்வு பெரியாருக்கு முன்னமே பலரிடம் வந்துள்ளது.

  பார்பனியத்தால் வீழ்ந்த தமிழனை, தமிழன் என்று மார்த்தட்டி தமிழின உணர்வை வரவழைத்தது யார்?

  தன்னிலை அறிய, தன்னைப்பற்றி அறிய பகுத்தறிவை ஊட்டியது யார்???

  தமிழனை தமிழன் என்று உணரவைத்தது யார்???

  மனிதனை மனிதன் என்னும் எண்ணத்தை கோலோச்சி, உங்களின் சூத்திர பட்டத்தை சுருக்கென சுட்ட வைத்தது யார்?

  தமிழ்தேசியம் பேசும் உங்களுக்கு தனி தேசியத்தின் அன்றைய அவசியத்தை உணர்த்தியது யார்??

  ஆனால் பெரியார் என்கிறவுடன் தமிழ் தேசியம் பேசும் நா கசக்கிறது..

 12. வேந்தன் சொல்கிறார்:

  தனித்தமிழ் நாடு கிடைத்தால்தான் அனைத்து கலை, அறிவியல்களையும் தமிழிலே படிக்க முடியும். ஆனால், பலர் அதற்கு குறுக்கே நிற்கின்றனர். தமிழ் மொழிபற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை எழுகித்ததியுள்ளேன். எனக்கே வியப்பாக உள்ளது, தமிழின் அறிவியல் சார்ந்த அமைப்பைப்பற்றி. விரைவில் இணையதளங்களில் வௌியிடுவேன்.//
  உங்க கட்டுரையை படித்து நீங்களே புலாங்கிக்கிறது இருக்கட்டும்..
  தனி தமிழ்நாடு வேணும்னு கேக்கிறீங்க. ஒரே நாட்டுல இருந்துட்டு பக்கத்து மாநிலத்துல தண்ணி கேட்டாலே தரமாட்டேங்கிறான். நிலமும் விவசாயியின் வயிரும் காயுது..
  தனி நாடுன்னு ஆயிட்டா இன்னும் சுத்தம். தண்ணீரின் மூல ஆதாரத்திற்கு என்ன தீர்வு??

  உசுப்பேத்தி உசுப்பேத்தியே இன்னொரு தமிழ்நாட்ட இந்தியாவின் இன்னொரு ராணுவ முகாமாய் ஆக்காம விட மாட்டீங்க போலிருக்கே..

 13. எம். முருகன் சொல்கிறார்:

  ////தமிழ் தேசியம் – ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்////

  என்று நீங்கள் வைத்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது. உண்மையானது என்பதை டாக்டர் பாண்டியன் என்கிற தமிழ் தேசியவாதி நிரூபித்திருக்கிறார்.

  பாண்டியன் ஒருவரது உணர்வு மட்டுமல்ல. இப்படித்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும் தமிழ் தேசியவாதிகள். வெளிபடையாக விவாதித்தால், இப்படித்தான் அம்மணமாக நிற்பார்கள்.

  பெரியாரை விமர்சிக்கிற இவர்கள், தீவிர சாதி உணர்வாளர்களான, தலித் விரோதம் கொண்ட முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை விமர்சிக்க மாட்டார்கள். அவர் பெரியாரையே மிககேவலமாக பேசியவர்தான்.

  பெரியார் தொண்டர்கள் இந்த தமிழ் தேசியவாதிகளின் சதிக்கு பலியாகாமல், பெரியார் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.

 14. நித்தில் சொல்கிறார்:

  தங்களின் பதிவும் பின்னூட்டங்களும் அருமை. வழக்கம் போல் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  நட்புடன்
  நித்தில்

 15. Dr. V. Pandian சொல்கிறார்:

  வேந்தன் மற்றும் முருகன் அவர்களே!

  ஏனிந்த வக்கிரம் என்மீது? பெரியாரை விமர்சிப்பதாலேயே நான் பெரியார் எதிரியாகிவிடுவேனா? இது என்ன குறுகிய பாரப்வை? பெரியாரே அடிக்கடி என்ன சொன்னார் தெரியுமா?

  “நான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதே, நீயும் சிந்தனை செய்துபார். உடன்பட்டால் எடுத்துக்கொள். ஆனால், சிந்திப்பது அவசியம். ”

  எனவே நீங்கள் தான் பெரியாரைக் கடைபிடிக்கவில்லை. நான் பெரியாரின் கொள்கைப் பேரன் தான். நான் பெரியாரின் எதிரியல்ல! அல்ல!! அல்ல!!!

  அதே நேரம் நான் பெரியாரின் பக்தனுமல்ல. அவர் நம்மிடம் எதிர்பார்த்ததும் அது தான்.

  நீங்களே எடுத்துக்காட்டியது போல, நான் எழுதியதெல்லாம் பெரியாரே அன்றே சொன்னபோது, நான் பெரியாரைத் தூற்றவேண்டிய அவசியமென்ன? நான் தூற்றவில்லை. அவரிடம் எனக்கு உடன்படாத விடயங்களை விமர்சித்தேன். அவ்வளவே!

  உங்கள் மதிமாறன் என்றாவது தமிழத்தேசியம் தேவைதான் என்று பெரியாரோடு ஒத்துப்போய் பேசியுள்ளாரா? தமிழ்த்தேசிய வாதிகளைச் சாடினாரே ஒழிய, தமிழ்த்தேசியம் தேவைதான் என்று பெரியாரைப்போல சொன்னாரா? இதை வைத்து மதிமாறனை பெரியாரின் எதிரி என்று ஏன் நீங்கள் அழைக்கவில்லை? உங்களின் பின்புலம் தடுக்கிறதா?

  பெரியார் இருந்த காலத்தைவிட இப்போது தமிழ்த்தேசியத்திற்கான தேவை பன்மடங்கு மிகைத்துள்ளது. தமிழக மீனவர்கள் சிங்களனால் கொலை செய்யப்படுகின்றனர். இந்தியா கேட்க மறுக்கிறது. நம்மையும் செயல்பட விட மறுக்கிறது. கச்சத்தீவு பரிபோனது. தமழனுக்கு தண்ணீர் பெற்றுத்தர வக்கற்ற அரசாக இந்திய அரசு உள்ளது. இந்தியா என்ற பெயரில் கண்டவனும் அளவில்லாமல் தமிழகத்தில் நுழைகின்றான். மேலும் ஈழக்கொடுமைக்குப் பின்னும் யாராவது தமிழ்த்தேசியத்திற்கு எதிராகப் பேசினால் அம்மனிதரை என்னவென்று சொல்ல. உம்மிருவரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

  தமிழ்த்தேசம் அடைந்தால் தண்ணீர் ஞாயமான அளவில் நமக்கு கிடைக்கும். இந்த அடிப்படை உண்மையை உணராத பகுத்தறிவாளியா நீங்கள்?

  தமிழகத்தை இன்னொரு ராணுவமுகாமாக நான் ஆக்கப்போவதாக சொன்னீர்கள். ரஷ்யாவிலிருந்து 10 நாடுகள் போரில்லாமல் பிரிந்தன, கோர்பச்செவ் காலத்தில். அந்த அளவு யோக்கிய தேசம் அல்ல இந்தியா என்பது நாமெல்லாம் அறிந்ததே! ஆனால், ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஒரு காலத்தில் இருந்தால் அதை செய்ய தவரமாட்டேன்.

  “பார்ப்பான் உட்பட எல்லோருக்குமான, சம உரிமையுள்ள தமிழ்த்தேசம் தான் எங்கள் இலக்கு” என்று நான் எழுதியதை, அது ஏதோ ஒரு குற்றம் போல பதிவு செய்கின்றீர்கள். என்ன செய்ய வேண்டும் என்கின்றீர்கள்? அவர்களை அழித்து விடுவீர்களா? தமிழ்த்தேசம் அமைந்தால் அவர்கள் எங்கே போவார்கள்? பார்ப்பனீயத்தை அனுதினமும் திட்டுகிற நான், ஒரு தன்னிலை விளக்கமாக, பெருந்தன்மையோடு எழுதினால் கூட, நான் ஒரு பார்ப்பன அடிவருடியாகி விடுவேனா? பார்ப்பான் என்னை பாஸிஸ்ட் என்கிறான். நீங்களோ என்னை பாரப்பன அடிவருடி என்கின்றீர்கள். இந்த இரண்டு கருத்துகளுமே உண்மையற்றவை என்பது மட்டும் உருதி. அவை எழுதுபவரின் பின்புலத்தாக்கத்தால் வருபவை.

  என்னுடைய கருத்துக்களைப் பட்டியலிட்டதற்கு நன்றிகள். ஆனால், முந்தய பதிவுகளில் எனது கருத்தக்கோவையிப் ஒருசில வரிகளைமட்டும் பிரித்தெடுத்து, கருத்து சொல்லி வக்கிரம் கொண்டீர்கள்.

  முதிர்ச்சி பெருங்கள் தோழர்களே!

 16. Dr. V. Pandian சொல்கிறார்:

  பரூக்!
  பழம்பெருமை பேசுவதில் தவறில்லை. அதே நேரம், நமது பழைய குறைகளையும் ஆய்வு செய்து. உரிய முறையில் களைய முற்பட வேண்டும். எனவே, பழமை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் வாரட்டுவாதியாக வேண்டாம் நாம்.

  என்னுடைய மின்னஞ்சல்; porkkaiponds@yahoo.co.in.

  அங்கு தொடர்பு கொள்ளுங்கள் தோழரே. எனது தொடர்பு எண்ணைக் கொடுக்கின்றேன்.

  தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கான காரணம் புரிந்தால், மீட்சி எளிது. இங்குதான் வரலாறு உதவுகிறது. உலகின் மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகம். இங்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் இயல்பானவை தான், அது அந்தத் தொண்மையோடு தொடர்புடையவைதான். மருட்சி வேண்டாம். நாம் மீள முடியும். ஈழம் நமக்கு அந்த வாய்ப்பை எளிதாக்கி இருக்கிறது.

  படித்தவர்கள் எல்லோரும் இந்த திசையை நோக்கி தளர்வில்லாமல் செயல்பட்டால் நாம் மிண்டும் ஒரு பெருமைமிக்க இனமாக மீண்டெழுவோம். அது உறுதியாக நடக்கும்.

 17. எம். முருகன் சொல்கிறார்:

  ///பெரியாரை விமர்சிக்கிற இவர்கள், தீவிர சாதி உணர்வாளர்களான, தலித் விரோதம் கொண்ட முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை விமர்சிக்க மாட்டார்கள். அவர் பெரியாரையே மிககேவலமாக பேசியவர்தான்.////

  எல்லாவற்றிற்கும் சமாதானம் சொல்ல முயற்சித்த பாண்டியன் இந்த வரிகளை ஏன் பொருட்படுத்தவில்லை?

 18. Dr. V. Pandian சொல்கிறார்:

  முருகன்!
  நான் கன்னடனைத் திட்டலாம், ஆந்திரனைத் திட்டலாம், மலையாளியைத் திட்டலாம். அவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு வௌியே இருப்பவர்கள். ஆனால், அதே ரீதியில் நம்மினத்தில் உள்ள அலட்டல்/அதட்டல்/மிரட்டல் பேர்வழிகளை விமர்சித்தால் பிளவு இன்னும் பலமாக இருக்கும். நாம் அனைவரும் திருந்த வேண்டும் என்பது தான் நமது குறிக்கோள்.

  எனவே, தமிழரில் யாரையைும் சாதியால் சாடாமல், செயல்களை மட்டும் விமர்சிப்போம். அதுவே, அவர்களுக்கான ஒரு அறிவுறையாக இருக்கும். இந்த நேரத்தில் சொல்கிறேன், பார்ப்பனீயம் என்பது ஒரு கொடூரமான கொள்கை அதனால் தான் அவர்களையும் (பார்ப்னீயத்தை கடைபிடிப்பவர்களை) பெயரிட்டு தீட்ட வேண்டியுள்ளது. ஆனால், தேவர்களின் செயல் வெறும் “சாதி வெறி” மட்டுமே. இது பார்ப்பானைப் பார்த்து நாமெல்லாம் கற்றது தான்.

  எனவே மேலும் வெறுப்பைக் கூட்டாமல், அனைவரையும் திருத்தப் பார்ப்போம். நாமெல்லாம் ஓரினமாக இம்மண்ணில் பல்லாண்டுகள் வாழ வேண்டியவர்கள் தானே!

  ஈழத்தைக் காட்டிக் கொடுத்ததால் தான் பார்ப்பான் மீது எனக்கு தற்போது கடும் கோபம் உள்ளது. மேலும் அவர்களது மேலாண்மையும், அடக்குமுறையும் நம்மீது இன்றும் பலமாகத்தான் உள்ளது.

  ஆனால், மனிதம் என்ற அடிப்படையில் நாம் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பது தான் முறையானது.

  As I am leaving for outsation work, I am terminating my responses wih this one.

 19. வேந்தன் சொல்கிறார்:

  //தமிழக மீனவர்கள் சிங்களனால் கொலை செய்யப்படுகின்றனர். இந்தியா கேட்க மறுக்கிறது. நம்மையும் செயல்பட விட மறுக்கிறது//

  யார் உங்களை செயல்பட மறுத்தது????
  தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்??
  நீங்களும் அமெரிக்காவின் முதுகை சொரிந்து கொண்டு, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் பகைமையை மறந்து எப்படி இந்தியாவுடன் கைகோர்த்து ஈழத்தை ஆளும் வர்க்க நலனுக்காய் அழிக்கிறதோ, அவ்வாறே தமிழ்நாட்டின் ஆளும் வர்க்க நலனுக்காக, புலிகளை உங்கள் வீட்டு பூனையாய் அல்லவா மாற்றியிருப்பீர்..
  தமிழ்தேசியம் பேசும் உங்களால் முதலில் தண்ணீரை வாங்க முடியுதா??
  இவ்வளவு வீர வசனம் பேசும் நீங்கள் உண்ணாநிலை
  போராட்டம்னு உடலில் கீறல் விழாமல் போராட்டம் நடத்துவீர்கள்.
  ஆனால் “ராணுவத்தை எதிர்கொள்ளும் தேவை இருந்தால் அதையும் செய்ய மாட்டேன்” என்று வீரவசனம் வேறு. கிழிச்சீங்க அதான் பாத்தோமே, ஈழ மக்களை வைத்து, ஈழ மக்களின் பிணங்களின் மீது மொயிக்கும் ஈயை போல் பிணக்குவியல் மீது நின்று கொண்டு அம்மாவுக்கு போடுங்க, அய்யாவுக்கு போடுங்கன்னு ஓட்டு கேட்டவர்கள் தானே தமிழ்தேசியவாதிகள்.

 20. வேந்தன் சொல்கிறார்:

  “பார்ப்பான் உட்பட எல்லோருக்குமான, சம உரிமையுள்ள தமிழ்த்தேசம் தான் எங்கள் இலக்கு” என்று நான் எழுதியதை, அது ஏதோ ஒரு குற்றம் போல பதிவு செய்கின்றீர்கள். என்ன செய்ய வேண்டும் என்கின்றீர்கள்? அவர்களை அழித்து விடுவீர்களா? தமிழ்த்தேசம் அமைந்தால் அவர்கள் எங்கே போவார்கள்? பார்ப்பனீயத்தை அனுதினமும் திட்டுகிற நான், ஒரு தன்னிலை விளக்கமாக, பெருந்தன்மையோடு எழுதினால் கூட, நான் ஒரு பார்ப்பன அடிவருடியாகி விடுவேனா? //

  “பெரியாரே தமிழ்தேசிய கோரிக்கையை முன் வைத்தார்” என்று முழங்கி பெரியாரை துணைக்கழைக்கும் தோழரே!
  இதுதான் பெரியாரின் தமிழ்தேசியமா?
  பெரியாரின் தமிழ்தேசியத்தின் அவசியம் என்ன?

 21. வேந்தன் சொல்கிறார்:

  //தமிழரில் யாரையைும் சாதியால் சாடாமல்,
  செயல்களை மட்டும் விமர்சிப்போம்.//
  மிக சரி. ஏனெனில் ஆதிக்க சாதியினர் செய்யும் செயலுக்கு ஒட்டு மொத்த மக்களையும் விமர்சிப்பது தவறுதான். ஆனால் அம்மக்களை தூண்டும் ஆதிக்க சாதியின் தலைவரை, அவரின் ஆதிக்கவெறி செயல்களை விமர்சிப்பதும் தவறா?
  அவர்களை தூண்டிய அவர்களின் சாதிதலைவரை விமர்சிக்க உங்களுக்கு நேர்மை இருக்கிறதா?? அல்லது குறைந்தபட்சம் திரானி இருக்கிறதா??

  //அதே ரீதியில் நம்மினத்தில் உள்ள அலட்டல்/அதட்டல்/மிரட்டல் பேர்வழிகளை விமர்சித்தால் பிளவு இன்னும் பலமாக இருக்கும். நாம் அனைவரும் திருந்த வேண்டும் என்பது தான் நமது குறிக்கோள்.//

  இதைதான் தமிழ் தேசியவாதிகளின் அயோக்கியத்தனம் என்று மதிமாறன் சுட்டிக்காட்டுகிறார்.
  “அலட்டல்/அதட்டல்/மிரட்டல் பேர்வழிகளை” விமர்சித்தால் பிளவு இன்னும் பலமாகும் என்று “பல்லிளித்து” தாழ்த்தப்பட்ட மக்களின் கொடுமைகளை உங்கள் முந்தானையால் மூடிகொள்வது தான் தமிழ்தேசியவாதிகளின் லட்சணமா?

  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமலிருந்தால் அவர்களிடம் பிளவு பலமாகாதா? உங்கள் மௌனம்தான் பிளவை ஒட்டவைக்கும் பெவிகாலா? அல்லது ஆதிக்கசாதியிடம் உள்ள கள்ள உறவுதான் கள்ளமௌனம் சாதிக்க காரணமா?

  வீர தமிழினம் என்று நரம்பு புடைத்து உரக்க பேசும் நீங்கள் ஆதிக்க சாதிவெறியர்கள் என்று சொல்ல முடியாமல் “அலட்டல் /அதட்டல்/மிரட்டல் பேர்வழிகள்” என்று செல்லமாக, அவர்களை “நீ ரொம்ப குறும்பு” என்கிற பாணியில் கூறுவது போல் அவர்களின் செயல்களை கூறுகிறீர்களே, இதுதான் உங்கள் தமிழினத்தின் பாரம்பர்ய வீரமோ??

  அவர்களை விமர்சித்தால் பிளவு இன்னும் பலமாக இருக்கும்.
  அப்ப பெரியாரை விமர்சித்தால் பிளவு ஒட்டிகொள்ளுமா?
  இதுதான் பெரியாரை விமர்சிக்கும் உங்கள் நேர்மையா?
  “பெரியாரின் கொள்கை பேரன்” என்று நெத்தியில் எழுதிக்கொண்டு நேர்மை, அறிவு, என்கிற பெயரில் பெரியாரை விமர்சிக்கிறீர்கள்.
  பெரியாராவது தமிழ்தேசியத்தை முன்மொழிந்தார். இருந்தாலும் அவரை நேர்மையாக, பகுத்தறிவுடன் விமர்சிக்கும் நீங்கள் “தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்” என்று இந்திய தேசியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த, இந்திய தேசியத்தை தூக்கிபிடித்த முத்துராமலிங்கத்தை பற்றி விமர்சிக்காமல் நழுவுகிறீர்களே? உங்கள் நேர்மையும் பகுத்தறிவும் எங்கே? அல்லது உங்கள் சாதி உங்கள் வாயை அடைக்கிறதா?

  இதுதான் தமிழ்தேசியவாதிகளின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், கயமைத்தனம் என்பது.

  இனி உங்களுக்கு மறுப்பு அதிகம் தேவை இல்லையென்றே கருதுகிறேன்.
  ஏனெனில் நீங்களே தமிழ்தேசியவாதிகளின் முழக்கத்தை வாக்குமூலமாய் தருகிறீர்கள்..

  இனி நாங்கள் இருவரிகள் எழுதினால் போதும் சும்மா சூப்பரா நீங்களே உங்களை பத்தி வாந்திஎடுப்பீங்க ..
  நீங்க ரொம்ப நல்லவருங்க..

  //As I am leaving for outsation work, I am terminating my responses wih this one.//

  கொஞ்சம் சீக்கிரமா வந்துடுங்க. ஆதாரம் இல்லாத கருத்து வாதத்துக்கு உதவாது. உங்கள் மூலம் எங்களுக்கு நிறைய ஆதாரம் தேவைபடுகிறது..

  மிக்க நன்றி..

 22. Dr.S.Thiru சொல்கிறார்:

  தோழர் மதிமாறன்!

  தங்களின் எழுத்துக்களை மிகவும் மதிப்பவன் என்ற முறையில் இந்தப் பதிவு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதோடல்லாமல் கடந்த மூன்று நான்கு பதிவுகளின் பின்னால் நுண்ணரசியல் உள்ளதாக அய்யம் எழுவதால் வருத்தமும் ஏற்படுகிறது. குறிப்பாக கருந்திணை ” http://karunthinai.blogspot.com/2009/06/1.html ” மற்றும் கீற்று இணையத் தளங்களில் ம க இ க வினரின் மீது கடும் விமர்சனம்” http://www.keetru.com/literature/essays/athiradiyaan.php” வைக்கப்பட்டது முதலாக உங்கள் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை ( கமுக்க திட்டமாக) முன்வைத்து இடப்படுவதாக, செல்வதாக தோன்றியது. தந்தை பெரியாரை விட பனகல் சிறந்தவர் என்னும் இரண்டு வரி ஒரு பதிவில், பின்னர் சிதம்பரம் போராட்டத்தை முன்னிறுத்தி ம க இ கவினரை முதன்மைப்படுத்திய இன்னொரு பதிவு இப்போது தொடர்ச்சியாக தமிழ் தேசியர்கள் என பொத்தாம் பொதுவாக எழுதப்பட்ட அரைவேக்காட்டுத்தனமான, அவதூறான பதிவுகள் என என்ன ஆயிற்று மதிமாறனுக்கு!

  தமிழ் தேசியம் என்ற கருத்தியலின் மூலவர் தந்தை பெரியார் என்பதும் அது ஒரு வரலாற்றுத்தேவை என்பதையும் காலம் சொல்லப் போகிறது என்பது ஒரு புறம், பார்பனியர்கள் எந்த வகையில் யார் பின்னால் நின்று கொண்டு தடுத்தாலும், அல்லது யார் யார் எந்தெந்த தத்துவங்களை முன் வைத்து இறுதியில் பார்ப்பனியர்களுக்கு குடை பிடித்தாலும், புளுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்தியப் பார்ப்பனிய தேசம் தானே உதிர்ந்து போகும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த சில பதிவுகளில் உங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரான கேள்விகள் குழப்பமூட்டுவதாக மட்டுமல்லாமல், தற்குறித்தனமாகவும் (மன்னிக்கவும்) உள்ளதால் அதைப்பற்றிய விமர்சனங்கள் நேர விரயம் என்றே கருதுகிறேன்.

  ஒரு வேளை உங்கள் வலைத்தளத்தின் தலையான இடத்தில் புகைப்படத்தில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இளையராசா சொன்னது போல் “நான் இந்தக் குப்பைகளுக்கு மேலே” என்று சென்று கொண்டுள்ளீர்களோ! ” சேர்க்கை சரியில்லையோ என எண்ணவே தோன்றுகிறது.

  வருத்தத்துடன்,
  முனைவர். ச. திரு

 23. எம். முருகன் சொல்கிறார்:

  ////ஒரு வேளை உங்கள் வலைத்தளத்தின் தலையான இடத்தில் புகைப்படத்தில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இளையராசா சொன்னது போல் “நான் இந்தக் குப்பைகளுக்கு மேலே” என்று சென்று கொண்டுள்ளீர்களோ! ” சேர்க்கை சரியில்லையோ என எண்ணவே தோன்றுகிறது////

  திரு என்று மரியாதையா பேரு வைச்சிக்கிட்ட மட்டும் போதாது. அதற்கு பொருத்தமா நடந்துக்கனும். மதிமாறன் தலித்துகளோடு இருப்பதுதான் சேர்க்கை சரியில்லை என்று சொல்கிறீர்களா? இந்தக் கட்டுரையை மதிமாறன் தலித் முரசில் 2002 ஆண்டு செப்டம்பர் மாதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். நீங்கள் பின்னூட்டம் இட்டு இருக்கிற இந்த கட்டுரை பெரியார் எழுதியது. அதுவும் தலித் முரசு புனித பாண்டியன் வெளியிட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். பிறகு மதிமாறன் மீது ஏன் பாய்கிறீர்?

  உங்களுக்கு எல்லாம் எவன் முனைவர் பட்டம் கொடுத்தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்க வேண்ய ஆளு நீ்ங்க.

  பெரியாரிஸ்டா இருந்து கொண்டு, தலித் பிரச்சினைகளுககு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறார் மதிமாறன். இப்படி இருக்கிற பெரியாரிஸ்ட் ரொம்ப அரிது.
  அதுதான் உங்களுககு எரிச்சல். ஏன்னா பெரியாரிஸ்டு சொல்லிக்கிட்டு பலபேர் தலித் பிரச்சினையில் அக்கறை எடுத்துக்கறது இல்ல. சாதி வெறியனாக இருக்கிறார்கள். அதுக்காகத்தான் தமிழ் தேசியம் பேசறதும்.

  இதுபோன்று தமிழ் தேசம் பேசுவார்கள். ஆனால் இந்திய தேசியத்தில் மந்திரியாக இருக்கிற ராமதாசுக்கு சொம்பு தூக்குவாங்க… இது பெரியாருக்கு எதிரானது இல்லியா?
  முதலில் ஒழுங்க பெரியாரை படிங்க. அதுக்கப்புறம் தமிழ் தேசியத்தில் பெரியாரின் பங்களிப்பு பற்றி பேசுங்க. உங்களை மாதிரியான ஆட்களால்தான் பெரியாருக்கு கெட்ட பெயர்.

 24. ஏகன் சொல்கிறார்:

  சில வன்னியர்களும் முதலியார்களும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் செய்கிற தமிழ் தேசிய தமாசுகளை பற்றி நீங்கள் எழுத வேண்டும்.

  பாபாசாகேப் அம்பேத்கரை ஒரு அறிஞராக கூட மதிக்காத முதலியார் பெரியாரிஸ்ட் ஒருவர், உங்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சியில் தன்னுடைய அல்லகைகளை வைத்துக் கொண்டு இணையத்தில் உங்களுக்கு எதிரான அவதூறுகள் பரப்பி வருகிறார்கள்.

  இப்போது பார்ப்பனர்களை விடவும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற சாதி வெறியர்களும், தலித் விரோதிகளும்தான் உங்கள் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள்.

  இன்னும் தமிழ் தேசியத்தின் பேரில் உங்கள் மீது படை எடுத்துவருவார்கள் பல சாதி வெறியார்கள்.

 25. எம். முருகன் சொல்கிறார்:

  உங்கள் மீது இய்க்குனர் சீமான் மிகுந்த மரியாதையாக இருக்கிறார். நான் அவரிடம் பேசும்போது கூட உங்களைப் பற்றி மரியாதையாக குறிப்பிட்டார்.

  மும்பையில் உங்கள் புத்தக விழாவில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் உங்களுககு அவருக்கும் சிண்டு முடியும் நோக்கில் பல அவதூறுகளை பரப்புகிறார்கள் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற ஜாதி வெறியார்கள்.

  நீங்கள் தமிழ் தேசியவாதிகளை விமர்சனம் பண்ணி எழுதியதே சீமானை குறிவைத்துதான் என்று அவதூறு பரப்புகிறார்கள்.

  அப்படியானால் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என்று பெரியார் சொன்னார். அதை பெரியாரிஸ்டுகள் தீவிரமாக நம்புகிறார்கள. பிரச்சாரம் செய்கிறார்கள்.

  அப்படியானல் விடுதலைப் புலிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான், அதற்காக அவர்களையும் அதன் தலைவரையும் பெரியாரிஸ்டுகள்- முட்டாள்கள், காட்டுமிரண்டிகள் என்று சொல்கிறார்கள் என்று அர்த்தமாகுமா?

  இதுபோன்ற அவதூறுகளை பரப்பும் முட்டாள்கள் இருக்கும் வரை, பார்ப்பனர்களுக்கு பிரச்சினை இல்லை.

  இதுபோல் முட்டாள் தனமாக பேசி பேசிதான் ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இவர்கள் ஏமாற்றினார்கள்.

  இந்த பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் மறைந்து இருக்கிற இந்த முட்டாள் ஜாதி வெறியர்களை, காழ்ப்புணர்ச்சிகாரர்களை அம்பலப்படுத்தி நீங்கள் எழுத வேண்டும்.
  அப்போதுதான் பெரியார் பெயருக்கு இவர்கள் ஏற்படுத்துகிற இழுக்கை துடைக்க முடியும்.

 26. Dr.S.Thiru சொல்கிறார்:

  /மதிமாறன் தலித்துகளோடு இருப்பதுதான் சேர்க்கை சரியில்லை என்று சொல்கிறீர்களா?/

  நிச்சயமாக இல்லை. அவர் யாருக்காகவோ எதற்காகவோ குடை பிடிக்கப் பார்க்கிறாரோ என்பது என் அய்யம்! அந்தப் பார்ப்பனியவாதிகளுக்கு மதிமாறனின் எழுத்துகள் துணை போகிவிடக் கூடாது என்பதுதான் என் வருத்தம்!

 27. வேந்தன் சொல்கிறார்:

  முனைவர் அவர்களே, உங்கள் பதிப்பில் முனைவருக்குண்டான முதிர்ச்சி தெரியாமல் மொன்னை தனமே உள்ளது.
  இக்கட்டுரை ”-தலித் முரசு 2002 செப்டம்பர் இதழுக்காக எழுதியது” ஏற்கனவே குறிபிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தற்போதுதான் ஏதோ உள்நோக்கம் கொண்டு எழுதபட்டது போல் கூறுகிறீர்.

  படிக்காதவர்கள் தன் சாதியை திறந்த வெளியில் சென்னை குப்பை லாரியை போல் நாற்றத்தை காட்டுகின்றனர்.
  படித்தவர்கள் தன் சாதிய பற்றை தமிழன் என்கிற Perfume மை பயன்படுத்தி, தன் சாதியின் நாற்றம் வெளியே வீசாமல் பார்த்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிகனியாய் உங்களின் மூலம் தெரிகிறது.
  மேற்க்கண்ட விவாதங்களில் ஒடுக்கபடும் மக்களின் மீதான கொடுமைகளில் தமிழன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று தெளிவாய் Dr.பாண்டியன் அவர்களின் வாக்குமூலத்தின் மூலன் டார்ச்சு வைத்து அடித்து காட்டிய போதிலும், அதை பற்றி பேசாமல் இன்னும் தமிழ்,தமிழ் தேசியம் என்று பொத்தாம் பொதுவாய் பேச இன்னும் எத்தனை முனைவர்கள் வரபோகிறீர்??

  //தமிழ் தேசியம் என்ற கருத்தியலின் மூலவர் தந்தை பெரியார் என்பதும் அது ஒரு வரலாற்றுத்தேவை என்பதையும் காலம் சொல்லப் போகிறது //

  உங்கள் ஆண்ட பறம்பரையினரின் ஆளும் கனவிற்க்கு பெரியாரை இழுப்பதால் தான் பெரியாரை தலித்துகளின் எதிரியாக நீங்களே சித்தரிகிறீர்கள்.உங்களுக்கு தேசியம் வேண்டுமானால் செட்டி நாடு,கொங்குநாடு என்று கோருங்கள்.பெரியாரை விட்டு விடுங்கள்.

  //இந்தியப் பார்ப்பனிய தேசம் தானே உதிர்ந்து போகும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த சில பதிவுகளில் உங்கள் தமிழ் தேசியத்திற்கு எதிரான கேள்விகள் குழப்பமூட்டுவதாக மட்டுமல்லாமல், தற்குறித்தனமாகவும் (மன்னிக்கவும்) உள்ளதால் அதைப்பற்றிய விமர்சனங்கள் நேர விரயம் என்றே கருதுகிறேன்.//

  உங்கள் தமிழ்தேசியத்தின் பின்புலம் என்ன?? சமத்துவமா..சம்தர்ம்மா??
  அதுவும் பார்பனிய தேசியம் தான். ஆனால் சிறு மாற்றம் ”பார்பனிய தமிழ் தேசியம்”. பார்பானை மட்டும் எதிர்ப்பது பார்ப்பனியம் அன்று. ஆதிக்க சாதிய மனோபாவமே பார்பனியம். பார்பனிடம் விடுதலை வாங்கி ஆண்ட பறம்பரயினர் தமிழர் மறுபடியும் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தானே உங்கள் பார்பனிய தமிழ் தேசியம். ஆனால் ஒடுக்கபட்டவர்களின் நிலை ஆங்கிலேயனுக்கு அடிமையான தேசியமாக இருந்தாலும், இந்திய தேசியமாக இருந்தாலும், தமிழ் தேசியமாக இருந்தாலும் தன் நிலை மாறபோவதில்லை. தமிழ் தேசியம் கிடைத்தால் அந்த லைசன்ஸை வைத்து கொண்டு இன்னும் ஒடுக்குமுறை அதிகமாகி தொடரும். ஏற்கனவே ஆண்டபறம்பரையினரின் அலப்பறைகளும்,அலும்புகளும் தாங்க முடிவதில்லை. இதில் உங்களை போன்ற படித்த அறிவாளிகள் வேறு..
  விடியும் தமிழ்நாடு..

 28. கண்ணன் சொல்கிறார்:

  ஏற்கனவே அதி அசுரன் என் ஒரு அரை வேக்காடு, தோழர் மதிமாறன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில் அவதூறு செய்திருந்தார். பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு. இப்போது அவர் வேலையை சில முனைவர்கள் (முனைவர் திரு போன்றவர்கள்) செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  தோழர் மதிமாறன் பெரியார் திகவை மென்மையாக தோழமையாக மிகவும் தயக்கத்தோடுதான் அவர்களின் தேர்தல் நிலைபாட்டை சுட்டிக் காட்டினார். விமர்சிக்க கூட இல்லை.ஆனால், அவரை மிக கேவலமாக அவதூறு செய்தார் அதிஅசுரன்.

  விபிசிங் விவகாரத்தில், மகஇகவிற்கு ஆதரவாக பெரியார் திகவின் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரனை கடுமையாக விமர்சித்தும், பெரியார் திகவின் தேர்தல் நிலைபாட்டை கண்டனம் செய்தும் தோழர் தமிழச்சி சிறப்பான இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தார்.
  அவரை இதுவரை ஒரு வார்த்தைக்கூட கண்டித்தோ, அவருக்கு பதில் சொல்லியோ எழுதவில்லை இந்த அதி அசுரன் என்கிற காழ்ப்புணர்ச்சிகாரர்.
  ஆனால் மதிமாறனை மட்டும் மிக கேவலாமா எழுதினார். அதற்கு என்ன காணரம்? மதிமாறன் வன்னியர், முதலியார், செட்டியார் போன்றபிற்படுத்தப்பட்ட சாதிகளை பெயர் சொல்லி விமர்சிப்பதால்தான்.

  இதுபோன்ற விமர்சனங்களை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்வதில்லை. அப்படி விமர்சிப்பவர்களையும் எதிர்ப்பதுதான் பெரியார் பார்வையா? இது பெரியாருககு எதிரானது இல்லையா? இப்படிபட்ட உணர்வு கொண்ட இவர்களால்தான் பெரியாருக்கு அவப் பெயர்.

 29. Dr.S.Thiru சொல்கிறார்:

  /மதிமாறன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில்’ …… பெரியாரையும்
  துணைக்கு அழைத்துக் கொண்டு இப்போது….
  சில முனைவர்கள் (முனைவர் திரு போன்றவர்கள்)
  செய்து கொண்டு இருக்கிறார்கள்.’/

  மிக மிக வருத்தமளிக்கும் அவதூறு இதுதான்.
  பரவாயில்லை. தோழர்களே! ஒரு பெரியாரியவாதி என்கிற முறையில் என் புரிதல்கள் இதுதான்.

  தந்தை பெரியார் தன் வாழ் நாள்
  குறிக்கோள்களாக கொண்டவை அய்ந்து:

  சாதியை ஒழிக்க வேண்டும்
  மதத்தை ஒழிக்க வேண்டும்
  கடவுளை ஒழிக்க வேண்டும்
  காங்கிரசை ஒழிக்க வேண்டும்
  பார்ப்பானை ஒழிக்க வேண்டும்

  சாதி, மதத்துக்குள் அடங்கியது. மதம் கடவுளுக்கு ஆட்பட்டது.
  கடவுள் பார்ப்பானுக்கு அடங்கியவர். பார்ப்பானை ஒழித்தால் கடவுள்,
  மதம்,சாதி ஆகியவை ஒழிக்கப்படும். பார்ப்பானை ஒழிக்க வேண்டும்
  என்றால் பெரியாரின் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் கொண்ட காங்கிரசை ஒழிக்க வேண்டும்.

  ஆனால் இன்றைய கால கட்டத்தில் பார்ப்பனியம்
  ஆதிக்கம் செலுத்தும் (காங்கிரஸ்,பாரதிய சனதா,மார்க்சிய கம்யூனிஸ்டு முதல் அ தி மு க வரை), மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், மா லெ குழுக்கள், போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை – சுருக்கமாக இந்திய பார்ப்பனிய தேசம்
  ஒழிக்கப் பட வேண்டும் என நான் சொல்லவில்லை. தமிழ் நாடு தமிழருக்கே என தந்தை பெரியார்தான் சொன்னார்.

  பார்ப்பனியத்தை இனங்காண, இட ஒதுக்கீட்டை
  விட அருமையான வழி இருக்கிறது. இட ஒதுக்கீட்டை விட்டுத் தள்ளுங்கள்! இருக்கவே இருக்கிறது பார்ப்பானுக்கு-அமேரிக்காவும், அம்பானிகளும்! இந்தியாவை ஒழிக்க வேண்டும் என கூறிப் பாருங்கள்! செட்டி நாடு, கொங்கு நாடு என பார்ப்பான் குதிப்பான்!

  ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை, நிகரமைய (சோசலிச), பொதுமைய (கம்யூனிச) சமூக அமைப்புக்கான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே.
  ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம்.

  இந்த அமைப்புக்குள்ளாகவே இருந்து கொண்டு, வர்க்கம், தேசத்தை கடந்தது, வர்க்கத்தை முன்னெடுக்க வேண்டும்,
  வர்க்கத்தை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் என்பதல்லாம் பார்ப்பனியம் த்ன் இருப்பை தற்காத்துக் கொள்ளும் ஒர் உத்தியே! இந்த மாய்மாலங்களையெல்லாம் பெரியாரியவாதிகள் நன்கு அறிவர். எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியவாதிகளும் நன்கு அறிவர்.

  தோழர்களே! இது வரை உலகம் கண்டிராத மிக மிக கொடூரமான முறையில் ஒரே நாளில் 25 ஆயிரம் தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள் என ஈழத்தில் படுகொலை செய்யப் பட்டது
  என்ன இராச பக்சேவுக்கு உதவுவதற்க்கு மட்டுமா என்ன! அது தமிழ் தேசியம் பேசும் இந்திய தமிழர்களுக்கு, பெரியாரியவாதிகளுக்கு இந்தியப் பார்ப்பனியம் அளித்த கடுமையான எச்சரிக்கையல்லவா!

  தமிழ் தேசியம் பார்ப்பனிய தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பனிய தேசியத்தை உள்ளடக்கிய வன்னிய தேசியம், தேவர் தேசியம் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் எதிர்த்தாக வேண்டும்.

  ஏன் தந்தை பெரியார் கூட நாயக்கர் தேசியம் தான்.
  அவர் தான் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் கடந்து தமிழ் தேசியத்தியனை முன்னெடுத்தவர் என்பதாலும் மீண்டும் மீண்டும் இன்ன பிற வெங்காய தேசியங்களைக் காட்டி தமிழ் தேசியத்தை மதிமாறன் போன்ற தோழர்கள் இகழ்வதை, தந்தை பெரியாரை இகழ்வது போல என்பதால் தான் நான் என் வருத்ததை இங்கு வெளியிட்டிருக்கிறேன். நன்றி!

 30. வேந்தன் சொல்கிறார்:

  இந்த அமைப்புக்குள்ளாகவே இருந்து கொண்டு, வர்க்கம், தேசத்தை கடந்தது, வர்க்கத்தை முன்னெடுக்க வேண்டும்,
  வர்க்கத்தை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் என்பதல்லாம் பார்ப்பனியம் த்ன் இருப்பை தற்காத்துக் கொள்ளும் ஒர் உத்தியே! இந்த மாய்மாலங்களையெல்லாம் பெரியாரியவாதிகள் நன்கு அறிவர். எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியவாதிகளும் நன்கு அறிவர்.//

  சாதிய அமைப்புகுள்ளாக இருந்து கொண்டு மட்டும் இன ரீதியாக,மொழி ரீதியாக நம் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டும் சாத்தியமா?
  ”தமிழராய் ஒன்று படுவோம்” என்று சொல்வது ஆதிக்க சாதியினர் தன்னை தற்காத்துகொள்ளும் ஓர் உத்தியே! இந்த முழக்கத்தை தாழ்த்தப்பட்ட மக்களிடம் வன்கொடுமைகளை நிகழ்த்தும் ஆதிக்க சாதியினரிடம் முழங்கவும்.
  இந்த வாய்ஜாலங்களையும், மாய்மாலங்களையெல்லாம் அம்பேத்கரிய ,பெரியாரியவாதிகளான நாங்களும் நன்கு அறிவோம்..

  எமது வரலாற்று எதிரிகளான பார்ப்பனியவாதிகளும்(ஆதிக்க சாதியினரும்) நன்கு அறிவர்.

  //தமிழ் தேசியம் பார்ப்பனிய தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டால் பார்ப்பனிய தேசியத்தை உள்ளடக்கிய வன்னிய தேசியம், தேவர் தேசியம் இன்ன பிற வெங்காய தேசியங்களையும் எதிர்த்தாக வேண்டும்.//

  வன்னிய தேசியம், தேவர் தேசியம் எதிர்க்க வேண்டும் என்று மழுப்பாமல், முதலில் ஆதிக்க சாதிவெறியை நிகழ்த்தும் ஆதிக்க சாதிவெறிகளை கண்டியுங்கள். தேசியத்தை எதிர்த்தால் ஆதிக்க சாதிகளை எதிர்த்ததாய் ஆகிவிடுமா? முத்துராமலிங்கம் ஆதிக்க சாதிவெறியை தூண்டிவிட்ட செயல் இன்றும் தொடர்கிறதே தென்மாவட்டங்களில் இவர்களை எதிர்க்க முடியுமா உங்களால்.
  அதன் பிறகு இன்ன பிற வெங்காய தேசியத்தை பற்றி பேசுங்கள்.

 31. siruthaai சொல்கிறார்:

  அய்யா! தயவு செய்து உங்கள் அக்க போரை நிறுத்துங்கள்!!! எந்த இனத்திலும் இல்லாத இழவு இது! இது தமிழினத்திற்கே உரித்தானது!! தமிழனுக்கு தண்ணீர் தரகூடாது என்றால் கன்னடனுக்குள் இருக்கிற லிங்காயத்து முதல் தலீத் வரை அனைவரும் ஒற்றுமையாக தமிழனுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்..முல்லை பெரியாறு என்றால் தமிழனுக்கு எதிராக மலையாளி நாயர்.. மேனன் என்று பிரிந்து நிற்பது இல்லை.. தமிழினை ஒழித்துவிட்டுதான் மறுவேலை என்று செயல்படுகிறார்கள்..இன்னும் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.. தமிழன் தன்மானத்தோடு வாழ தனி தமிழ்நாடு என்ற கருத்துருவாக்கம் உருபெற்று வரும் இவ்வேளையில் சிலர் சாதி முதலில் தேசியம் பிறகு என்று குழப்புகிறார்கள்..அதாவது சாதியை ஒழித்துவிட்டு தமிழ் தேசியத்தினை வளர்க்க வேண்டுமாம்..அதாவது 3000 ஆண்டுகளாக பிரித்துவைத்த பார்பணியத்தினை ஒரே நாளாளில் தமிழக மக்களை மாற்றி விட்டு நாம் தமிழ் தேசியம் பேச வேண்டுமாம்.. அதாவது இன்னும் நாம் 300..400.. ஆண்டுகள் இந்திக்காரனிடம் அடிமையாக இருந்து விட வேண்டும் என்பதே கட்டுரையாளரின் எண்ணம்.. இவ்வளவு பேசும் இவர்கள் புதியதாக பிறக்கும் தமிழ் தேசியத்தினுடைய சட்டதிட்டங்களை வரையறுக்கலாமே? சாதி ஆதிக்க வெறி குறித்து மிககடுமையான தண்டனைகளை முன் மொழியலாமே? தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் தமிழ் தேசிய வரைவு அறிக்கை குறித்து வெளியான ஆலோசனைக்கு இவர்கள் அளித்த ஆலோசனைகள் என்ன? என்பதை தெரிந்த்து கொள்ள ஆசை! சாதியை ஒழித்துவிட்டுதான் இப்போதைக்கு தமிழ்தேசியம் பேசவேண்டுமென்றால் இந்திகாரனிடம் இன்னும்300 400 ஆண்டுகள் அடிமையாகவே இருக்கவேண்டும்..உள்வீட்டு பிரச்சனையை பிறகு நமக்குள் கூடி ஆலோசனை செய்து கொள்ளலாம்.. இனத்தின் பிரச்சனை என்ன என்பதனை கவனிக்கவேண்டும்.. காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் பெரும்பாலும் கூலிவேலை செய்த தலித்துகள் அடித்து விரட்டபட்டார்கள்..அப்போது அங்குள்ள தலித்துகள் யாரும் குரல் கொடுக்கவில்லை.. பிரச்சனைகளே பிரச்சனைக்கு தீர்வு!இன்று ஈழ விடுதலை போராட்டத்தால் ஈழதமிழர் அனைவரும் சாதிய அடையாளங்களை மறந்து பொது பிரச்சனைக்காக போராடுகின்றனர்..அதே போல் இந்தி தேசியதினை எதிர்த்து இங்கு நாம் போராட புறப்படும் போது இங்கும் அவ்வாறான சிக்கல் உருவாகும் போது.. நமக்கும் இழப்புகள் ஏற்படும்! அப்போது நிச்சயம் அனைவரும் தமிழராய் ஒன்றினைவோம்! வாழ்க தமிழ் தேசியம்!

 32. சீ.பிரபாகரன் சொல்கிறார்:

  இப்பவே கண்ண கட்டுதடா சாமி!…

  ஐயா, கணவான்களே! என்னதான் சொல்லவரிங்க! தமிழர்கள் அனைவரும் தமிழனாய் ஒன்றிணைய வேண்டுமா? வேண்டாமா?

  வேண்டும், என்றால் அதற்கு என்னதான் வழி.

  வேண்டாம். என்றால் அதற்கான காரணம் என்ன?

  தோழர்கள் வேந்தன், முருகன் போன்றவர்கள் என்னதான் சொல்லவராங்கன்னு எனக்கு புரியவில்லை…

  தமிழினம் மானத்தோடு வாழ உருப்படியான செயல்திட்டம், வேலைதிட்டம் ஏதாவது உங்களிடம் இருந்தா சொல்லுங்கையா…

 33. சியாம் சொல்கிறார்:

  எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்கி அடக்கி வைத்திருக்கும் பார்பனிய இந்திய தேசியமே, தேசிய இனங்களுக்கு இடையிலான முரன்பாடுகளை பகையாக வளர்க்கிறது! அதை கொன்டு தான் நாம் மற்ற தேசிய இனங்களின் தமிழின எதிர்ப்பை பார்க்கவேண்டும்.

  ////காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் பெரும்பாலும் கூலிவேலை செய்த தலித்துகள் அடித்து விரட்டபட்டார்கள்..அப்போது அங்குள்ள தலித்துகள் யாரும் குரல் கொடுக்கவில்லை..////

  இங்குள்ள தலித்துகள் எந்த அளவுக்கு குரல் கொடுத்தார்கள்? இங்குள்ள ஆதிக்க சாதியினர் எந்த அளவு குரல் கொடுத்தார்கள்????

  ////இன்று ஈழ விடுதலை போராட்டத்தால் ஈழதமிழர் அனைவரும் சாதிய அடையாளங்களை மறந்து////

  யாழ் நடுத்தரவர்க மனோபாவத்தை நினைவில் கொல்வது நலம்!

  ////தோழர்கள் வேந்தன், முருகன் போன்றவர்கள் என்னதான் சொல்லவராங்கன்னு எனக்கு புரியவில்லை…/////

  தமிழ் தேசியம் என்பது இங்கு பெரும்பாலும் (ஓரிரு அமைப்புகளை தவிர) ஆதிக்க சாதி மனோபாவமுடைய போலி முற்போக்கு அமைப்புகளின் அரசியல் லாபத்திற்கான கவர்ச்சி பொருளாக இருக்கிறது. அத்தகைய போலி அமைப்புகள் இதுவரை ஒடுக்கப்பட்டமக்களின் பிரச்சனைகளுக்காக ஒரு துரும்பையும் அசைக்காத போது, ஒடுக்கபட்ட மக்களையும் உள்ளடிக்கிய தமிழ் தேசியத்தில் நம்பிக்கை என்பது, ‘கடவுள் நம்பிக்கை எமக்கு கிடையாது, ஆனாலும் கடவுளே காப்பாற்று’ என்பதை போலாகும்.

  /////தமிழினம் மானத்தோடு வாழ உருப்படியான செயல்திட்டம், வேலைதிட்டம் ஏதாவது உங்களிடம் இருந்தா சொல்லுங்கையா…/////

  அதை தானுங்க நாங்களும் கேட்கிறோம். ஒடுக்கப்பட்டமக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய செயல்திட்டம், வேலைதிட்டம் ஏதாவது உங்களிடம் இருந்தா சொல்லுங்கையா…

 34. Pingback: ‘முப்பாட்டிகள்’? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s