டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

founder-1

தொடர் – 12

தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் ஆதிக்கஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தும்போதெல்லாம் – `தமிழ், தமிழன், தமிழ் உணர்வு` என்று பேசுகிறவர்கள், மவுனம் காக்கிறார்கள். அல்லது, ‘தமிழன் இப்படி ஒருவனோடு ஒருவன் அடித்துக் கொள்வதுதான் அழகா? தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று மோசடி நியாயம் பேசுகிறார்கள்.

ஒருவனின் கழுத்தின் மீது கால்வைத்து மிதித்து அவனை கொலை செய்து கொண்டிருக்கிறான் ஒருவன், அவ்வழியே போகிற இன்னொருவன், கீழே விழுந்துக் கிடக்கிறவனைப் பார்த்து, ‘ஏண்டா ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிறீங்க? ஒத்துமையா இருங்கப்பா’ என்று சொன்னால், ஒன்று அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருப்பான் அல்லது கழுத்துல கால வைத்து அழுக்கி கொல்கிறானே அவனுக்கு வேண்டப்பட்டவனாக இருப்பான்.

தமிழ் நியாயம் பேசுகிறவர்களில் பலபேர், இந்த இரண்டாவது வகை நீதிமான்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த நீதிமான்கள்களின் இன்னொருவகையான பரிணாமத்தை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த சண்டை அமைந்தது. மாணவர்களிடையே நடந்த கை கலப்பில், தாக்குதல் நடத்தியது தாழ்த்தப்பட்ட மாணவர்கள்தான் என்று தெரிந்த உடன், தமிழ் நியாயம் பேசுகிற நீதிமான்கள், தனது வழக்கமான தமிழ்ஒற்றுமை வசனத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு புத்தம் புதிய பாணியில் மிகுந்த கோபத்தோடு,

‘வன்முறையில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை மன்னிக்கவே கூடாது.’ என்று கறாராக பேசினார்கள்.

டாக்டர் அம்பேத்கர், “தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்களே அல்ல. நீங்கள் அவர்களை மனிதர்களாக நடத்துவதில்லை.” என்று காந்தியோடு விவாதித்தார்.

அதுபோல் தமிழனவாதிகளான சூத்திரத் தமிழர்களிடமும், “தாழ்த்தப்பட்ட மக்களை நீங்கள் தமிழர்களாக அல்ல. மனிதர்களாகக்கூட நடத்துவதில்லை” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

“வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்ளுக் கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தர கல்வி கற்பதுதான். விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் கல்வி தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப் படிப்புக்கோ, சட்டத்துறைப் படிப்புக்கோ அனுப்புகிறார்கள்.”

என்று டாக்டர் அம்பேத்கர் ‘தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் குறைகள்’ என்ற புத்தகத்தில் அன்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றோ சட்டக் கல்லூரியில் தொடர்ந்து படிப்பது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பிரச்சினைக்குரியதாக மாற்றப்பட்டிருக்கிறது.

***

“எனக்கு ஜாதி உணர்வெல்லாம் கிடையாது” என்று எல்லா ஜாதிக்காரர்களும் சொல்கிறார்கள். ஆனால் இன்று சமூகத்தில் ஜாதி வெறிதலைவிரித்தாடுகிறது. அப்படியானால் அது என்ன அன்னியநாட்டு சதியா?

அரசியல்வாதி, தலைவர், பிரபலமானவர் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்காக எந்த வகையான தவறான வழிகளையும் கடைப்பிடிக்கும்போது அதைக் கண்டிக்கிற முற்போக்காளர்கள்,

பொதுத்தளத்தில் இயங்குகிற தன் ஜாதியை சேர்ந்த தலைவரோ, பிரபலமானவரோ அதுபோன்று தவறான அல்லது அதைவிடவும் சந்தர்ப்பவாதியாக தன்னை முன்னேற்றிக் கொள்வதற்காக, தன் ஜாதியைப் பயன்படுத்துகிற அவர்களின் அப்பட்டமான நேரடியான ஜாதிய உணர்வையும் கண்டிக்காதப் போக்குதான் ‘முற்போக்காளர்களின்’ அல்லது ‘எனக்கு ஜாதி உணர்வெல்லாம் கிடையாது’ என்று சொல்லுகிறவர்களின் சுயஜாதி உணர்வாக இருக்கிறது.

இந்த உணர்வு ஆதிக்க ஜாதி அறிவாளிகளிடம் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட ஜாதி அறிவாளிகளிடமும் இருக்கிறது. இந்த இந்து மனோபாவம், ஜாதியை வளர்க்குமே தவிர ஒழிக்காது.

ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த அறிவாளிகள் பலர், தங்களை ஜாதி உணர்வற்றவர்களாகவும் தலித் விடுதலையின் தீவிர ஆதரவாளர்களாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் தாழ்த்தப்பட்டமக்களின் விடுதலையில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள்தானா என்பதை எப்படி அறிவது?

அவரின் ஜாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை நிகழ்த்தும்போது, அதைக் கடுமையாக கண்டித்து, தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கம் நிற்கிறாரா என்பதைப் பொறுத்துதான் ஒரு ஆதிக்க ஜாதி சமூகத்தில் பிறந்தவரின் ஜாதி உணர்வற்ற நிலையை, தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலையில் அவருக்குள்ள அக்கறையை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்படி இருப்பவர்கள் ஆபூர்வமாகத்தான் இருக்கிறார்கள்.

தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசுவது, இந்து மதத்திற்கு எதிராக இஸ்லாமியர்களிடம் பேசுவது, கிறிஸ்துவபாதிரிகளிடம் இந்து மத பிற்போக்குத்தனங்களைப் பற்றி சவடால் விடுவது, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடமே சிங்களவனுக்கு எதிரான இனஉணர்வு பேசுவது என்பதாகத்தான் பல அறிவாளிகள் இயங்குகிறார்கள்.

இதுபோன்ற முறைகள், அப்படி பேசுகிற இயங்குகிற, நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் பயன்தருமே தவிர, பாதிக்கப்படுகிற மக்களுக்கு, சமூகத்திற்கு எந்த பயனும் தராது.

“தீண்டாமையைப் பொறுத்தவரையில் மனம் மாறவேண்டியவர்களும், திருந்த வேண்டியவர்களும் ஜாதி இந்துக்ககள்தான். தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்தத் தவறும் இல்லை” என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார்.

அதனால்தான் தந்தை பெரியார்கூட, தீண்டாமைக்கு எதிராக ஜாதிக்கு எதிராக மிக அதிகளவில் பிற்படுத்தப்பட்டவர்களிடம், ‘உயர்’ ஜாதிக்காரர்களிடமும் பிரச்சாரம் செய்தார். அவர்களை மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டிப் பேசினார். இந்து மதத்தை எதிர்த்தும் இஸ்லாமியத்தை வலியுறுத்தியும் இந்துக்களிடம் தீவிரமாக பேசினார். இயங்கினார். எந்த மக்களிடம் தன் இயக்கத்தை வளர்க்க விரும்பினாரோ, அந்த மக்களையே அவர்களின் கேவலமான நிலையை சுட்டிக் காட்டி அவர்களை மிக அசிங்கமான வார்த்தைகளால் திட்டிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

‘தமிழன் கடராம் கொண்டான், குடாரம் கொண்டான், தமிழன்தான் உலகத்தின் முதல் குரங்கு’ என்று மக்களை புகழ்ந்து பேசி, பொய் சொல்லி, ஏமாற்றி தன்னை பெரிய தலைவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என்கிற நோக்கம் பெரியாரிடம் எப்போதுமே கிடையாது. அதனால்தான் அவர் பெரியார்.

தாழ்த்தப்பட்ட மக்கள், தீண்டாமையை எதிர்த்து தங்களின் உரிமைக்காக, ஜாதி இந்துக்களுக்கு எதிராக போராடும்போது, அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு ஒட்டுமொத்த ஆதிக்கஜாதிகளும் ஒன்று சேர்ந்து அவர்களை தாக்குகிற கொடுமை நிகழ்கிறது. அந்த மக்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, மேலும் நிற்கதியாக்கப்படுகிறார்கள். அதனால் ஜாதி வெறிக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக போரட வேண்டிய கடமை தலித் அல்லாத முற்போக்காளர்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது. அப்படி சில முற்போக்கு அமைப்புகளும், தலித் அல்லாத அறிவாளிகளும் இயங்கி இருக்கிறார்கள்.

தினகரன் என்கிற ஒரு மாமனிதன், முகுகுளத்தூர் வன்முறையின்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, தன்னுடைய ஜாதியான தேவர் ஜாதிக்கு எதிராக, உறவினர்களுக்கு எதிராக இயங்கினார். அவரை அவர் ஜாதியைச் சேர்ந்தவர்களே கொலை செய்தனர்.

மக்கள் கலை இலக்கிய கழகம் மதுரை பக்கம உள்ள பண்ணைப்புரம் கிராமத்தில் இரட்டை குவளை முறையை எதிர்த்து தேவர் சமூகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்களை களத்தில் இறக்கி போராடி, அந்தக் கிராமத்தில் இருந்து இரட்டை குவளை முறையை ஒழித்தது. தேவர் ஜாதிக்காரர்களின் கடுமையான தாக்குதலை, காவல்துறையின் வன்முறையை முழுக்க முழுக்க தாங்கிக் கொண்டு, ஜாதிவெறியர்களின் கொடூர தாக்குதலில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை காத்தார்கள் அந்த வீர இளைஞர்கள்.

பெரியார் திராவிடர் கழகம் கோவை மாவட்டம், சேலம் மாவட்டம் இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளில் இரட்டைக் குவளை முறையை எதிர்த்து தீவிராமாக போராடி பல பகுதிகளில் அதை ஒழித்திருக்கிறது. பெரியார் காலத்தில்கூட தீண்டாமைக்கு எதிராக இரட்டை குவளை முறையை எதிர்த்து இப்படி தொடர் போராட்டம் நிகழ்ந்ததில்லை. பெரியார் திராவிடர் கழகத்தின் இந்த செயல் வரலாற்று சிறப்பு மிக்கது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாத்து தலைவர் மேலவளவு முருகேசன் கொலை வழக்கில், தன் உயிரையும் பணயம் வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்தார் தலித் அல்லாத வழக்கறிஞர் பொ. ரத்தினம்.

இப்படி முன்மாதிரிகள் நமக்கு இருக்கிறது.

இது போன்ற முன்மாதிரிகளை கணக்கில் கொண்டு, தீண்டாமைக்கு எதிரான ஒரு குறியீடாக அண்ணல் அம்பேத்கர் பெயரை, உருவத்தை நாம் பெருமளவில் தலித் அல்லாத மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அதன் ஒரு முறையாகத்தான், டாக்டர் அம்பேத்கர் T-shirt அணியும் பழக்கத்தையும் வழக்கத்தில் கொண்டு வரவேண்டும்.

தலைவர்களின் படம் போட்டT-shirt அணிகிற பழக்கம் நம் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால் தலைவர் அம்பேத்கரின் T-shirt அணிகிற வழக்கம் தலித் இளைஞர்களிடமும் இல்லை. தலித் அல்லாத இளைஞர்களிடமும் இல்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒன்று அம்பேத்கர் T-shirt அணிந்தால் நம்மை தலித் என்று நினைத்துவிடுவார்களோ என்ற மனோபாவம் தலித் அல்லாத இளைஞர்களிடமும், அம்பேத்கர் T-shirt அணிவதால், நம்மை தலித் என்று தெரிந்துகொண்டு அவமரியாதையாக நடத்துவார்களோ என்கிற எண்ணம் தலித் இளைஞர்களிடம் இருப்பதால் அவர்கள் தலைவர் அம்பேத்கர் T-shirtஅணிவதில்லை. அல்லது அம்பேத்கர் T-shirt விற்பனையில் இல்லாததால் அதை அணியவேண்டும் என்கிற எண்ணம் ஏற்படாமல் போயிருக்கலாம்.

இந்த அவல நிலையை உடைத்து, தீண்டாமைக்கு எதிரான ஜாதிக்கு எதிரான குறியீடாக டாக்டர் அம்பேத்கர் T-shirt டை பெருவாரியான இளைஞர்கள் குறிப்பாக தலித் அல்லாத இளைஞர்கள் அணிந்து, டாக்டர் அம்பேத்கர் புகழை பரப்புவோம். ‘அம்பேத்கர் சிலையை உடைக்க வேண்டும் அம்பேத்கர் பெயரை புறக்கணிக்க வேண்டும்’ என்கிற ஜாதிவெறியர்களின் ஜாதி வெறி உணர்வை வீழ்த்த முயற்சிப்போம்.

கிராமத்தில் ஜாதி வெறிகொண்ட ஒரு ஜாதி இந்துவின் வீட்டுக்குள் அந்த வீட்டின் இளைஞன் டாக்டர் அம்பேத்கர் T-shirt அணிந்து நடுவீட்டில் உட்கார்ந்திருக்கிறான், ஊரில் பொது இடத்தில் புழங்குகிறான் என்பது ஜாதிக்கு எதிரான கலகம்தான். இதற்காக அந்த இளைஞன் தன் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டிவரும். அப்படி எதிர்ப்பை சந்திப்பதுதான் முற்போக்காளனுக்கு அழகு.

அணிவோம் அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட T-shirt. எதிர்ப்போம் ஜாதிகளை.

தொடரும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

10 Responses to டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?

 1. sathish சொல்கிறார்:

  மிக மிக நியாமான கோரிக்கை உங்களுடையது. ஒவ்வொரு சாதி இந்துவும் அண்ணலின் படம் பொறித்த உடையை அனிய வேண்டும்.

  காத்திருக்கிறோம் அண்ணனில் படம் தாங்க. சாதியத்தை வென்றெடுக்க.

  சதிஸ்
  சுவிஸ்

 2. Dr. V. Pandian சொல்கிறார்:

  தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்சிக்காக மட்டுமில்லாமல், தமிழினத்தின் தற்காப்புக்காகவும் தமிழரனைவரும் சாதிகளைத் துறந்து ஒன்று பட வேண்டிய கட்டாய சூழல் உருவாகி வருகின்றது. சாதியை ஒழிப்பது போல, தற்கால அசிங்க அரசியலையும் ஒழித்தாக வேண்டும். இதற்கு பகுத்தறிவுள்ள அனைத்து தமழரும் சாதிகளைக்கடந்து ஒன்றினைந்து புதியதோர் வாழ்வியலை உருவாக்க வேண்டும். ஈழத்தமிழனை நாம் காக்கத் தவறினால், தமிழகத் தமிழன் அழிவது உறுதி. தற்கால அரசியலைப் புறந்தள்ளி, நாமெல்லோரும் ஓர் குரலாக எழுந்து போராடினால் தான், தமிழினம் மீளும்.

 3. ந.செந்தில் சொல்கிறார்:

  நகரங்களில் ஓரளவு ஒழிந்து விட்ட தீண்டாமை கிராமங்களில் ஒழிய வேண்டும். அதற்கு அம்பேத்கர் T-shirt கண்டிப்பாக பலன் கொடுக்கும்.
  தொடரட்டும் இம்முயற்சி.

 4. யாத்ரீகன் சொல்கிறார்:

  மீடியாக்களால் மழுங்கடிக்கப்பட்ட மாபெரும் தலைவர்.. ;-(

 5. கோகுலகிருட்டிணன் சொல்கிறார்:

  வணக்கம்,

  ஒரு மிகச்சிறந்த தலைவரைப் பற்றிய மிகச்சிறந்த தொகுப்பை தந்துகொண்டிருகின்ற வே.மதிமாறன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,

  தங்களுடைய தொடரை வாசித்த பிறகு அண்ணல் அவர்களைப் பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி,
  எனக்கும் அண்ணல் அவர்களுடைய படம் அச்சிட்ட ஆயத்த ஆடை அணிய வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது எங்கு கிடைக்கும் என்கிற தகவல் கொடுக்க முடியுமா.

  கோகுலகிருட்டிணன்
  மும்பை

 6. Nithi!!! சொல்கிறார்:

  ஒவ்வொரு சாதி இந்துவும் அண்ணலின் படம் பொறித்த உடையை அனிய வேண்டும்.///

  அணைத்து மனிதனும் நாம் அண்ணலின் படம் பொறித்த உடையை அனிய வேண்டும்.

  இந்த கட்டுரை எபோ புத்தக வடிவில் வெளி வரும்???

 7. தமிழ் ஓவியா சொல்கிறார்:

  //கிராமத்தில் ஜாதி வெறிகொண்ட ஒரு ஜாதி இந்துவின் வீட்டுக்குள் அந்த வீட்டின் இளைஞன் டாக்டர் அம்பேத்கர் T-shirt அணிந்து நடுவீட்டில் உட்கார்ந்திருக்கிறான், ஊரில் பொது இடத்தில் புழங்குகிறான் என்பது ஜாதிக்கு எதிரான கலகம்தான். இதற்காக அந்த இளைஞன் தன் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டிவரும். அப்படி எதிர்ப்பை சந்திப்பதுதான் முற்போக்காளனுக்கு அழகு.//

  சரியாக சொல்லியுள்ளீர்கள். அதற்கு இந்தக் கட்டுரைத் தொடர் உதவும்.

  மிக்க நன்றி.

 8. விடுதலை சொல்கிறார்:

  இப்பகுதியில் நான் இட்டபின்னுட்டத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி வாழ்க உங்கள் தொண்டு

 9. வெங்கடேஷ் சொல்கிறார்:

  பொறுமையுடன்,தெளிவாக யோசித்தால் இதில் உள்ள உண்மை புரியும்,
  நான் அம்பெத்கருக்கு எதிரானவன் அல்ல,ஆனால் அதே சமயம் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு தான் உயர்வாக க்ருதுகிறேன்,.
  நாம் போற்ற வேண்டிய ஒரே தலைவர் திரு பிரபாகரன் அவர்கள்.
  சாதிய உணர்வு அவசியம் இல்லை,அது அரசாங்கத்திடம் இடஒதுக்கீடு கேட்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,மற்ற சமயங்களில் நம்மை நாம் தமிழராக உணர்வதே சிறந்தது,உயர்ந்தது,

 10. வெங்கடேஷ் சொல்கிறார்:

  .தங்களின் தமிழ் ஆர்வம்,தமிழ் பற்று ஆகியவற்றை நான் மதிக்கிறேன்.

  தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.இங்கு ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் அம்பெத்கர் வட இந்தியாவிற்கு அதிகம் உழைத்திருக்கிறார்.தமிழகத்திற்கு குறிப்பிடும் படி ஒன்றும் செய்யவில்லை.அப்படி பட்ட அம்பெத்காரை தமிழகத்தில் பிரபலபடுத்த நினைப்பது ,தமிழர்களை பிளவு படுத்தும் செய்லாகும்.
  அதை விட அதிகமாக தந்தை பெரியார் உழைத்துள்ளார்.அவரை முன்மாதிரியாக வைத்து கொண்டு நாம் நம் தமிழகத்தில் தீண்டாமையை எதிர்த்து போராடலாம்.அதை விடுத்து அம்பெத்கரை முன்னிலைபடுத்துவது ஏன் என்று புரியவில்லை,

  //தமிழகத்தில் இருந்தால் என்ன?, மராட்டியத்தில் இருந்தால் என்ன? தாழ்த்தப்பட்டவர் மாநிலங்களைக் கடந்து ஒன்றாகவே இருக்கிறார். ஆகவே அம்பேத்கரை வெறும் போலி இந்திய தேசியத்திற்குள் அடைத்து விடாமல் இன்னும் உலகளாவிய அளவில் கொண்டு செல்வதே சிறப்பு என்று சிலர் கருத்து தெரிவிக்கலாம்//

  ,தாழ்த்தபட்டவர் மாநிலங்களை கடந்து ஒன்றாகவே இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்,அது நிச்ச்யமாக இருக்கமுடியாது.மொழி உணர்வு மேல் ஓங்கும் போது சாதிய ஒற்றுமை எடுபடாது.
  மஹராஷ்டிராவில் இருக்கும் தாழ்த்தபட்டவன் ,மராட்டிய மொழிக்காக போராடும் போது,அங்குள்ள் மற்ற சாதியினருடன் சேர்ந்து போராடுவானே அன்றி,தாழ்த்தபட்டவர்கள் என்பதற்காக தமிழகத்தில் உள்ள தாழ்த்தபட்டவனுடன் தன்னை அடையாளபடுத்தி கொள்ளமாட்டான்,

  ஒரு பக்கம் தமிழ் பற்றுடன் பேசுகிறீர்கள்,தமிழர்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள்,பல்வேறு மதம்,சாதியை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்,அப்படி இருக்க நீங்களே அம்பெத்காரை முன்னிலை படுத்துவதால் த்மிழனிடம் ஒற்ற்மையில் பிளவு ஏற்படுகிறது.கருத்து வேறுபாடு ஏற்படுகிறது,நான் அம்பெத்காரை மதிக்கிறேன்.ஆனால் தமிழை அதை விட அதிகம் நேசிக்கிறேன்.நம் குறிக்கோள் தீண்டாமையை தமிழகத்தை விட்டு ஒழிக்க வேண்டியது அன்றி,அம்பெத்காரை பரப்புவதல்ல.எந்த தலைவரையும் நாம் மக்களிடம் திணிக்கமுடியாது அது கூடாது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s