குழந்தையைக் கிழிக்கும் புத்தகங்கள்


ந்தப் பெற்றோர்கள் எந்த நேரமும் பயமும், பதட்டமுமாகவே இருந்தார்கள்.
என்ன ஆயிற்று அவர்களுக்கு?
குடும்பத்தில் எதாவது பெரிய பிரச்சனையா?
குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையா?
அதெல்லாம் ஒன்றுமில்லை தங்கள் மகனுக்கு முழு ஆண்டுப் பரீட்சை நெருங்கிவிட்டது. பரீட்சைக்கு தயாராகிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு வந்திருப்பது பரீட்சை ஜுரம் (Exam Fever)

அவர்களின் பயமும், பதட்டமும் அவர்களின் ஒரே மகனையும் பற்றிக் கொண்டது. குடும்பமே மிரண்டு போய் கிடக்கிறது.
சரி. அப்படி இருண்டு போய் கவலைப்படும் அளவிற்கு என்னதான் படிக்கிறான் அவன்?
ஒன்றாம் வகுப்பு.

இந்தக் காட்சி இந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. எல்லா நடுத்தர வர்க்கத்தின் நிலையும் இதுதான்.
தன் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் பக்குவமற்றதுதான் குழந்தை. குழந்தையின் பொருட்டே பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள். தவறில்லை. அதுதான் பெற்றோர்களின் கடமையும் கூட.

ஆனால் பெற்றோர்கள், குழந்தையின் எதிர்காலம் குறித்து மட்டுமல்ல, தங்களின் எதிர்காலம் அவர்களின் கனவு, -கவுரவம் என்று எல்லாவற்றையும் தன் ஐந்து வயது குழந்தையின் தலையிலேயே சுமத்துகிறார்கள். அதன் பொருட்டே அவர்களும் பாரம் சுமக்கிறார்கள். தன் மகன் 90 சதவீதம் மதிப்பெண் வாங்கினால் அதைப் பாராட்டாமல்,

“டேய் மார்ட்டினை பார்த்தியாடா அவன் 95 மார்க்கு வாங்கியிருக்கான். இத்தனைக்கும் அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க இல்ல. அவ்வளவா வசதிவேறு இல்லாதவங்க. கிராமத்துல இருந்து வந்தவன். பள்ளிக்கூடத்திற்கு நல்ல சாப்பாடு கூட அவன் கொண்டுவர்றதில்லை. யாரோ அவனோட மாமா அவனை படிக்க வைக்கிறாராம். அப்படியிருந்தும் அந்தப் பையன் நல்லா படிக்கிறான். நல்லா படிச்ச எங்களுக்கு பொறந்துட்டு ஏண்டா எங்க மானத்தை வாங்குற? அடுத்த முறை அவனை விட நீ ஒரு மார்க்காவது கூட வாங்கனும் இல்லாட்டி செமத்தியா அடி விழும்” என்று அந்த பிஞ்சின் நெஞ்சில் தாழ்வுமனப்பான்மையையும் சக மாணவனை பற்றியான பொறாமை எனும் நஞ்சையும் கலக்கின்றனர் பெற்றோர்கள்.

துன்புறுத்தல் என்பது விரோதியிடமிருந்து, விரோதமான வடிவத்தில்தான் வரும் என்பதில்லை. அது அன்பானவர்களிடமிருந்தும், அன்பான வடிவத்திலும் வரும். முற்றிப் போன சக்கரை நோயாளிக்கு, வாய்நிறைய திருப்பதி லட்டை அன்போடும், பக்தியோடும் திணித்துப் பாருங்கள். அந்த லட்டே கொலைக்கருவியாகவும், நீங்கள் கொலைகாரராகவும் மாறியிருப்பீர்கள்.

இரும்பை எடுத்து தலையில் போட்டால் மண்டை பிளந்து போகும் என்பது தெரிந்ததே.
ஆனால், ‘மலர்கள் மோதி மரணம் நிகழுமா?’
நிகழும். அதன் அளவும். எடையும் கூடும்போது. டன் கணக்கில் பூக்களை மூட்டையில் அடைத்து, அதை ஒரு மனிதன் மீது தள்ளிப்பாருங்கள். அங்கேயே அவன் நசுங்கிச் சாவான்.

ஆம், ‘குழந்தைகளை வளப்படுத்துவதற்கே’ வந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கல்வியே. அவர்களின் குழந்தை பருவத்தையும் சாகடித்து விடுகிறது.
15-கிலோ எடையுள்ள குழந்தை 10-கிலோ எடையுள்ள புத்தக மூட்டையை சுமக்கிறது.
நியாயமா இது?
5-வயதாகும் குழந்தைக்கு 11 வகையான பாடத்திட்டம். அடுக்குமா இது?
ஒரு பொறுப்புள்ள அரசு இப்படித்தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்குமா?

***

அந்த உயர்நிலைப்பள்ளியில், அன்று காலை 11.00 மணியளவில் விடுமுறை விடப்பட்டது. குழந்தைகளுக்கு ஒரே குதூகலம். திடீர் விடுமுறைக்கும் – குதூகலத்திற்கும் காரணம் என்ன?
ஆசிரியர் இறந்து விட்டாராம்.
என்ன அவலம் இது? ஆசிரியர் இறந்ததற்கு குதூகலமா?

ஆம், அந்த ஆசிரியர் மிகவும் கறாரான பேர்வழி. பிரம்பெடுத்தாரென்றால், அது முறியும் வரை மாணவனை அடிப்பாராம். இட்லரைப் பற்றியும் மாணவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார். ஆனால் அவர் இறந்த அன்று மாணவர்கள் இப்படிப் பேசிக் கொண்டார்களாம். ‘டேய், இட்லர் செத்துப் போய்ட்டானாம்.’

ஒரு ஆசிரியரின் மரணம், மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதென்றால், இந்த அவலத்திற்கு யார் பொறுப்பு? சுய சிந்தனையை வளர்க்காத, மனிதாபிமானத்தை சொல்லித்தராத, வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே சொல்லித் தருகிற இந்த மனப்பாட கல்வி முறையல்லவா காரணம். படித்தவன் தானே -‘லஞ்சம், ஊழல்’ என்று நாட்டைப் பாடாய் படுத்துகிறான்.

அப்படியானால் குழந்தைகளைப் புரட்டி, புரட்டியடிக்கும் இந்தப் படிப்பை என்ன செய்வது?
முறைப்படுத்த வேண்டும்.

‘ஏற்றத் தாழ்வற்ற கல்வி. எல்லாக் குழந்தைகளுக்கும். ஒரே மாதிரியான பாடத் திட்டம் கொண்ட தாய்மொழிக் கல்வி. குழந்தைகளின் இயல்பைப் புரிந்து கொண்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டி ஆற்றலை வளர்க்கும் காழ்புணர்ச்சியற்ற இலவசமானக் கல்வி என்று ஒழுங்குப்படுத்த வேண்டும்.

யார் செய்வது இதை?
வேறு யார்?
அரசுதான் செய்ய வேண்டும்.
செய்யுமா?
செய்ய வைக்க வேண்டும்,

அதுவரை…?
உங்கள் குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு, அவர்களின் திறன் (Capacity)) ஆர்வம் என்னவென்று தெரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் பயிற்சி கொடுங்கள்.
இல்லையேல். அதீத அக்கறையும் ஆபத்தாகவே முடியும். குழந்தைகள் படிப்பாளியாக மட்டும் வளர்ந்தால் போதாது. அவர்கள் அறிவாளியாகவும், சகமனிதனின் துயரங்களை புரிந்து கொள்பவராகவும் திகழ வேண்டும்.

ஆம், அவர்கள் உங்கள் குழந்தைகள்தான். அதற்காக அவர்களை அன்பாக துன்புறுத்தாதீர்கள். உங்கள் குழந்தை பருவத்தில் எதெல்லாம் உங்களைச் சங்கடப்படுத்தியது. எதெல்லாம் சந்தோசப்படுத்தியது என்று நினைவுபடுத்திப் பாருங்கள். நியாயம் புரியும்.

மாமேதை லெனின் சொல்வார். ‘சாட்டையால் அடித்துச் சொர்க்கத்திற்கு அனுப்பாதீர்கள்’.

-வே. மதிமாறன்.

‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் 2002 ஆண்டு எழுதியது.

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

11 Responses to குழந்தையைக் கிழிக்கும் புத்தகங்கள்

 1. துளசி கோபால் சொல்கிறார்:

  நல்ல கட்டுரை.

  நம்ம கல்விமுறையில் மனப்பாடம் பண்ண முடிஞ்சவங்க, அதாவது ஞாபகசக்தி இருக்கறவங்களுக்கு வெற்றியோ வெற்றி.

  புரிஞ்சு படிக்கணும் என்ற அவசியம் இல்லை.

  இது எப்போ மாறுமோ? (-:

 2. கோகுலகிருட்டிணன் சொல்கிறார்:

  மதிமாறன் அவர்களுக்கு,

  மிக நல்ல பதிவு, ஆனால் நம் மக்கள் தான் தன் குழந்தை ஆங்கிலம் பேசினால் அல்லது படித்தால் தான் அது நன்றாக படிப்பதாக ஒரு மயக்கத்தில் சிக்கி இருக்கிறார்களே என்ன செய்வது, தாய்மொழிக் கள்ளவி தான் சிறந்தது என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் நம் மக்களின் மண்டையில் தான் அது ஏறினபாடில்லை, இது எப்போது தான் மாறுமோ?????????????

  கோகுலகிருட்டிணன்
  மும்பை

 3. bharathirajac சொல்கிறார்:

  முற்றிலும் உண்மை. நல்ல கட்டுரை.

 4. Kavithaik Kaathalan சொல்கிறார்:

  நம் நாட்டின் கல்வி முறை இன்னும் பழைய ஆங்கிலேய கல்வி முறையை ஒத்து இருப்பதே முக்கிய காரணம்.. அவர்கள் எப்போதோ மாறி விட்டார்கள்.. நாம் தான் இன்னமும் அதிலேயே தொங்கி கொண்டிருக்கிறோம்… குழந்தைகளிடம் இருக்கும் கற்பனைத்திறன், சிந்தனா சக்தி அனைத்தும் பாட புத்தகங்களால் வீணடிக்கப்படுவது வருத்தமான விஷயம். ஆங்கிலத்தை துணை மொழியாக கொண்டு, தமிழை முதல் மொழியாகக் கொண்டு படித்தால் உருப்படலாம்… மத்த மாநிலங்களில் இது தான் நடக்கிறது…

 5. tamilnathy சொல்கிறார்:

  வாழ்க்கைக்குத் தேவையற்றவைதான் பாடத்திட்டத்தில் நிறைய இருக்கின்றன. துளசி கோபால் சொன்னதுபோல மனப்பாடம் செய்யத் தெரிந்தவர்கள்தான் பரீட்சையில் சித்தியடைகிறார்கள். இயல்பான புத்திசாலித்தனம் எடுபடாமல் போகிறது. பாடத்திட்டங்கள் நிச்சயமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

 6. Nithi..!! சொல்கிறார்:

  பார்ப்பனீயம் எதிப்பு மட்டும் இல்லாமல் மற்ற சமுகசிந்தனை கூடிய இந்த கட்டுரை அருமை….

  பணத்தை மட்டும் பார்க்கும் பல பள்ளி கூடங்கள் அவை அனைத்தும் தம் மாணவர்களுக்கு பணம் ,,,, வேலை ,,,, போன்றவை தான் போதிக்கிறது… இந்த நிலை மாற வேண்டும்….

  நிதி

 7. அமுதா சொல்கிறார்:

  நல்ல பதிவு. அரசு தான் கல்வி முறையை மாற்ற வேண்டும். நாளை மேற்படிப்பிற்கோ, வேலை கிடைப்பதற்கோ முதலில் மதிப்பெண்கள் வைத்து தான் “First level Filtering” நடக்கும் என்ற நிலை மாற வேண்டும். பாடம் என்பது சுகமாக இருக்க வேண்டும். துளசி மேடம் சொன்னது போல், “புரிந்து படிக்கும்” நிலை வர வேண்டும். இது பெற்றோர் மட்டும் செய்யக்கூடியது அல்ல. அரசு தான் கல்வி முறையை மாற்ற வேண்டும். அதுவரை படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று எண்ணும் பெற்றோரும் “படி படி” என்று தான் கூறுவர். அவர்களை மட்டும் குறை கூற முடியாது. என்றாலும் பெற்றோர் சற்று “maturity” உடன் குழந்தைகளின் படிப்பைக் கையாள வேண்டும்.

 8. Mohamed Ismail சொல்கிறார்:

  Taare Jameen Par – தாரே (வினண்மீன்) ஜமீன் (பூமி) பர் – பூமியின் விண்மீன்கள் என்ற இந்தி படமும் குழந்தைகளின் கல்வி முறையை பற்றி கவலைப் பட்டிருக்கிறது, வாய்ப்பு கிடைத்தால் பார்க்கவும்

 9. ந.செந்தில் சொல்கிறார்:

  குழந்தைகள் படிப்பாளியாக மட்டும் வளர்ந்தால் போதாது. அவர்கள் அறிவாளியாகவும், சகமனிதனின் துயரங்களை புரிந்து கொள்பவராகவும் திகழ வேண்டும்.
  அருமை அருமை நன்றி

 10. porattamtn சொல்கிறார்:

  வணக்கம் தோழர். வலையுலகிறகு புதிதாக வந்துள்ளேன். இணைப்பு கொடுக்கவும்.

  நன்றி
  http://porattamtn.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s