‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’

 

 

 

 

 காரை மைந்தன் என்பவர் என்னிடம் தொலைபேசியில் தமிழர் தொலைநோக்கு என்கிற ஒரு இதழை நான் நடத்துகிறேன். அதில் பாரதி குறித்த உங்களின் நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்புகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். பிறகு நேர்காணலுக்காக நேரில் சந்தித்தபோது கேள்விகள் தயாராக இல்லாததால், சில கேள்விகளை எழுதி எனக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.

 

அவர் அனுப்பி வைத்த கேள்விகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நான் பதில் எழுதியிருந்தேன்.(பிப்ரவரி 2008) அதைத்தான் இங்கு பிரசுரித்திருக்கிறேன். 
 

 

 

 

 தமிழ்நாட்டில் பெண்கல்வி,  பெண் விடுதலை, சாதீய ஒற்றுமை குறித்து பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் நீங்கள் காணும் வேற்றுமை என்ன?

 பாரதி பெண் கல்வி, பெண்விடுதலை, சாதீய ஒற்றுமையை இந்து மத, பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையில் எழுதினார்.

பாரதிதாசன் பெரியாரின் சிந்தனையின் பின்னணியில் எழுதினார்.

பாரதி ஏற்றத்தாழ்வகளோடே ஒற்றுமையாக இருக்கவேண்டும், என்று சாதீய ஒற்றுமையை வலியுறுத்தினார்.

பாரதிதாசன் பெரியாரின் சிந்தனையான சாதி ஒழிப்பு பற்றி எழுதினார்.

 

சுருங்கச் சொன்னால் பாரதி வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டினார்.

பாரதிதாசன் பெரியாரின் பேச்சை கவிதையாக மொழி பெயர்த்தார்.

பெரியாரை தவிர்த்து விட்டால், பாரதிதாசனிடம் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாரதி ஆதரவையும் சேர்த்து.

 

  பாரதி பெண்கல்வி குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பரப்புரை செய்தது, சட்டசபையில் மகளிருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோருவதை எதிர்ப்பவர்களைப்போல தன் குலத்துப் பெண்டிரை மனதில் வைத்துதான் என்று எண்ணுகுகிறீர்களா?

 இது பாரதி குறித்தான என் எண்ணமில்லை. பாரதி அப்படித்தான் இருந்து இருக்கிறார், என்பதை அவர் எழுத்து உதாரணங்களோடு நீரூபித்து இருக்கிறேன.

 

  நீதிக் கட்சித் தலைவர்களை பாரதி கடுமையாக விமர்சித்தது நாட்டு விடுதலைக்கான போரை பின் தள்ளிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் என்று உங்களை எதிர்கொள்ளும் கருத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?

 நீதிக் கட்சித் தலைவர்களின் பார்ப்பன எதிர்ப்பை சுட்டிக் காட்டிதான் பாரதி அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். “பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா? எதற்கும் இந்து மத வீரோதிகள் பேச்சைக் கேட்கலாமா?” என்று எழுதுகிறார்.

இந்துமதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட, கடவுள் நம்பிக்கையாளர்களான நீதிக்கட்சிக்காரர்களை ‘இந்து மத விரோதிகள்’ என்று குறிப்பிடுகிறார். பார்ப்பனர்களை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது என்ற புரிதல் பாரதிக்கு இருந்திருப்பதற்கான சாட்சிதான் ‘இந்து மத வீரோதிகள்’ என்கிற அந்த வார்த்தை.

 

 1916 ல் தான் நீதிக்கட்சி துவங்கப்பட்டது. அந்த ஆண்டுகளில் பாரதி சுதந்திர போராட்ட நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 1918 டிசம்பர் 10 தேதி கடலூர் சிறையில் இருந்து  சென்னை மாகாண பிரிட்டீஷ் கவர்னருக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில்,

“மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கொடுக்கிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளைத் துறந்துவிட்டேன். நான் எப்போதும் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்.” என்று கடிதம் எழுதிதந்த விட்டுதான் வெளியே வருகிறார்.

 

அந்தக் கடித வாக்கியங்களுக்கு உண்மையாகவும், தான் சொன்ன வார்த்தையை தன் மரணம் வரை காப்பாற்றுகிறார்.

ஆக, நீதிக்கட்சி செல்வாக்கு பெற ஆரம்பித்தக் காலங்களில் பாரதியே  பிரட்டிஷ் அரசுக்கு எதிராக இல்லை.

 

 பாரதியின் கட்டுரைகளை பார்த்தால் அது தமிழ் கட்டுரைதான எனும்  அளவிற்கு சமஸ்கிருதம் நிறைந்து இருக்கிறது. கவிதைகளிலும் சமஸ்கிருதம் காணப்படுகிறது. இது காலத்துக்கேற்ற எழுத்து என்று ஏற்பதா அல்லது தன் காலத்தை தாண்டி புரட்சி செய்த கவிஞனின் தவறுகள் என்று ஏற்பதா?

 பாரதிக்கு தமிழ் மீது விரோதம் இல்லை. ஆனாலும் தமிழை விட சமஸ்கிருதமே சிறந்தமொழி என்று உறுதியாக நம்பினார். சமஸ்கிருத கலப்போடு எழுதுவது, தமிழை மேம்படுத்தும் என்றும் உறுதியாக நம்பினார்.

 

“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாதவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்” என்பதே பாரதியின் நிலை. இதுதான் காலத்தை தாண்டிய புரட்சியா?

 

 பணக்காரர்களிடமும் பண்டிதர்களிடமும் அடைப்பட்டுக் கிடந்த தமிழ்க் கவிதையை எளிய மக்களிடம் கொண்டு சென்றவன் பாரதி என்கிறார்களோ?

 பொய். பாரதிக்கு முன்பே சித்தர்கள் மக்கள் மொழியில்தான் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். சித்தர்கள் மொழி மட்டும் எளிமையல்ல அவர்களின் வாழ்க்கையே எளிமையானதுதான். காரணம் அவர்களே எளிய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள்தான்.

 

பாரதிக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்க அடிகளின் குரல் ஒரு கலகக் குரல்.

 “இராமலிங்க சுவாமிகள் “களங்கமறப் பொது நடனங் கண்டு கொண்ட தருணம்” என்ற பாட்டைத் திரித்துப் பாடியது,

“தாயுமானவர் ஆனந்த களிப்பு மெட்டு, காவடிச் சிந்தில் ஆறுமுகவடிவேலவனே என்ற வர்ண மெட்டு”

“பெரிய புராணத்தில் வருகிற மாடு தின்னும் புலையா என்ற பாட்டின் மெட்டில் பாடியது” என்று பாரதியே       அவர்களின் பாடல்களை பயன்படுத்தி               இப்படி குறிப்பிட்டுதான் பாடியிருக்கிறார்.

 

அவ்வையாரின் ஆத்திச்சூடியைப் போல்தான் பாரதியும் ஆத்திச்சூடி பாடியிருக்கிறார்.

 

இவர்களிடம் இருந்து வேறுபடக் காரணம், ஆங்கிலம் தெரிந்த பத்திரிகையாளராக பாரதி இருந்ததால் தொழில் காரணமாக ஆங்கில பத்திரிகைகளை படிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. கவிஞனாகவும் இருந்ததால் அந்தச் செய்திகளை கவிதையாகவும் பாட முடிந்தது.

 

இதன் காரணமாகதான் அவர் ரஷ்யா பற்றி, பிஜித் தீவைப் பற்றி இன்னும் பல நாடுகளை பற்றியும், அந்த நாட்டின் போராட்டங்களைப் பற்றியும், ஆங்கில இலக்கியங்களையும் குறிப்பிட்டு எழுத முடிந்தது. ஆங்கில கவிதைகளின் தாக்கத்தினால்தான் அவர் கவிதைகளில் ஒரு நவீன தன்மை இருந்ததது.

 

கவிதைகளையும், கட்டுரைகளையும் ‘அப்டேட்’ செய்வதற்கு அவருடைய பத்திரிகையாளர் பணி அவருக்கு பெரிதும் உதவியது. இதைதான் மதவாதிகள் ‘பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ என்று திரித்து சொல்கிறார்கள்.

 

இது போக சமஸ்கிருதம் கலந்து  எழுதியதாலும்,  சமஸ்கிருத ஆதரவாளர்கள் அவரை பெரிதும் “புதுமையானவர், இதுவரை தமிழை இவ்வளவு எளிமையாக யாரும் எழுதியதில்லை” என்று திட்ட மிட்டு  பாராட்டினார்கள்.

 அந்தக் காலததில் இருந்து இந்த காலம் வரை அவர்களிடம்தானே முக்கியமான பத்திரிகைகள் இருக்கிறது, அல்லது பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.

 

 

ஆக பாரதிதான் எளிய மக்களிடம் கொண்டுசென்றான் என்பது உண்மையல்ல. நீதிகட்சியின் ஆட்சிக்கு பிறகுதான் எளிய மக்கள் எழுத படிக்கவே ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பாரதி கவிதைகளையும் படித்தார்கள், என்பதுதான் உண்மை.

 

 பாரதி, பாரதிய ஜனதாவின் முன்னோடி என்று எழுதிய உங்கள் நூலுக்கு மறுப்பு புத்தகங்கள் வந்திருக்கிறதே. அவைகள் உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?

 

 இல்லை. அந்த புத்தகங்கள் நாம் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், சொன்னவற்றையே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள். அவை என் கவனத்தை கவரவில்லை.

 

என் புத்தகம் பாரதியை ஆதரிக்கிற முற்போக்காளர்களை நோக்கிதான். என் புத்தகத்தால் பாதிக்கப்பட்ட தன்னை முற்போக்காளர்களாக நினைத்துக் கொண்டிருக்கிற பாரதி ஆதரவாளர்களில் சிலர் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுதப்பட்ட புத்தகங்கள் அவை.

 

 தமிழர் திருநாள் பொங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கவும், தகர்க்கவும் வேண்டிய ஒன்று. இதற்காக பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான விழாவல்ல என்றும் நீங்கள் அண்மையில் எழுதியிருப்பது தமிழ் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் நீர்க்க அடித்து வீடாதா?

 

 தமிழர்களுக்கு என்று தனி கலாச்சாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆச்சாரம்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு வழக்கம்.

இதை மீறி தமிழர்களுக்கு என்று தனியான ஒரே பொது அடையாளம் மொழி மட்டும்தான்.

 

ஜாதிரீதியான ஏற்றத் தாழ்வுகள் அற்று எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதைதான் நாம் தமிழர் அடையாளம் என்று சொல்லமுடியும்.

ஆனால் பொங்கலும் அப்படியில்லை.

பொங்கல் விவசாயிகளின் திருநாள் என்பது உண்மைதான். நிலம் உடைய விவசாயிகள் விசேஷமாக கொண்டாட, நிலமற்ற விவசாயிகள் உறுதுணையாக இருக்கிற விழாவாகத்தான் பொங்கல் இருக்கிறது.

 

ஆண்டையிடம் கைகட்டி ‘இனாம்’ வாங்கி கொண்டாட வேண்டிய அவல நிலையில்தான் தாழ்த்தப்பட்ட தமிழர்களை இதர தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்.

 

ஏற்றத் தாழ்வுகள் அற்ற பொங்கல் கொண்டாட வேண்டுமென்றால், விவசாயத்தில் 99 சதவீதம் தங்கள் உழைப்பை செலுத்துகிற விவசாயிகளான நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமாக என்று நிலம் கிடைக்கிறதோ, அன்றுதான் பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களின அடையாளமாக அறியப்படும்.

 

அதுவரை அரசு நடத்துகிற ‘சுற்றுலாபொருட்காட்சி’தான் பொங்கலை விட சிறந்த ‘தமிழர்திருவிழா’ என்பேன்.

 

 

 

 

 

 

 

 

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

8 Responses to ‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’

 1. அதி அசுரன் சொல்கிறார்:

  ///‘சுற்றுலாபொருட்காட்சி’தான் பொங்கலை விட சிறந்த ‘தமிழர்திருவிழா’ என்பேன்.///

  மிகச்சரியானகருத்து தோழர்

 2. அன்பன் சொல்கிறார்:

  நான் அதி அசுரனின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

  ››தமிழர் திருநாள் பொங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கவும், தகர்க்கவும் வேண்டிய ஒன்று››››

  பொங்களில் என்று தவறாக எழுதியுள்ளீர்கள் நண்பரே…! தவறை சுட்டிக் காட்டுபவனே நல்ல நண்பன் என்பார்கள். நான் சுட்டிக்காட்டி நிரூபித்து விட்டேன்தானே!

 3. sundharabuddhan சொல்கிறார்:

  pl. write critics about the recent tamil cinemas. i read this interview, fine and clarity. some sharp comments on pongal, its differs from others. i congratulate your writings.

  sbuddhan

 4. Nanjil AP சொல்கிறார்:

  மிகவும் அறிவுபூர்வமான ஒரு சமுதாய, சரித்திர அலசல். நல்ல தகவல்கள் உள்ளடங்கி உள்ளது.

  நன்றி உரித்தாகுக

  நாஞ்சில் பீற்றர்
  மெரிலாண்ட்
  http://www.thirukkural2005.org

 5. k.murali சொல்கிறார்:

  SUPER ANSWERS!

 6. ytr சொல்கிறார்:

  Even Baratidasan Learnt tamil from Barathi, there is no reason you comparing a student with his teacher, somtime a student might outperform his teacher.

  i also learrnt from the posts that you have written somebooks abt this..well
  Better try your luck next time

 7. அந்தமான் தமிழ் நெஞ்சன் சொல்கிறார்:

  உங்களின் கருத்துகளை முதன் முதலாய் படித்தேன். பாரதி மற்றும் பாரதிதாசன் பற்றிய இப்படி ஒரு கோணம் இருப்பதை உணர முடிந்தது. உங்களின் சகருத்துகள் சிந்திக்க வைக்கின்றன். நாம் அந்தமானில் வாராவாரம் சனிக்கிழமைகளில் தமிழ் இலக்கிய மன்றம் என்ற குடையின் கீழ் விவாதிக்கிரறோம். உங்களின் கருத்துகளை இந்தவார கூட்டத்தில் வைக்கிறேன்.

 8. Pingback: தேசத் துரோகி – குருத் துரோகி பாரதிதாசனும் தேசப்பக்த அறிஞர்களும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s